யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த வீடியோவில் உள்ள காட்சிகள் உலகில் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு காலகட்டத்தில் நடந்த வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாகும்.
பரவிய செய்தி
26 அடி உயரத்தில் வந்த திடீர் வெள்ளத்தால் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் கடுமையான பாதிப்பு


விரிவான விளக்கம்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஜீலை 4ஆம் தேதி பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதில் 120க்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
இந்நிலையில் வெள்ளத்தில் வீடுகள் அடித்துச் செல்லப்படும் சில காட்சிகளை உள்ளடங்கிய வீடியோ ஒன்றை பதிவிட்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் 26 அடி உயரத்தில் பெரும் வெள்ளம் ஏற்படுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.
26 அடி உயரத்தில் வந்த திடீர் வெள்ளத்தால் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் கடுமையான பாதிப்பு 😥 pic.twitter.com/nC4e4kieBF
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவில் உள்ள காட்சிகளின் Keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடினோம். இந்த வீடியோவில் இருக்கும் வெள்ளம் பற்றிய காட்சிகள் வெவ்வேறு செய்திகளில் இடம்பெற்றிருப்பதைக் காண்கிறோம்.
‘The Sun’ என்ற இணைய செய்தித்தளத்தில் 2021 ஜீலை மாதம் வெளியான செய்தியின் படி, ஜப்பானில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலசரிவின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஆகும். இந்த வீடியோ காட்சி பரப்பப்படும் வீடியோவில் இருப்பதைக் காண்கிறோம்.

’Reuters’ செய்தி முகமையில் யூடியூப் தளத்தில் 2023 ஆகஸ்ட் மாதம் வெளியான வீடியோவில் வெள்ளம் காரணமாக கட்டிடம் இடிந்து விழுவதைக் காண்கிறோம். இது அமெரிக்காவில் அலாஸ்கா மாநிலத்தில் உள்ள ’மெண்டன்ஹால் நதியில்’ வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றொரு வீடியோக் காட்சி ‘Storm Center’ என்ற ‘எக்ஸ்’ பக்கத்தில் 2024 நவம்பர் மாதம் வெளியாகியிருப்பதை காண்கிறோம். அதில் இது ஸ்பெயின் நாட்டிலுள்ள மலகா பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

’Terry Barner’ என்ற யூடியூப் தளத்தில் 2022 ஜீன் மாதம் வெளியான வீடியோவில் வெள்ளம் காரணமாக கட்டிடம் ஒன்று இடிந்து விழுவதைக் காண்கிறோம். இது அமெரிக்காவில் உள்ள ’Yellowstone நதியில்’ வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட போது எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ’Radio 780 AM’ என்ற ‘எக்ஸ்’ தளத்தில் உள்ள பதிவில், 2024 ஜனவரி மாதத்தில் ‘Roi Namur island’ தீவில் சூறாவளி காரணமாக கடலில் ஏற்பட்ட பெரும் அலைகளால் வெள்ளம் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கூறிய விவரங்களிலிருந்து, இந்த வீடியோவில் உள்ள காட்சிகள் உலகில் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு காலகட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.
முடிவு:
உலகின் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு காலகட்டத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய வீடியோவை தற்போது அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வெள்ள ஏற்பட்டபோது எடுக்கப்பட்டது என்று தவறாக பரப்பப்படுகிறது.