யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அரங்கு பொறுப்பாளர் கையில் மூன்று 500 ரூபாய் நோட்டுகளை (1500 ரூபாய்) கே.என்.நேரு கொடுப்பதை வீடியோவில் காணமுடிகிறது.
பரவிய செய்தி
அடித்து பிடுங்குவதே திமுகவின் தொழில்..! அதையாச்சி கொடுத்தாங்களேன்னு சந்தோஷப்படு..! #DMKagainstTN #GetOutStalin @BJP4TamilNadu @annamalai_k @SuryahSG @MSBalajiMSB @MaheshBJPTN

விரிவான விளக்கம்
சத்யம் அக்ரோ கிளினிக் மற்றும் பசுமை விகடன் இணைந்து மார்ச் 7 முதல் 9ஆம் தேதி வரை திருச்சியில் மாபெரும் வேளாண் கண்காட்சி ஒன்றை நடத்தியது. இக்கண்காட்சியை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இந்தக் கண்காட்சியில் நவீன நீர்ப்பாசன சாதனங்கள், விதைப்பு மற்றும் நடவு கருவிகள், உழவு இயந்திரங்கள், மாடித்தோட்டத்திற்குத் தேவையான பொருட்கள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்தும் வகையில் 80க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அடித்து பிடுங்குவதே திமுகவின் தொழில்..!
அதையாச்சி கொடுத்தாங்களேன்னு சந்தோஷப்படு..!#DMKagainstTN #GetOutStalin @BJP4TamilNadu @annamalai_k @SuryahSG @MSBalajiMSB @MaheshBJPTN pic.twitter.com/H2020bsEPE
இந்நிலையில், இந்த கண்காட்சியில் கலந்துகொண்ட அமைச்சர் கே.என்.நேரு ஒரு அரங்கில் பொருட்கள் வாங்கும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, ’1500 ரூபாய் மதிப்புள்ள பொருளை 500 ரூபாய்க்கு வாங்கி அமைச்சர் நேரு கடைக்காரரை ஏமாற்றுகிறார்’ என்று பாஜகவை சேர்ந்தவரால் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பசுமை விகடன் யூட்யூப் பக்கத்தில் திருச்சி வேளாண் கண்காட்சி பற்றிய வீடியோவை சோதனை செய்தோம். 14.31 நிமிடங்கள் நீளமான அந்த வீடியோவில், 1.30 ஆவது நிமிடத்தில் பரப்பப்படும் காட்சி இடம்பெற்றிருக்கிறது.

இதனைக் கவனமாக ஆய்வு செய்கையில், அந்த குறிப்பிட்ட அரங்கை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிடும் போது ஒரு பொருளைச் சுட்டிக்காட்டி, அரங்கின் பொறுப்பாளரிடம் இது எவ்வளவு என்று கேட்கிறார். அரங்கின் பொறுப்பாளர் 1500 ரூபாய் என்கிறார். தனது கையில் இருக்கும் பணத்துடன் தனக்குப் பின்னால் இருக்கும் உதவியாளரிடமும் பணத்தை வாங்கிக் கொடுக்கிறார் கே.என்.நேரு.
இந்த காட்சியை Slow motionல் Zoom செய்து பார்க்கையில், அரங்கு பொறுப்பாளர் கையில் மூன்று 500 ரூபாய் நோட்டுகள் இருப்பதைக் காணமுடிகிறது. இதிலிருந்து கே.என்.நேரு பொருளின் விலையான 1500 ரூபாயை கொடுத்திருக்கிறார் என்பதை உறுதி செய்யமுடிகிறது.
கே.என். நேரு தனது உதவியாளரிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு பணத்தை அரங்கு பொறுப்பாளரிடம் கொடுக்கும் போது, ’500 இந்தா’ என்று ஆடியோவில் பதிவாகியுள்ளது. ஆனால் கே.என்.நேரு மூன்று 500 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்தது தெளிவாகப் பதிவாகியுள்ளது.
முடிவு:
’500 இந்தா’ என்று ஆடியோவில் உள்ளதைத் திரித்து 1500 ரூபாய் பொருளை 500 ரூபாய்க்கு வாங்கி அமைச்சர் நேரு வியாபாரியை ஏமாற்றுகிறார் என்று தவறாகப் பரப்பப்படுகிறது. கே.என். நேரு மூன்று 500 ரூபாய் நோட்டுகள் கொடுத்தது வீடியோவில் பதிவாகியுள்ளது.