யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தலைமுடி நன்கு வளர புது உணவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவிய செய்தி
அங்க தொட்டு இங்க தொட்டு கடைசியாக நம்மகிட்டயே வந்துட்டானுங்க..
விரிவான விளக்கம்
தலைமுடி நன்கு வளர ஒரு புது உணவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கூறி 58 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவி வரும் வீடியோவில், தலைமுடியை போன்று கருப்பாக உள்ள ஒரு பொருளை தண்ணீரில் வேகவைத்து ஒருவர் ஆம்லேட் செய்வதையும், அதற்கு இடையில் காய்கறிகளை வைத்து, இறுதியில் தயார் செய்த உணவை பரிமாற வைப்பதையும் காணமுடிகிறது.
அங்க தொட்டு இங்க தொட்டு கடைசியா நம்மகிட்டயே வந்துட்டானுங்க 🤢 pic.twitter.com/LOIYASjVSn
— Sᴀᴛʜɪʏᴀɴ (@sathiyendra_m) August 7, 2024
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், டிக்டாக் பக்கங்களில் இதே வீடியோ வைரலாகப் பரவி வந்துள்ளதை அறியமுடிந்தது.

‘Kompas’ என்ற இந்தோனேசிய இணையதளப் பக்கத்தில் “முடியைப் போன்றே உள்ள ஃபேட் சோய் என்ற உணவைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்” என்ற தலைப்பில் பரவி வரும் வீடியோவைக் குறிப்பிட்டு கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
அதில், “ஃபேட் சோய் (Fat Choy) அல்லது கருப்பு பாசி என்பது சீனாவிலும் சிங்கப்பூரிலும் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான உணவாகும். பாசி வகையைச் சார்ந்த இது பெரும்பாலும் சீன புத்தாண்டின்போது அங்கு முக்கிய உணவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்த செடியானது வறண்ட சமவெளிகளில் வளரும். சமைக்கும்போது, இவை நூல் போலவும், கடற்பாசி சுவையுடனும் இருக்கும்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் ஆய்வு செய்ததில், ஃபேட் சோய் (Fat Choy) கருப்பு பாசியை சமைப்பதற்கு முன்பு எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும் என்பது குறித்து, ‘LifeWithEhly’ யூடியூப் பக்கத்தில் வீடியோ வெளியிடப்பட்டிருந்தது.
மேலும் பரவி வரும் வீடியோவைப் போன்றே, ஃபேட் சோய் (Fat Choy) பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட மற்ற உணவுகள் குறித்து ‘goodlifecookin’ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிடப்பட்டிருந்ததையும் காணமுடிகிறது.
இதன்மூலம் ஃபேட் சோய் (Fat Choy) அல்லது கருப்பு பாசி என்று சொல்லக்கூடிய ஒரு உணவுப் பொருளை, தலைமுடியில் உணவு சமைப்பதாகக் கூறி பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறியமுடிகிறது.
முடிவு:
நம் தேடலில், தலைமுடியில் உணவு சமைப்பதாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறியமுடிகிறது. பரவி வரும் வீடியோவில் இருப்பது தலைமுடி அல்ல. ஃபேட் சோய் (Fat Choy) அல்லது கருப்பு பாசி என்று சொல்லக்கூடிய ஒருவகை சீன உணவுப் பொருள்.
