யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்தப் புகைப்படம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் (AI Technology) உருவாக்கப்பட்டது.
பரவிய செய்தி
சென்னை அடையார் பகுதியில் பழைய மகாபலிபுரம் சாலையில் தேங்கி நிற்கும் வாகனங்கள். திமுகவிற்கு ஓட்டு போட்ட சென்னை மக்களுக்கு வாழ்த்துக்கள். #ChennaiRain #CycloneFengal

விரிவான விளக்கம்
மழையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் மிக நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்கும் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டு, ’இந்த போக்குவரத்து நெரிசல் பழைய மகாபலிபுரம் சாலையில் ஏற்பட்டதென்றும் இது திமுக ஆட்சியின் அவலம் என்றும்’ ‘எக்ஸ்’ தளத்தில் பரப்பப்படுகிறது. சமூக வலைதளங்களில் மட்டுமின்றி ‘Business Line’, ’OneIndia’ ஆகிய செய்தித்தளங்கள் வெளியிட்டுள்ள செய்திகளிலும் கூட இந்த புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உண்மை என்ன:
பரப்பப்படும் இந்த புகைப்படத்தில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று இடித்துக்கொண்டு விபத்திற்குள்ளானது போல் தெரிந்தது. இதிலிருந்து, முதல்பார்வைக்கே இந்தப் புகைப்படம் Edit செய்யப்பட்டது போல் காட்சியளிக்கிறது. இருப்பினும், இந்த புகைப்படத்தை ’Hive Moderation’ என்னும் தளத்தில் சோதித்தபோது, இது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் (AI Technology) உருவாக்கப்பட்டது என்பது தெரியவந்தது.

மேலும் உறுதி செய்துகொள்வதற்காக இந்த புகைப்படத்தை ‘True Media’ என்னும் தளத்தில் சோதித்தபோது, இந்த புகைப்படம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருப்பது நிரூபணமானது.

இதிலிருந்து, பரப்பப்படும் புகைப்படம் உண்மையானது அல்ல. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பது தெளிவாகிறது. இந்த படத்தின் உண்மைத்தன்மையை அறியாமலே இதை செய்தி நிறுவனங்களும் தங்களது செய்திகளில் பயன்படுத்தியுள்ளனர்.
முடிவு:
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு, பழைய மகாபலிபுரம் சாலையில் மழையால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் என்று பொய்யான தகவல் பரப்பப்படுகிறது.