யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது இரண்டு இஸ்லாமிய தரப்புகளுக்குள் நடைபெற்ற வன்முறையாகும்.
பரவிய செய்தி
Bangladesh, on the way to loot. பங்களாதேசத்தில் இந்துக்களின் சொத்துக்களை சூறையாடவும் இந்துக்களைக் கொல்லவும் தெருத் தெருவா ஆயுதங்களுடன் கொலைவெறியில் அலையும் முஸ்லிம்களைப் பாருங்கள்.

விரிவான விளக்கம்
’குல்லா அணிந்த ஆண்கள் கையில் கட்டைகளுடன் நடந்து செல்லும் வழியில், ஏற்கனவே இடிக்கப்பட்ட ஒரு தகர கட்டிடத்தையும், பின்புலத்தில் தீ எறிவதற்கான அறிகுறியாக புகை மண்டலத்தையும்’ காட்சிபடுத்தும் வீடியோவை பதிவிட்டு, ’பங்களாதேசத்தில் இந்துக்களின் சொத்துக்களை சூறையாடவும், இந்துக்களை கொல்லவும் முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் அலைவதாக’ எக்ஸ் தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன:
பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடுகையில், ”ஷெர்பூர் தர்பார் ஷெரீப் நாசப்படுத்தப்பட்டது” என்று பங்களா மொழியில் தலைப்பிடப்பட்டிருந்த ஒரு வீடியோவை ’Jamuna TV’ என்ற யூட்யூப் தளத்தில் காணமுடிந்தது.

இந்த யூப்யூப் வீடியோவின் Description-ல் ”ஷெர்பூர் சதாரில் உள்ள ’டோஜா பீர்’ தர்பாரில் தாக்குதல், நாசவேலை மற்றும் தீவைப்பு ஆகியவை நடந்தது. முர்ஷித்பூர் என்ற கிராமத்தின் மக்கள், உள்ளூர் குவாமி மதரஸாவின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் சேர்ந்துகொண்டு, ’தர்பார் ஷெரீப்’ல் ஒழுக்கக்கேடான நடவடிக்கைகள் நடப்பதாகக் கூறி, தர்பார் ஷெரீப்பை மூடுமாறு கோரிக்கை விடுத்ததாக போலீஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக பீரின் ஆதரவாளர்களுடன் கிராம மக்கள் மோதினர்” என்று எழுதியுள்ளது.
மேலும் தேடியதில், ’Bangla Affairs’ என்ற யூட்யூப் தளத்தில் ‘ஷெர்பூரில் உள்ள ஆலயத்தில் தாக்குதல், கொள்ளை, தீவைப்பு” என்று தலைப்பிட்டு இதே சம்பவம் தொடர்பாக ஒரு வீடியோவை காணமுடிந்தது. இந்த வீடியோவிலுள்ள காட்சிகள், பரப்பப்படும் வீடியோவில் உள்ளவற்றுடன் பொருந்திப்போவதாக இருக்கிறது.
மேலும் இந்த குறித்து இணையத்தில் தேடியதில், ‘Dhaka Tribune’ என்ற செய்தித்தளத்தில் வெளியாகியுள்ள செய்தியின்படி, ’க்வாஜா பத்ருதுஜா ஹைதர்’ என்பவரின் தலைமையில் நடத்தப்படும் ’முர்ஷித்பூர் தர்பார் ஷெரீப்’ என்ற மத ஸ்தாபனம் அடித்து சூறையாடப்பட்டது. இந்த சம்பவம் கடந்த நவம்பர் 26ஆம் தேதி வங்கதேசத்தில் ஷெர்பூர் என்ற பகுதியில் உள்ள லச்மன்பூர் என்ற இடத்தில் நடந்ததாகும்.

அந்த ’தர்பார் ஷெரீபில்’ இஸ்லாமிய விரோத செயல்கள் நடைபெறுவதாக உள்ளூர் மதரஸா ஆசிரியர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்துதான் இந்த சூறையாடல் நடத்தப்பட்டதாக ’தர்பார் ஷெரீப்’ தரப்பில் சொல்லப்படுகிறது. இந்த வன்முறையை தூண்டியதில் மதரஸா கண்காணிப்பளருக்கும் தொடர்புள்ளதாக புகார்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய விவரங்களில் இருந்து, இது இரண்டு இஸ்லாமிய தரப்புகளுக்குள் நடைபெற்ற வன்முறை என்பது தெளிவாகிறது. இது தொடர்பாக எடுக்கப்பட்ட வீடியோவை ’முஸ்லிம்களால் இந்துக்களுக்கு ஆபத்து’ என்ற மதவாத கண்ணோட்டத்தில் தவறாக பரப்புகின்றனர்.
முடிவு:
வங்கதேசத்தில் இரண்டு இஸ்லாமிய தரப்புகளுக்கிடையே உள்ள முரண்பாடுகள் காரணமாக நிகழ்ந்த வன்முறை சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவை ’பங்களாதேசத்தில் இந்துக்களின் சொத்துக்களை சூறையாடவும், இந்துக்களை கொல்லவும் முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் அலைவதாக’ மதவாத கண்ணோட்டத்தில் தவறாக பரப்புகின்றனர்.