யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஒரு குடும்பத்திற்குள் நிலத் தகராறு காரணமாக நிகழ்ந்த சம்பவம் இது. இதற்கு அரசியல் கட்சி பின்புலம் ஏதுமில்லை.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
நடுத்தர வயதுடைய நபர் ஒருவரை இளைஞர் ஒருவர் அருவாளைக் கொண்டு சரமாரியாக வெட்டுகிறார். பெண் ஒருவர் தடுக்க முயற்சித்தும், அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வெட்டுகிறார். பட்டப்பகலில் சாலையில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோவைப் பதிவிட்டு, ‘நாமக்கல் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர் இப்படியொரு வெறிச் செயலை செய்கிறார்’ என்று ‘எக்ஸ்’ தளத்தில் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன:
பரப்பப்படும் இந்த வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடுகையில், ’Thanthi TV’ யூட்யூப் பக்கத்தில் ”நடுரோட்டில் சித்தப்பாவை சரமாரியாக வெட்டிய மகன்” என்ற தலைப்பில் இதைப் பற்றிய செய்தியைக் காணமுடிந்தது.
இதன்படி, நாமக்கல் மாவட்டம் கதிராநல்லூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த குமரவேல் என்பவர் நிலப்பிரச்சனை காரணமாக தனது சொந்த சித்தப்பாவான கோபாலகிருஷ்ணனை அரிவாளால் வெட்டியுள்ளார் என்பது தெரிய வருகிறது.
இந்த கொலைவெறி தாக்குதலால் படுகாயமடைந்த கோபாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குற்றத்தை செய்த குமரவேலை காவல்துறை கைது செய்துள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், மேலும் தேடியதில் குமரவேல் அல்லது அவரது சித்தப்பா கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் ஏதுமில்லை.
இது ஒரு குடும்பத்திற்குள் நிலம் சம்பந்தமான தகராறு காரணமாக நிகழ்ந்த சம்பவம் என்பதும் இதற்கு அரசியல் கட்சி பின்புலம் ஏதுமில்லை என்பதும் தெளிவாகிறது.
முடிவு:
சொந்த உறவுகளுக்குள் நிலத் தகராறு காரணமாக நிகழ்ந்த இந்த கொலைவெறிச் சம்பவத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியோடு தொடர்புபடுத்தி தவறாக பரப்புகின்றனர்.
