யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2012ஆம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவில் பிரம்மோத்சவ திருவிழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
கடந்த நவம்பர் 3ஆம் தேதி, இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமை ஏற்று நடத்திய பேரணியில் கலந்துகொல்வதற்காகத் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வந்த பிராமணர்கள் சென்னை ராஜரத்தினம் திடலில் கூடினார்கள். இந்தப் பேரணியின் முக்கிய நோக்கமாக, சில அரசியல் மற்றும் சமூக குழுக்களால் பிராமண சமூகத்தின் மீது எதிர்மறையான கருத்துகள் திட்டமிட்டு பரப்பப்படுவதாகவும், பிராமண சமூகத்திற்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் சமீப ஆண்டுகளில் அதிகரித்துவிட்டதாகவும் அங்கே கூடியவர்கள் விவரிக்கிறார்கள். இதற்குத் தீர்வாக, ‘தீண்டாமையைப் பிரச்சாரம் செய்வதையும், கடைப்பிடிப்பதையும் தண்டனைக்குரிய குற்றமாக’ கருதும் 1955 ஆண்டின் சிவில் உரிமைகள் சட்டத்தை (PCR) ஒத்த ஒரு சட்டப் பாதுகாப்பின் மூலமாக தங்களது பிரமாண சமூகத்தைப் பாகுபாடு மற்றும் அவதூறுகளிலிருந்து பாதுகாக்க வேண்டும் கோரினர்.
இதற்கிடையில், பிரமாணர்கள் பலர் மாலை அணிந்து தெருவில் ஊர்வலம் போகும் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டு, பிராமணர்களின் எழுச்சி தமிழகத்தில் முதன்முதலில் நடப்பதாக ‘எக்ஸ்’ தளத்தில் வலதுசாரிகளால் பரப்பப்படுகிறது.
’பல பத்தாண்டுகளாக பிராமணர்களை மீது தொடுக்கப்பட்ட இடைவிடாத வாய்மொழி கொடுமைகளுக்கு எதிராக பிராமண சமூகம் எழுந்து நிற்கிறது’ என்று இந்து மக்கள் கட்சி தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
உண்மை என்ன?
பரப்பப்படும் புகைப்படத்தின் Keyframe-களைக் கொண்டு Reverse Image Searching மூலமாகத் தேடுகையில், Flickr.com என்னும் புகைப்பட தளத்தில் இதையொத்த புகைப்படமொன்றைக் காணமுடிந்தது. இந்த புகைப்படம் 2012ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி எடுக்கப்பட்டு, 2013ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி பதிவேற்றப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்தப் புகைப்படம் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவில் பிரம்மோத்சவ தேர்த் திருவிழாவின் போது எடுக்கப்பட்டதாக விரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புகைப்படத்தையும், பரப்பப்படும் புகைப்படத்தையும் ஊன்றி கவனிக்கையில், இரண்டிலும் முன்வரிசையில் நிற்பவர்கள் ஒரே நபர்கள்தான் என்பதைக் கண்டுகொள்ள முடியும். இதிலிருந்து மேற்கூறிய இரண்டு புகைப்படங்களும் ஒரே நிகழ்வை வெவ்வேறு கோணங்களிலிருந்து படம் பிடித்திருப்பதைப் புரிந்துகொள்ளலாம்.

இதிலிருந்து, பிராமணர்கள் ஊர்வலமாகச் செல்லும் புகைப்படம் 2012ஆம் ஆண்டு பார்த்தசாரதி கோவில் பிரம்மோத்சவத்தின் போது எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது. இந்த புகைப்படத்தைக் கொண்டு பிராமணர்கள் எழுச்சியென்று பரப்பப்படும் தகவல் தவறானது. இந்த புகைப்படத்திற்கும் கடந்த நவம்பர் 3ஆம் தேதி, இந்து மக்கள் கட்சியால் முன்னெடுக்கப்பட்ட பேரணிக்கும் எந்த சம்பந்தமுமில்லை.
முடிவு:
தமிழ்நாட்டில் முதன்முறையாக பிராமணர்களின் எழுச்சியென்று பரப்பப்படும் தகவல் தவறானது. இந்த புகைப்படம் 2012ஆம் ஆண்டு பார்த்தசாரதி கோவில் பிரம்மோத்சவத்தின் போது எடுக்கப்பட்டது.
