யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்து பெண்களை வன்புணர்வு செய்துவிட்டு அவர்களின் உள்ளாடைகளைக் கையில் வைத்து புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர் எனப் பரவும் வதந்தி.
பரவிய செய்தி
பங்களாதேஷில் உள்ள இந்துப் பெண்களும் உள்நாட்டுக் கலவரம் ஏற்பட்டுள்ள வங்காளதேசத்தில் தொடர்ச்சியாக அடையாளப்படுத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டு கற்பழிக்கப்படுகின்றனர்.
விரிவான விளக்கம்
வங்கதேசத்தில் கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் சிவில் சர்வீஸ் வேலைகளுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கையுடன் மாணவர்களின் போராட்டம் தொடங்கியது. போராட்டம் அசாதாரண சூழலை எட்டியதைத் தொடர்ந்து அந்நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டிலிருந்து தப்பித்தார்.
இந்நிலையில் வங்கதேசத்தில் உள்ள இந்து பெண்கள் வன்புணர்வு செய்யப்படுவதாகப் வலதுசாரிகளால் சமூக வலைத்தளத்தில் ஒரு தகவல் பரப்பப்படுகிறது. அப்பதிவில் உள்ள படத்தில் பெண்களின் உள்ளாடையை ஒருவர் கையில் வைத்துள்ளார். இது இந்து பெண்களின் உள்ளாடை என்றும் அவர்களை பாலியல் வன்புணர்வு செய்வதற்காக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரவக்கூடிய புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடியதில், இப்புகைப்படத்துடன் ’The Times Of India’ தளத்தில் கடந்த 6ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டு இருப்பதைக் காணமுடிகிறது.
வங்கதேசத்தில் நிலைமை மோசமானதைத் தொடர்ந்து அந்நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டிலிருந்து தப்பினார். போராட்டக்காரர்களில் ஒரு குழுவினர் அவரது மாளிகைக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை மட்டுமின்றி முயல், வாத்து, மீன் போன்றவற்றையும் எடுத்துச் சென்றனர்.
அதில் சிலர் ஷேக் ஹசீனாவின் உடைகளை எடுத்துச் சென்றுள்ளனர். இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு விமர்சிக்கப்பட்டு வந்தது. அப்புகைப்படத்தினைதான் இந்து பெண்கள் வன்புணர்வு செய்யப்படுவதாகவும் அவர்களின் உள்ளாடையை ஒருவர் கையில் வைத்துள்ளதாகவும் தவறான தகவலுடன் பரப்பப்படுகிறது.
இதுதொடர்பான செய்தி ‘Hindustan’ என்ற தளத்திலும் வெளியாகியுள்ளது. இவற்றிலிருந்து பரவக்கூடிய ஆடைகள் ஷேக் ஹசீனாவின் மாளிகையிலிருந்து திருடப்பட்டவை என்பதை அறியமுடிகிறது.
வங்கதேசத்தில் நடக்கும் சம்பவங்களுடன் தொடர்புப்படுத்திப் பல தவறான செய்திகள் பரப்பப்படுகிறது. அது குறித்த உண்மைகள் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.
முடிவு:
வங்கதேசத்தில் இந்து பெண்கள் அடையாளம் காணப்பட்டு வன்புணர்வு செய்யப்படுவதாகவும் அவர்களின் உள்ளாடைகளுடன் சிலர் புகைப்படம் எடுத்துக் கொள்வதாகவும் பரவும் புகைப்படம் குறித்த தகவல் தவறானது. அது வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மாளிகையிலிருந்து திருடப்பட்ட உடைகள்.