யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள் திராவிட கட்டிடக்கலையின் படி கட்டபட்டது என்பது UNESCO-வாலும், பல ஆய்வுக் கட்டுரைகளாலும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும்.
பரவிய செய்தி
என்னது, திராவிட கலையா இது என்ன அயோக்கியத்தனம். திருட்டு திராவிடத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?

விரிவான விளக்கம்
“சுற்றுலா பயணிக்களுக்கு தஞ்சை பெரிய கோவிலை பற்றி ஒருவர் விளக்கும் போது, இது ’திராவிட கட்டிடக்கலை’ என்று சொல்வதாகவும், அதனை மறுத்து இது ’தமிழர் கட்டிடக்கலை’ என்று ஒருவர் வாதாடுவதாகவும்” காட்சிபடுத்தும் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, தஞ்சை பெரிய கோவில் ‘திராவிட கட்டிடக்கலை’ என்று வெளிநாட்டவர்களுக்கு பொய்யாக சொல்லிக் கொடுக்கப்படுவதாகவும், அதனை தமிழர் ஒருவர் அம்பலப்படுத்தியதாகவும் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன:
பரப்பப்படும் செய்தியை அடிப்படையாகக் கொண்டு ‘Dravidian Architecture’ என்ற keywords கொண்டு இணையத்தில் தேடுகையில், ‘UNESCO World Heritage Convention’ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் சில தகவல்கள் இருப்பதைக் காணமுடிந்தது.
அதன்படி, தஞ்சையில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில், ஐராவதேஸ்வரர் கோவில் ஆகியவை திராவிட கட்டிடக்கலையை பிரதிபலிப்பதாகவும்; திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோவில், திராவிட கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளதாகவும் UNESCO அங்கீகரித்துள்ளது.
மேலும், கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பி (Hampi) நினைவுச் சின்னங்களைச் குறிப்பிட்டு ‘விஜயநகரப் பேரரசின் கீழ் திராவிட கட்டிடக்கலை செழித்து வளந்ததாக’ UNESCO-வின் அதிகாரப்பூர்வ வலைதளம் குறிப்பிடுகிறது.

’காலனிய மெட்ராஸ் மாகாணத்தில் திராவிடர் கோவில்’ என்ற ஆய்வுக் கட்டுரையில், ’ஆங்கில கிழக்கிந்திய நிறுவனத்திற்காக வேலை செய்து வந்த ஊழியரான தஞ்சையை சேர்ந்த ராம் ராஸ் (Ram Raz) என்பவர் இடைக்கால தென்னிந்தியாவின் கட்டிடக்கலை பற்றிய சமஸ்கிருத கட்டுரைகள் (வாஸ்துசாஸ்திரம்) பலவற்றைத் தொகுத்தார்’. இதில்
திராவிட கோவிலுக்கான முக்கிய விதிமுறைகள் சிலவற்றை முன்வைத்திருந்தார். இது 1834ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த தொகுப்பிலே ’திராவிட’ என்ற வார்த்தை இருந்திருக்கிறது' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும், லக்னோ, அமிட்டி பல்கலைக்கழகத்தை சேர்ந்த முனைவர். அருண் கபூர், ”திராவிட கட்டிடக்கலையின் தனித்துவமான பண்புகள்” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில், ’விமானம், கோபுரம்’ போன்ற கட்டமைப்புக் கூறுகள் ”திராவிட கட்டிடக்கலைக்கே (Dravidian Architecture) உண்டான தனித்துவமான பண்புகள்” என்கிறார்.
ஆனந்த் கபாடியா என்பவர் , ’இடைக்கால சோழர் ஆட்சியில் திராவிட பாணி கோவில்களின் கூறுகள்’ பற்றி ஆய்வு செய்து வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில், பல்லவர், சோழர், பாண்டியர், விஜயநகர பேரரசு, நாயக்கர் ஆகிய காலகட்டங்களில் தென்னிந்திய கட்டிடக்கலை பரிணாம வளர்ச்சியடைந்ததை குறிப்பிடுகிறார்.

பல்லவர்கள் காலத்தில் கோவில்கள் பறையில் செதுக்கப்பட்டன. அதன்பிறகு ஆட்சிக்கு வந்த பாண்டியர்களின் காலத்தில் கோவில் நுழைவாயிலை உயர்ந்த கோபுரங்களுடன் கட்டினார்கள். எளிய பாறைக் கோயில்கள் என்ற நிலையில் இருந்து பெரிய மற்றும் சிக்கலான அமைப்புகளாக கோவில்கள் பரிணமித்தன.
மேற்கூறிய விவரங்களின் அடிப்படையில் காணும் போது, ’திராவிட கட்டிடக்கலை (Dravidian Architecture)’ என்பது பல்லவர்கள் முதல் விஜயநகரப் பேரரசு காலம் வரை தென்னிந்தியாவில் நெகிழ்ந்து பரிணமித்து வளர்ந்த கட்டிட பாரம்பரியத்தைக் குறிப்பதை புரிந்துகொள்ளமுடியும். வடமாநில கோவில்களிலிருந்து வேறுபட்ட வகையில் ’விமானம், கோபுரம்’ போன்ற தனித்துவமான பண்புகளை உடையதாக ’திராவிட கட்டிடக்கலை’ இருப்பதை புரிந்துகொள்ளலாம்.
முடிவு:
தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள் திராவிட கட்டிடக்கலையின் படி கட்டபட்டது என்பது UNESCO-வாலும், பல ஆய்வுக் கட்டுரைகளாலும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும். ’திராவிட கட்டிடக்கலை’ என்ற ஒன்றே இல்லை என்ற தொனியில் பரப்பப்படும் தகவல் பொய்யானது.