யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த வீடியோவில் ”ரகுவீர கதயம்” பாடுபவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பாடகி ஸ்ரீலலிதா பமிதிபதி.
பரவிய செய்தி
Tongue twister song in perfect tune rendered so well by Ms.Ameya D/O singer Yesudoss
கே ஜே யேசுதாஸ் மகன் விஜய் இயேசுதாசின் மகள் ஆமேயா யேசுதாஸ்...

விரிவான விளக்கம்
சமூக வலைதளமான ’எக்ஸ்’ல், இளம் பாடகி ஒருவர் ”ரகுவீர கதயம்” என்னும் பாடலை பாடும் காணொளி ஒன்றை பதிவிட்டு, அந்த காணொளியில் பாடுபவர் விஜய் யேசுதாஸின் மகள் அமேயா யேசுதாஸ் என்று பரப்பப்படுகிறது. விஜய் யேசுதாஸ், பிரபல பாடகரான யேசுதாஸின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை என்ன?
இந்த காணொளியின் Keyframe-களைக் கொண்டு தேடுகையில், ’மலையாள மனோரமா’வின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ”யார் இந்த பாடகர்?” என்ற தலைப்பில் இதே காணொளி பதிவிடப்பட்டிருந்தது. அந்தப் பதிவில் யேசுதாஸ், விஜய் யேசுதாஸ் ஆகிய பெயர்கள் tag செய்யப்பட்டிருந்தது. அதன் கூடவே ’ஸ்ரீலலிதா பமிதிபதி’ என்ற பெயரும் tag செய்யப்பட்டிருந்தது.
இந்த ’ஸ்ரீலலிதா பமிதிபதி’ என்ற பெயரைக் கொண்டு இணையத்தில் தேடுகையில், ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா நகரத்தைச் சேர்ந்த பாடகர் என்பது தெரிகிறது. ’Srilalitha singer’ என்னும் யூட்யூப் தளத்தில் இவரது பாடல் வீடியோகளை காணலாம். இந்த யூட்யூப் தளத்தில், ஒரு Shorts வீடியோவாக தற்போது பரப்பபடும் வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. மேலும், படுததேயாக (Paduthateyaga), போல் பேபி போல் (Bol Baby Bol) போன்ற பாடல் நிகழ்ச்சிகளில் பாடி பிரபலமானவர் இந்த ஸ்ரீலலிதா பமிதிபதி.

இன்னும் கூடுதலாக தேடியதில், பாடகி ஸ்ரீலலிதா பமிதிபதி, ‘Srilalitha Gudipati’ என்னும் அவரது பேஸ்புக் பக்கத்தில் 2019ஆம் ஆண்டு ’ஹரிவராசனம்’ என்னும் பாடலை பாடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளதை காண்கிறோம். இந்த வீடியோவில் பாடிய ஸ்ரீலலிதாவை பிரபல பாடகர் யேசுதாஸின் பேத்தி அமேயா என்று தகவல் சமூக வலைதளங்களில் தவறாக பரப்பப்பட்டது.
இந்த ’ஹரிவராசனம்’ என்பது கடவுள் ஐயப்பனுக்காக பாடப்படும் தாலாட்டுப் பாடலாகும். 1975ஆம் ஆண்டு ‘சுவாமி அய்யப்பன்’ என்னும் மலையாள திரைப்படத்தில் இந்தப் பாடலை யேசுதாஸ் பாடினார். இந்தப் பாடல்தான் தற்போதும் சபரிமலை கோவிலில் ஒலிக்கப்படுகிறது. இதுதான் பாடகி ஸ்ரீலலிதா ’ஹரிவராசனம்’ நன்றாக பாடியதும் அவர் யேசுதாஸின் பேத்தியாக குழப்பிக்கொள்ள காரணமாகும்.
2021ஆம் ஆண்டில் பரப்பப்பட்ட தவறான செய்தியின் தாக்கத்தால், தற்போது ஸ்ரீலலிதா பாடிய ”ரகுவீர கதயம்” பிரபலமான போது மீண்டும் அவரை யேசுதாஸின் பேத்தி என்று சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள்.
மேலும், கடந்த 2021ஆம் ஆண்டு யேசுதாஸும் அவரது பேத்தி அமேயாவும் இணைந்து பாடியதாக செய்திகள் வெளியானது. அப்போது வெளியிடப்பட்ட புகைப்படத்தில் இருக்கும் குழந்தை அமேயாவின் முகம் எந்த வகையிலும் பாடகி ஸ்ரீலலிதாவை ஒத்திருக்கவில்லை.

இதனால், 2021ஆம் ஆண்டு ’ஹரிவராசனம்’ பாடியபோது பாடகி ஸ்ரீலலிதாவை யேசுதாஸின் பேத்தி என்று பரப்பப்பட்ட பொய் செய்தியின் தாக்கத்தாலே தற்போதும் இவ்வாறு பரப்புகிறார்கள் என்பது உறுதியாகிறது.
முடிவு:
இந்த வீடியோவில் இருக்கும் பாடகி யேசுதாஸின் பேத்தி அமேயா அல்ல. அவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பாடகி ஸ்ரீலலிதா பமிதிபதி.