யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அதே ChatGPT ‘சுனிதா வில்லியம்ஸ் சைவம் அல்ல என்றும், அவர் இறைச்சி மற்றும் பிற அசைவ உணவுகளை விருப்பத்துடன் உண்பவர்’ என்ற பதிலையும் அளித்திருக்கிறது.
பரவிய செய்தி
அதாவது பாத்தீங்கன்னா! நம்ம அவங்க Beef சாப்பிடறாங்கன்னு குதூகலிச்சோம்; கடைசில பாத்தா அவங்க அசைவமே சாப்பிட மாட்டாங்களாம். Even during her space missions! புரியுதா? தேவையா இந்த? @THE_INDRA_KUMAR ?

விரிவான விளக்கம்
ஒன்பது மாதங்களாகச் சர்வதேச விண்வெளி மையத்தில் (ISS) இருந்த நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் மார்ச் 19ஆம் தேதி பூமிக்குத் திரும்பினார்கள். சுனிதா வில்லியம்ஸ் இந்தியாவைப் பூர்வீகக் கொண்டவர் என்பதால் அவரது வருகையை இந்தியர்கள் கொண்டாடினர். அதேவேளையில் சுனிதா வில்லியம்ஸை இந்து மதத்துடன் தொடர்புப்படுத்தும் பல்வேறு பதிவுகளை பாஜகவினர் சமூக வலைத்தளத்தில் பரப்பிவருகிறார்கள். இந்நிலையில் பாஜகவின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் S.G.சூர்யா தனது அதிகாரப்பூர்வ ’எக்ஸ்’ தளத்தில், ‘செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப மென்பொருளான ‘ChatGPT’யை ஆதாரமாகக் காட்டி, விண்வெளியில் இருந்தபோது கூட சுனிதா வில்லியம்ஸ் சைவ உணவு மட்டுமே உண்டதாக’ பதிவிட்டிருந்தார்.
உண்மை என்ன?
சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி மையத்தில் இருந்த நாட்களில் என்ன மாதிரியான உணவுகள் உட்கொண்டார் என்பது குறித்து இணையத்தில் தேடினோம்.
‘NDTV’ வெளியிட்டுள்ள செய்தியில், ‘சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் மீன் கறி உட்கொள்ளவிருக்கும்’ தகவலை நாசா உறுதிப்படுத்தியதாகக் குறிப்பிடுகிறது.

அவர் விண்வெளி மையத்தில் இருந்தபோது பீட்சா, வறுத்த கோழி, இறால் ஆகியவை உண்டதாகவும் செய்தி ஆதாரங்கள் குறிப்பிடுகிறது. மேலும், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் 288 நாட்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்தபோது, பூமியிலே சமைக்கப்பட்ட விலங்கு இறைச்சியும், முட்டையும் உணவாக இருந்ததாகக் குறிப்பிடுகிறது.
மேலும், ChatGPTயில் தான் கேட்ட அதே கேள்வியைக் கேட்டு பின்னர் பதிவிடுங்கள் என்று S.G.சூர்யா YouTurn-னிடம் சவால் விட்டிருந்தார்.
அந்த சவாலை ஏற்று, YouTurn அணி தனது சொந்த முயற்சியில் ChatGPTயில் ‘sunita williams astronaut a vegetarian by diet?’ என்ற கேள்வியைச் சோதித்துப் பார்த்தோம். ‘சுனிதா வில்லியம்ஸ் சைவம் அல்ல என்றும், அவர் இறைச்சி மற்றும் பிற அசைவ உணவுகளை விருப்பத்துடன் உண்பவர் என்றும் பதில் கிடைத்தது.
S.G.சூர்யா பயன்படுத்திய போது, ChatGPT ’சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்தபோது கூட சைவ உணவு மட்டுமே உண்டதாக’ குறிப்பிடப்பட்டதற்கான காரணம் என்ன ?
கடந்த 2023ஆம் ஆண்டு அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் ஒன்றில் வழக்கு ஒன்றுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வாதத்தில் ChatGPTயால் உருவாக்கப்பட்ட 6 வழக்குகள் இடம்பெற்றிருந்ததை நீதிபதி கண்டுபிடித்தார். இப்படியான வழக்குகளோ அதற்கு அளிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் தீர்ப்புகளோ ஏதுமில்லை என்று சொல்லப்பட்டது. இல்லாத வழக்குகளை ChatGPT உருவாக்கியிருப்பது பின்னர் தெரியவந்தது.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (AI) மீப்பெருமளவிலான தகவல்களைக் கொண்டு பயிற்றுவிக்கப்படுகிறது. பயனர்களால் அழுத்தமாகக் கேள்விகள் கேட்கப்படும் போது, இந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப மாதிரிகள் இதுவரை இல்லாத புதிய தகவல்களை உருவாக்குகிறது. பயனர் கேட்கும் கேள்விக்குப் பதிலளிக்க தன்னிடம் இருக்கும் தகவல்கள் போதாமையாக இருக்கும் போது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் இந்த இடைவெளியைப் பூர்த்தி செய்யும் விதமாக புதிய தகவல்களை உருவாக்குகிறது. இதனை ‘AI Hallucination’ என்று அழைக்கிறார்கள்.
இதைப் பற்றியெல்லாம் எந்தப் புரிதலும் இல்லாமல் வெறுமனே ’ChatGPT’ என்னும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப மாதிரியின் பதிலையே முழுமையான ஆதாரமாக ஏற்றுக்கொள்ளும் படி சொல்கிறார் S.G.சூர்யா.

Fact-check என்பது ’ChatGPT’ அளிக்கும் பதிலை அப்படியே பதிவிடுவது அல்ல. அது நம்பத்தகுந்த அதிகாரப்பூர்வமான ஆவணங்களில் இருந்து உண்மையை கண்டறிவதாகும். Grok என்னும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப மாதிரியிடம் தமிழ்நாட்டில் போலிச் செய்திகளைப் பரப்புபவர்களின் பட்டியலைக் கேட்டபோது S.G.சூர்யா-வின் பெயரும் வந்தது.
மேற்குறிப்பிட்ட விளக்கங்களிலிருந்து பாஜகவின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் S.G.சூர்யா சுனிதா வில்லியம்ஸ் சைவ உணவு மட்டுமே உண்பதாக சொல்வது தவறாக கருந்து என்பது தெளிவாகிறது.
முடிவு:
விண்வெளியில் இருந்தபோது கூட சுனிதா வில்லியம்ஸ் சைவ உணவு மட்டுமே உண்டதாக தவறாக தகவலை பாஜக மாநிலச் செயலாளர் S.G.சூர்யா சமூக வலைத்தளங்களில் பரப்பிவருகிறார்.