யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த வீடியோவிற்கு ‘டிக்கெட் எல்லாம் Free’ என்று திரிக்கப்பட்ட (Misleading) வகையில் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
பரவிய செய்தி
சிவராத்திரியை தடுக்க சதி! அமித்ஷா வராரு! டிக்கெட் எல்லாம் Free! Isha Mahashivratri 2025

விரிவான விளக்கம்
ஆண்டுதோறும் ஈஷோ யோக மையத்தில் மகா சிவராத்திரி நிகழ்வு நடந்து வருகிறது. இந்த ஆண்டு மகா சிவராத்திரி நிகழ்வு 2025 பிப்ரவரி 26ஆம் தேதி நடந்தது. இந்த நிகழ்வில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் கலந்து கொள்பவர்களிடம் கட்டணமாக அதிக தொகை வசூலிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறிந்து ’Einstein & Agathiyar’ என்ற யூட்யூப் சேனல் விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதில், ‘ஈஷாவில் கொண்டாடப்படும் மகா சிவராத்திரி என்பது Elite people-க்கான ஷோ. பணம் உள்ளவர்கள்தான் இதில் கலந்துகொள்ள முடியும் என்று ஊடகங்கள் பிரச்சாரம் செய்கின்றனர். ஈஷா வலைதளத்தில் மகா சிவராத்திரி நிகழ்விற்கான ‘Seating Layout’-ல் கொடுக்கப்பட்டுள்ள படி இடதுபுறம் உள்ள எல்லா இருக்கைகளும் ’complimentary’. அவை எதுவும் ’Paid Seats’ கிடையாது. அதாவது அந்த இருக்கைகளில் பணம் செலுத்தாமலே அமரலாம். வலதுபுறம் உள்ள இருக்கைகள் பணம் கொடுத்து அமரும் paid seats ஆகும். இது மொத்த இருக்கைகளில் வெறும் 20 முதல் 30 சதவீதம் வரை மட்டுமே இருக்கும். மீதமுள்ள 70 முதல் 80 சதவீத இருக்கைகள் பணம் ஏதும் செலுத்த தேவையில்லாத இலவசம் வகையை சேர்ந்தது’ என்று இந்த வீடியோவில் சொல்லப்படுகிறது.
உண்மை என்ன?
மகா சிவராத்திரி நிகழ்விற்கான ’Seating Layout’ ஈஷா மையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கோதாவரி, கங்கை, யமுனா, காவிரி என்று நதிகளின் பெயர்களைக் கொண்டு இருக்கைகளின் வரிசைகள் பிரிக்கப்பட்டிருக்கிறது.

அதில், ’Einstein & Agathiyar’ யூட்யூப் சேனலின் வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது போல இந்த ’Seating Layout’-ல் ’complimentary’ என்று எந்த இருக்கைகளும் ஒதுக்கப்படவில்லை. ’complimentary’ என்ற வார்த்தையே அதில் இல்லை.
மேலும், ’Complimentary ticket’ தொடர்பாக YouTurn ஈஷாவைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஈஷாவால் அழைக்கப்படும் விருந்தினருக்கு மட்டுமே Complimentary ticket வழங்கப்படும் என்றும் மற்றவர்கள் பணம் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டது.

50,000 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை பல்வேறு படிநிலைகளில் கட்டணத்திற்கு ஏற்ப மேடைக்கு அருகிலும் தொலைவிலும் இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதிக கட்டணத் தொகையுள்ள இருக்கைகள் மேடைக்கு மிக அருகில் உள்ளது.
’தாமிரபரணி’ என்ற பிரிவில் இலவச இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதை இந்த ’Seating Layout’-ல் காண்கிறோம். ஆனால் இந்த இருக்கைகள் விழா மேடை மற்றும் ஜக்கி வாசுதேவ் நடந்து வந்து கூட்டத்துடன் உரையாடும் ’Ramp’ ஆகியவற்றில் இருந்து வெகு தொலைவில் உள்ளது. தெளிவாக சொல்ல வேண்டுமானால், இலவச இருக்கைகள் உள்ள இந்த பிரிவு ஓரமாக வைக்கப்பட்டுள்ளது. இந்த விழா நடத்துவதற்காக வேலை செய்யும் தன்னார்வலர்களுக்கான (Volunteers) இருக்கைகளும் இறுதி வரிசையில் ஓரமாக வைக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து கட்டணத் தொகையை (பணத்தை) அடிப்படையாகக் கொண்டு படிநிலை வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்பது உறுதியாகிறது. அதேபோல் 70 சதவீதம் இலவச இருக்கைகள் இருப்பதாகவும் சொல்லப்பட்டது பொய்யான தகவல். மேலும், இந்த வீடியோவிற்கு ‘டிக்கெட் எல்லாம் Free’ என்று திரிக்கப்பட்ட (Misleading) வகையில் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
முடிவு:
இந்த வீடியோவில் காட்சிபடுத்தப்படும் ’Seating Layout’ ஈஷா மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள டிக்கெட்கள் குறித்தான படத்திலிருந்து மாறுபட்டுள்ளது. மேலும் இந்த வீடியோவில் காட்டப்பட்ட படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள Complimentary என்ற வார்த்தை ஈஷா மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. எனவே 70 சதவீத இலவச இருக்கைகள் இருப்பதாக சொல்லப்பட்டது தவறான தகவலாகும்.