யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வங்கதேசத்தில் இந்துப் பெண்களை மதம் மாற்றுவதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவிய செய்தி
இந்துக்களை மதம் மாற்றும் கொடுமை..
விரிவான விளக்கம்
சமீபத்தில் வங்கதேசத்தில் நடைபெற்ற வன்முறையில் இதுவரை 650 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து வன்முறை தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஐநாவின் நிபுணர்குழு நேற்று (ஆகஸ்ட் 22) வங்கதேசத்துக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வங்கதேசத்தில் இந்துப் பெண்களை மதம் மாற்றுவதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பரவி வரும் வீடியோவில், பெண் ஒருவரை சுற்றி பல பெண்கள் சூழ்ந்து தாக்குவதைக் காணமுடிகிறது.


உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீஃபிரேம்களை “Google Reverse Image Search” மூலம் ஆய்வுசெய்து பார்த்ததில், ‘Every 10’ யூடியூப் பக்கத்தில் ஆகஸ்ட் 08 அன்று இதே வீடியோ "சத்ரா லீக் தலைவர் பிரமன்பரியா" என்று குறிப்பிட்டு பதிவிடப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது.

இதுதொடர்பாக மேலும் ஆய்வு செய்ததில், ‘Shohanur Rahman’ என்பவரின் எக்ஸ் பக்கத்தில், பரவி வரும் வீடியோவில் இருக்கும் பெண்ணின் புகைப்படத்தைக் குறிப்பிட்டு, இவர் இந்து அல்ல முஸ்லிம். இவரின் பெயர் ‘Afsana Ebad’ என்று குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும் இந்த சம்பவம் பிரமன்பரியாவில் ஆகஸ்ட் 07 அன்று நடைபெற்றது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
The woman in the video is not Hindu but Muslim. Her name is Afsana Ebad. The incident happened on August 7 at Tanker Par, Brahmanbaria.
— Shohanur Rahman (@Sohan_RSB) August 11, 2024
The girl was assaulted as a Chhatra League worker. It is being said in a few Facebook posts that the girl was one of the attackers on student… pic.twitter.com/EkhKlqTOOG
இதே போன்று “Mohammad Mostafa” என்பவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பரவி வரும் பெண்ணின் புகைப்படத்தைக் குறிப்பிட்டு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், பரவி வரும் வீடியோவில் தாக்கப்பட்ட பெண்ணின் அடையாள அட்டையை ஒரு பெண் காட்டுகிறார். அதில் அந்த பெண் ஹிஜாப் அணிந்திருப்பதை தெளிவாகக் காணமுடிகிறது. மேலும் அடையாள அட்டையில் அந்த பெண்ணின் பெயர் அஃப்சானா இபாத் (আসসানা ইবাদ) என்று வங்காள மொழியில் குறிப்பிடப்பட்டிருப்பதையும் காணமுடிகிறது.

மேலும் மேற்கு வங்கத்தில் செயல்படும் 'Rumor scanner' என்ற தகவல் சர்பார்ப்பக (IFCN Certified Fact Checker) ஊடகப் பக்கத்திலும், "பரவி வரும் செய்திகள் தவறானவை. பரவி வரும் வீடியோவில் இருக்கும் பெண்ணின் புகைப்படத்தைக் குறிப்பிட்டு, இவர் முஸ்லிம் மதத்தைச் சார்ந்தவர் மற்றும் சத்ரா லீக் அமைப்பின் தலைவர்" என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர்.
இதன்மூலம் பரவி வரும் வீடியோவில் இருப்பவர் இந்து அல்ல, இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என்பதையும், அவரின் பெயர் அஃப்சானா இபாத் (Afsana Ebad) என்பதையும் தெளிவாக அறியமுடிகிறது.
முடிவு:
நம் தேடலில், வங்கதேசத்தில் இந்துப் பெண்களை மதம் மாற்றுவதாகக் கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதையும், பரவி வரும் வீடியோவில் இருப்பவர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர் என்பதையும் அறியமுடிகிறது.
