யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அப்படி எந்த அரசாணையும் வெளியிடவில்லை என வங்க தேச அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
பரவிய செய்தி
வங்கதேசத்தில் அரசு வேலைகளில் ஹிந்துக்களுக்குத் தடை. - துக்ளக் (15.01.2025)

விரிவான விளக்கம்
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக இனவெறி தாக்குதல் நடப்பதாகப் பல பொய் செய்திகள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. அப்படிப் பரப்பப்பட்ட பொய் செய்திகள் பற்றிய உண்மைகள் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் வங்கதேச அரசு இந்துக்களுக்கு எதிராக அரசாணை ஒன்று பிறப்பித்துள்ளதாக துக்ளக் இதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ’15.01.2025’ தேதியிட்ட இதழின் 3ம் பக்கத்தில் ‘வங்கதேசத்தில் அரசு வேலைகளில் ஹிந்துக்களுக்குத் தடை’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட செய்தியில், ”வங்க தேசம் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடு. எனவே, காவல்துறை அல்லது அரசு வேலை எதுவாக இருந்தாலும், முஸ்லிம்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்” என்று அந்நாட்டு அமைச்சர் ஜஹாங்கீர் ஆலம் சௌத்ரி தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும் அதில், ”காவல் துறையில் கான்ஸ்டபிள் தொடங்கி எந்தப் பதவியிலும் ஹிந்துக்கள் சேருவதைத் தடுக்கும் அரசாணை பிறப்பிக்கப்பட்டு, அதன் கீழ் 1,500-க்கும் மேலான ஹிந்துக்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. நியமனம் பெற்ற 100 ஹிந்துக்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. துக்ளக் வெளியிட்ட இச்செய்தியின் கீழே, ‘Times AlgebraI’ என்ற எக்ஸ் இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்ற செய்தியை Republic Bharat, India.com, ABP Live போன்ற ஊடகங்களிலும் வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது.
உண்மை என்ன?
மேற்கண்ட ஊடகங்கள் வெளியிட்ட செய்தி உண்மையா என்பதை அறிய வங்கதேச அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை ஏதும் வெளியிட்டுள்ளதா என ஆய்வு செய்தோம். அந்நாட்டு அரசின் தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் இது தொடர்பாக வெளியாகவில்லை.
வங்கதேச அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் செயல்பட்டு வருகிறார். இந்த ஆலோசனை குழுவின் கீழ் இயங்கக்கூடிய உண்மை சரிபார்ப்பு பக்கத்தில் மேற்கண்ட செய்தி உண்மை அல்ல எனக் கடந்த 2ம் தேதி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், ’Times AlgebraI என்ற எக்ஸ் பக்கம் வெளியிட்ட செய்தி முற்றிலும் தவறானது. பங்களாதேஷ் அரசாங்கம் மதத்தின் அடிப்படையில் எந்தக் குடிமகனுக்கும் எதிராகப் பாகுபாடு காட்டுவதில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து இந்துக்களை அரசு பதவிகளிலிருந்து அப்புறப்படுத்த ஏதுவாக வங்கதேச அரசு அரசாணை வெளியிட்டதாகப் பரவிய செய்தி பொய் என்பதை அறிய முடிகிறது. வங்க தேச அரசு விளக்கம் அளித்த நிலையில், Times Algebra-வின் பதிவு குறித்து முன்னரே யூடர்ன் ஆங்கில தளத்தில் கட்டுரை வெளியிட்டுள்ளோம். இருப்பினும் மதப் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் துக்ளக் ஒரு பொய்யான செய்தியை பரப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முடிவு:
வங்கதேசத்தில் அரசு வேலைகளில் இந்துக்களுக்குத் தடை விதிக்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக துக்ளக் வெளியிட்ட செய்தி தவறானது. அப்படி எந்த அரசாணையும் வெளியிடவில்லை என வங்க தேச அரசு அதிகாரப்பூர்வ பக்கத்தில் தெரிவித்துள்ளது.