யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இறந்தவர் சுலோச்சனா பாய் என்பவர். இவர் ‘இருட்டுக்கடை’யின் தலைமை நிர்வாகி திருமதி கவிதா சிங்-ன் அத்தை.
பரவிய செய்தி
அவர் நின்னு செல்பி எடுத்தா அந்த சொத்து தான் பறி போகும் நினைச்சேன்..... ஆனா இந்த போட்டோவால அந்த அம்மா செத்துப் போகும் நினைக்கவே இல்லையேப்பா.

விரிவான விளக்கம்
சென்ற வாரம் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் திருநெல்வேலி மாவட்டத்தில் கள ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார். அந்தப் பயணத்தின் போது, பிப்ரவரி 6ஆம் தேதி அன்று திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் அருகில் உள்ள ’இருட்டுக்கடை’யில் அல்வா சாப்பிட்டார். அப்போது கடை நிர்வாகிகளுடன் முதல்வர் உரையாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பதிவிட்டு, அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்ணின் பெயர் சுலோச்சனா என்றும் அவர் மரணமடைந்துவிட்டார் என்றும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
முதல்வருடன் இந்த புகைப்படத்தில் இருக்கும் பெண் குறித்துத் தேடியதில், ’இருட்டுக்கடை அல்வா’-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ’Our Events’ என்ற பகுதியில் இந்த புகைப்படங்கள் காணக்கிடைத்தது. இந்தப் புகைப்படம் பற்றி எழுதப்பட்டிருந்த குறிப்பில், ’இருட்டுக் கடை’-ன் தற்போதைய தலைமை நிர்வாகி திருமதி கவிதா சிங் முதல்வரை வரவேற்றதாகக் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.

இதிலிருந்து இந்த புகைப்படத்தில் முதல்வருடன் உரையாடும் நபர், திருமதி கவிதா சிங் என்பது தெரிய வருகிறது.
மேலும், ‘இருட்டுக்கடை உரிமையாளர் மரணம்’ என்ற Keywords-களைக் கொண்டு இணையத்தில் தேடுகையில், 'இருட்டுக்கடை' உரிமையாளரின் அத்தை மரணம்’ என்ற தலைப்பில் ’தினமலர்’ செய்தித்தளத்தில் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்த செய்தியைக் காணமுடிந்தது.

அதன்படி, திருமதி கவிதா சிங் தற்போது மூன்றாவது தலைமுறையாக ‘இருட்டுக் கடை’-யை நடத்தி வருகிறார் என்றும் இவரது தந்தையின் அக்கா (அதாவது அத்தை) சுலோச்சனா பாய் (வயது 87) உடல் நலக் குறைவால் பிப்ரவரி 7ஆம் தேதி காலமானார் என்றும் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதிலிருந்து, முதல்வருடன் புகைப்படத்தில் இருப்பவர் ‘இருட்டுக்கடை’யின் தலைமை நிர்வாகி திருமதி கவிதா சிங் என்பதும், இறந்தவர் சுலோச்சனா பாய் என்ற அவரது அத்தை என்பதும் தெளிவாகிறது.
முடிவு:
’இருட்டைக் கடை’-ன் உரிமையாளரின் குடும்பத்தைச் சேர்ந்த சுலோச்சனா பாய் என்பவர் மரணமடைந்த செய்தியை, தற்போதைய தலைமை நிர்வாகி திருமதி கவிதா சிங்-ன் புகைப்படத்தைக் கொண்டு தவறாகப் பரப்பி வருகிறார்கள்.