யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பெரியகுப்பம் கடற்கரையில் பெண்களிடம் அத்துமீறி நடந்துகொண்ட குற்றத்தில் சம்பந்தப்பட்ட மூன்று நபர்களை காவல்துறை ஏற்கனவே கைது செய்துள்ளது.
பரவிய செய்தி
"உன் வீட்டு பொண்ணுகளை எங்ககிட்ட விட்டுட்டு போ....எவனும் கேட்க முடியாது, ஏன்னா இது எங்க ஆட்சி" என சொல்லி பீச்லயே அசிங்கமா பேசி அடிச்சானுக. இவனுங்க புடிக்க துப்பு இருக்காது...ஆனா பாட்டிய துறத்துவாங்க திராவிடியா பசங்க

விரிவான விளக்கம்
கடற்கரை ஒன்றில் ஆண்கள் சிலர் மூர்க்கமாக மற்றவர்களை தாக்குவது போன்ற காட்சியைத் தொடர்ந்து பெண் ஒருவர் பேட்டியளிக்கையில், ’கடலில் குளித்துவிட்டு வந்த எங்களிடம் (பெண்களிடம்) தரக்குறைவாக பேசினார்கள். மேலும் நடப்பது எங்கள் ஆட்சி உன்னால் எங்களை என்ன செய்ய முடியும்? என்று சொல்லி தாக்கினார்கள்’ என்று கூறுகிறார். அந்த காட்சிகள் அடங்கிய வீடியோவை பதிவிட்டு, இது போன்று குற்றவாளிகளை காவல்துறை கைது செய்யாது என்ற அர்த்தத்தில் பாஜகவை சேர்ந்தவர் சமூக வலைதளத்தில் பரப்புகிறார்.
உண்மை என்ன:
கடற்கரையில் சண்டையிட்டுக் கொள்ளும் காட்சியின் keyframe-களைக் கொண்டு தேடுகையில், ‘தினகரன்’ செய்தித்தளத்தில் ஒரு செய்தியை காணமுடிந்தது. கடந்த 2024 டிசம்பர் 26ஆம் தேதி வெளியாகியுள்ள இந்த செய்தியில், சம்பவம் நடந்தது ‘நேற்று முன்தினம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், சம்பவம் டிசம்பர் 24ஆம் தேதி நடந்தது என்பதை புரிந்துகொள்ளலாம்.

அதன்படி, புதுச்சத்திரம் அருகில் உள்ள பெரியகுப்பம் கடற்கரைக்கு சில குடும்பத்தினர் பொழுகுபோக்கிற்காக சென்றிருந்தவர்கள், கடலில் குளித்துவிட்டு கடற்கரையில் நடந்து வந்தபோது, தியாகவல்லி கிராமத்தைச் சேர்ந்த சிலர் அத்துமீறி நடந்துள்ளனர். இந்த அத்துமீறலை தட்டிக்கேட்டவர்களையும் தாக்கியுள்ளனர்.
இது சம்பந்தமாக, மாணிக்கவேல், தினேஷ், சரவணன், பிரவீன் ஆகிய 4 நபர்கள் மீது புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவருவதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே சம்பவம் பற்றி 2024 டிசம்பர் 25ஆம் தேதி ‘THE HINDU’ வெளியிட்டுள்ள செய்தியின்படி, புதுச்சத்திரம் போலீசார் மாணிக்கவேல், தினேஷ், சரவணன் என்ற மூன்று நபர்களை கைது செய்துள்ளதாகவும், அவர்கள் சம்பவம் நடந்தபோது மதுபோதையில் இருந்ததாகவும் தெரிய வருகிறது.
இதிலிருந்து, சம்பந்தப்பட்ட மூன்று நபர்களை போலீசார் 25ஆம் தேதி அன்றே கைது செய்துவிட்டனர் என்பது தெளிவாகிறது.
முடிவு:
பெரியகுப்பம் கடற்கரையில் பெண்களிடம் அத்துமீறி நடந்துகொண்டவர்களை காவல்துறை கைது செய்யாது என்று பரப்பப்படும் தகவல் தவறானதாகும். பெண்களிடம் அத்துமீறி நடந்துகொண்ட குற்றத்தில் சம்பந்தப்பட்ட மூன்று நபர்களை காவல்துறை ஏற்கனவே கைது செய்துள்ளது.