யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அரியலூர் மாணவி லாவண்யாவை, மதம் மாறச் சொல்லி தொடர்ந்து வலியுறுத்தியதால் தான் தற்கொலை செய்து கொண்டார் என பரப்பும் செய்திகள் தவறானவை என சிபிஐ விளக்கமளித்துள்ளது
பரவிய செய்தி
தாய்மதம் காக்க கிறிஸ்துவ மதம் மாற மறுத்து உயிர் நீத்த அரியலூர் செல்வி லாவண்யா கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் ஆசை காட்டி அச்சுறுத்தி ஏமாற்றி கிறிஸ்தவராக மதம் மாறினால் சலுகை என்றெல்லாம் முயற்சித்தார்கள்! கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை அரசுடமையாக்க வேண்டும். 4ம் ஆண்டு நினைவு நாள்.
விரிவான விளக்கம்
கடந்த 2022 ஆம் ஆண்டு தஞ்சையை அடுத்துள்ள மைக்கேல்பட்டி தனியார் கிறிஸ்தவ பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த அரியலூரை சேர்ந்த பிளஸ்-2 மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டார்.
அவர் இறந்து நான்கு ஆண்டுகள் ஆகியுள்ளநிலையில், தற்போது இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், தாய்மதம் காக்க கிறிஸ்துவ மதம் மாற மறுத்து உயிர் நீத்த அரியலூர் செல்வி லாவண்யா என்று குறிப்பிட்டு, அவருக்கு நினைவஞ்சலிகள் என்றும் குறிப்பிட்டு தனது பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
#தாய்மதம் காக்க #கிறிஸ்துவ மதம் மாற மறுத்து உயிர் நீத்த அரியலூர் செல்வி #லாவண்யா
கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் ஆசை காட்டி அச்சுறுத்தி ஏமாற்றி கிறிஸ்தவராக மதம் மாறினால் சலுகை என்றெல்லாம் முயற்சித்தார்கள்!
கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை அரசுடமையாக்க வேண்டும்
4ம் ஆண்டு நினைவு நாள் pic.twitter.com/gxb3iyMBpw
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், அரியலூரைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி லாவண்யா நீதிபதியிடம் அளித்த மரண வாக்குமூலத்தில் அப்படியேதும் கூறவில்லை என்பதை செய்திகளின் மூலம் அறிய முடிந்தது.
“வாக்குமூலத்தில், மாணவி தங்கிப் படித்த விடுதியில் இருந்த சகாய மேரி என்ற வார்டன், இந்த மாணவியை கணக்கு எழுதும்படி தொடர்ந்து துன்புறுத்திவந்ததாகவும், படிக்க விடாமல் கொடுமைப்படுத்தியதாகவும் கூறியிருக்கிறார். ஏதாவது பொருட்கள் காணாமல் போனால், தன்னை சந்தேகப்பட்டு திட்டுவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
இந்த முறை கிறிஸ்துமஸ் விடுமுறைக்கும் வீட்டுக்கு அனுப்பாமல் கணக்கு வழக்குகளைப் பார்க்கச் சொன்னதாகவும், இந்தக் கொடுமை தாங்காமல்தான் தான் 9ஆம் தேதியன்று மாலை விடுதியில் இருந்த களைக்கொல்லி மருந்து எடுத்து சாப்பிட்டுவிட்டதாக மாணவி கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது” என்பதை செய்திகளின் மூலம் அறிய முடிந்தது.
மேலும் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்த நிலையில், “வழக்கு தொடர்பாக 141 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு, 265 ஆவணங்கள், 7 பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. நன்கு படிக்கும் லாவண்யாவை பிற வேலைகளை செய்ய அறிவுறுத்தியதால் கல்வியில் பின்தங்கும் நிலை ஏற்பட்டது. மாணவியை பிற வேலைகள் செய்யுமாறு அறிவுறுத்தியதால், அவர் தற்கொலை செய்துள்ளார். அதற்கான ஆவணங்கள் உள்ளன. ஆனால், மதமாற்றம் செய்ய எந்த முயற்சியும் நடைபெறவில்லை” என்றும் விளக்கம் அளித்துள்ளது.
இதை மற்ற ஊடகங்களில் வெளியிடபட்டுள்ள செய்திகளின் மூலமும் உறுதிபடுத்த முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், அரியலூர் மாணவி லாவண்யாவை, மதம் மாறச் சொல்லி தொடர்ந்து வலியுறுத்தியதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என அர்ஜூன் சம்பத் பரப்பும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.