யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த கட்டமைப்பு Michael Grab என்னும் கலைஞரால் Counter Balance முறையில் வடிவமைக்கப்பட்டதாகும்.
பரவிய செய்தி
"இது அறிவியலுக்கு அப்பாற்பட்டது. ஓடும் நர்மதா நதியில் (நர்மதா பரிக்கிரமா செல்லும் வழியில்) ஒரு பாறையும் அதற்கு மேல் மூன்று கற்களும் ஒன்றன் மீது ஒன்றாக நிற்கின்றன. வெள்ளத்தின் போதும் பாறைகள் நிலையாக நிற்கும்.

விரிவான விளக்கம்
தட்டையான ஒரு கல் அதன் நுனியை ஊன்றி நிற்கிறது. அதன் மீது மூன்று உருண்டைக் கற்கள் இருக்கிறது. இப்படி கற்கள் சிக்கலான கட்டமைப்பில் நிற்கும் வீடியோவை பதிவிட்டு, இது ’நர்மதா நதியில்’ இருக்கிறது என்றும், இது ’அறிவியலுக்கு அப்பாற்பட்டது’ என்றும் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன:
பரப்பப்படும் இந்த வீடியோவின் Keyframe-களைக் கொண்டு தேடுகையில், ‘Gravity Glue’ என்ற பேஸ்புக் பக்கத்தில், 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த வீடியோ பதிவிடப்பட்டிருப்பதை காணமுடிந்தது. இந்த பேஸ்புக் பதிவில் (Post) இதனை ’Michael Grab’ என்பவர் வடிவமைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும், ‘Gravity Glue’ பேஸ்புக் பக்கத்தில், இதுபோன்று பலவகைகளில் கற்கள் கலைத்துவமாக அடுக்கப்பட்ட புகைப்படங்கள் காணக்கிடைக்கிறது.
இந்த வீடியோவில், இருக்கும் ஒரு தட்டையான கல், மூன்று உருண்டைக் கற்கள் வைத்து செய்யப்பட்ட கட்டமைப்பின் புகைப்படம் ’Gravity Glue’ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஆகஸ்ட் 19, 2019 அன்று பதிவிடப்பட்டிருந்தது. இந்த இன்ஸ்டாகிராம் பதிவில், மேற்குறிப்பிட்ட புகைப்படத்தைப் பற்றி விவரிக்கும் போது, தட்டை கல் மையத்திலிருந்து சாய்த்து வைக்கப்பட்டு, மூன்று உருண்டைக் கற்களைக் கொண்டு Counter Balance செய்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. USA-ன் கொலராடோ மாகாணத்தில் போல்டர் என்னும் நகரத்திற்கு அருகில் போல்டர் க்ரீக் என்ற நதி இருக்கிறது. இந்த நதிதான் போல்டர் நகரத்திற்கான முதன்மை நீர் ஆதாரமாகும். இந்த ‘போல்டர் க்ரீக் (Boulder Creek)’ என்னும் நதியில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த ’Counter Balance’ முறையில், கட்டமைப்பில் கீழே உள்ள பாறைகள் தனது சமநிலைக்காக (Equilibrium) அவற்றின் மேல் வைக்கப்பட்டுள்ள கற்களில் எடையைப் பொறுத்திருக்கிறது. இது ’Center of Gravity’ என்னும் அறிவியல் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டுதான் செய்யப்படுகிறது.

இதிலிருந்து, மேற்கண்ட, கட்டமைப்பு Counter Balance முறையை பயன்படுத்தி Michael Grab என்பவரால் வடிவமைக்கப்பட்டது என்பது தெளிவாகிறது. இது ‘நர்மதா நதியில்’ இருப்பதாக சொல்லப்படுவதும், ’அறிவியலுக்கு அப்பாற்பட்டது’ என சொல்லப்படுவதும் தவறான தகவல்களாகும்.
முடிவு:
கற்களின் இந்த கட்டமைப்பு ‘நர்மதா நதியில்’ இருப்பதாக பரப்பப்படுவது தவறான தகவலாகும். இது Michael Grab என்னும் கலைஞரால் வடிவமைக்கப்பட்டதாகும்.