யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சிக்கந்தர் தர்கா பற்றிய சர்ச்சையின் போது பேசிய இஸ்லாமிய பெண் 'சங்கிகள், விஷக் கிருமிகள்' என்று கூறியதை திரித்து 'இந்து விஷக் கிருமிகள்' என்று சொன்னதாக தவறாக பரப்பப்படுகிறது.
பரவிய செய்தி
“இந்து விஷக் கிருமிகள் திருப்பரங்குன்றம் மலையை ஆக்கிரமித்து விட்டார்கள்" என்று பேசும் ஒரு இஸ்லாமிய பெண். எப்டி எப்டி??? இந்துக்கள் நாங்க ஆக்ரமிச்சோமா??? நேத்து வந்த மதத்துக்கு மாறுனதுக்கு திமிர பாத்தியா.

விரிவான விளக்கம்
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் இஸ்லாமியர்களின் வழிபாட்டு உரிமைகள் மறுக்கப்படுவது குறித்து இஸ்லாமிய பெண் ஒருவர் அளித்த பேட்டியின் போது எடுக்கப்பட்ட ஒரு சின்ன வீடியோ துணுக்கை (small clip of video) மட்டும் பதிவிட்டு, அதில் அந்த இஸ்லாமிய பெண் 'இந்து விஷக் கிருமிகள் திருப்பரங்குன்றம் மலையை ஆக்கிரமித்து விட்டார்கள்' என்று பேசுவதாக சமூக வலைதளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன:
பரப்பப்படும் வீடியோ துணுக்கின் Keyframe-களைக் கொண்டு தேடியதில், அந்த இஸ்லாமிய பெண் பேசிய முழு வீடியோ பேஸ்புக் தளத்தில் காணக்கிடைத்தது.
அதில் அந்தப் பெண், 'இந்தியா முழுவதும் நடக்கும் ஒரு பிரச்சினையை இப்போது தமிழ்நாட்டிற்கும் கொண்டு வருகிறார்கள். இங்கே தமிழ்நாட்டில் நாங்கள் சகோதரத்துவத்தோடு, மத நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகிறோம். ஆனால் இங்கே வழிபாட்டு தளங்களில் வழிபட தடை செய்கிறார்கள்... வட நாட்டை போல் இஸ்லாமியர்களை பிரித்துப் பார்க்கும் வழக்கம் இங்கே கிடையாது. இது பெரியார் மண். இது அம்பேத்கர் மண். இங்கே சமத்துவம் தான் நிலவுகிறது. ஆனால் எங்களை பிளவு படுத்த சில சங்கிகள் இதுபோன்ற செயல்களை செய்து கொண்டிருக்கிறார்கள். சில விஷக் கிருமிகள் ஊடுருவி திருப்பரங்குன்றம் மலையில் உள்ள பழைமையான சிக்கந்தர் தர்காவை என்ன செய்ய நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. இதற்கான தீர்வை இந்த மாநில அரசு கொடுக்க வேண்டும்' என்று பேசியிருந்தார்.
மேற்குறிப்பிட்டுள்ள அந்த இஸ்லாமிய பெண்ணின் உரையை கவனிக்கும் போது, அவர் இந்துகள் என்று பொதுவாக எதுவும் குறிப்பிடவில்லை. இந்து-முஸ்லிம் மத நல்லிணக்கத்தை கெடுக்க நினைக்கும் நபர்களை 'சங்கி' என்றும் 'விஷக் கிருமிகள்' என்றும் குறிப்படுவதை அறிய முடிகிறது.
மேலும், இந்த சிக்கந்தர் தர்கா பற்றிய சர்ச்சையின் பின்னணி பற்றி தேடிய போது, 'News7 Tamil' செய்தித்தளம் வெளியிட்டிருந்த செய்தி ஒன்றைக் காணமுடிந்தது.
அதன்படி, சமீபத்தில் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த சையது அபுதாகிர் (53) திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சிக்கந்தர் பாதுஷா சமாதியில் கந்தூரி கொடுப்பதற்கு ஆட்டு கிடாய் கொண்டு வந்ததாகவும், அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் அவரை தடுத்து ஆட்டு கிடாயுடன் செல்ல அனுமதி இல்லை என்று கூறியதாகவும், இதனை கண்டித்து 300க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும் தெரிய வருகிறது.
மேலும், 2023ஆம் ஆண்டில் 'திருப்பரங்குன்றம் மலையின் மேல் உள்ள நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்களின் தொழுகை உள்ளிட்டவற்றை செய்ய தடை விதித்து உத்தரவிட வேண்டும்' என்று கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.
2023 ஜீன் 28 அன்று இதனை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றக் கிளை, திருப்பரங்குன்றம் மலையின் மேல் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான சர்ச்சைகளின் பின்னணியில் இஸ்லாமிய பெண் ஒருவர் பேட்டி அளிக்கும் போது, 'சங்கிகள், விஷக் கிருமிகள்' என்று கூறியதை திரித்து 'இந்து விஷக் கிருமிகள்' என்று சொன்னதாக தவறாக பரப்புகின்றனர்.
முடிவு:
திருப்பரங்குன்றம் மலையின் மீதுள்ள சிக்கந்தர் தர்கா பற்றிய சர்ச்சையின் போது பேசிய இஸ்லாமிய பெண் 'சங்கிகள், விஷக் கிருமிகள்' என்று கூறியதை திரித்து 'இந்து விஷக் கிருமிகள்' என்று சொன்னதாக மதப் பிரிவினைவாத கண்ணோட்டத்தில் தவறாக பரப்புகின்றனர்.