யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றதற்காக தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு தமிழ்நாடு அரசு சார்ப்பில் பல்வேறு பரிசுத்தொகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
கடந்த டிசம்பர் 12ஆம் தேதி சிங்கப்பூரில் நடந்த செஸ் போட்டியில் உலக சாம்பியனான டிங் லிரனை வீழ்த்தி 18வது உலக சாம்பியன் ஆனார் குகேஷ். குகேஷ், டிங் லிரன் ஆகிய இருவருக்கும் இடையில் 14 ஆட்டங்கள் நடைபெற்றது. அதில் இறுதியாக குகேஷ் வெற்றிபெற்று உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளமையான (18 வயது) வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து குகேஷ்-க்கு 5 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில், ’குகேஷ் என்ற தெலுங்கருக்கு 5 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. ஆனால், ஒலிம்பிகில் பதக்கங்கள் வென்ற தமிழன் மாரியப்பனுக்கு வெறும் வாழ்த்து மட்டும்தான் கிடைத்தது. இதுதான் திராவிட மாடல்’ என்ற கருத்து நாம் தமிழர் ஆதரவாளரால் ‘எக்ஸ்’ தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன:
தமிழ்நாடு அரசு சார்பில் தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலுவிற்கு கொடுக்கப்பட்ட பரிசுகள் பற்றி இணையத்தில் மேலோட்டமாக தேடிய போதே அது தொடர்பாக பல செய்திகளை நம்மால் காணமுடிந்தது.
மாரியப்பன் தங்கவேலு, 2016 ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற போது, அவருக்கு ரூ.2 கோடி பரிசு அறிவித்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா.

2020 டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றபொது, தடகள வீரர் மாரியப்பனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ரூ.2 கோடி ரொக்கப் பரிசை 2021 அக்டோபர் மாதம் வழங்கினார்.
தடகள வீரர் மாரியப்பனுக்கு குரூப்-1 பிரிவில் தமிழ்நாடு காகித ஆலையின் மார்க்கெட்டிங் பிரிவில் துணைமேலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறித்து ’OneIndia’ செய்தித்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜப்பானில் 2024 மே மாதம் நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
2024 ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர் மாரியப்பன் மற்றும் வீராங்கனைகள் துளசிமதி, நித்ய ஸ்ரீ, மனிஷா ஆகியோருக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.5 கோடிக்கான காசோலைகளை 25.09.2024 அன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கியதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது. அதில் வெண்கலம் வென்ற மாரியப்பனுக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

இப்படி பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றதற்காக தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்ப்பில் பல்வேறு பரிசுத்தொகைகள் வழங்கப்பட்டுள்ளதற்கு போதுமான ஆதாரங்கள் செய்திகளில் இருக்கிறது. இருந்தும் தடகள வீரர் மாரியப்பனுக்கு தமிழ்நாடு அரசு வாழ்த்து மட்டுமே சொன்னதாக பரப்பப்படுவது தவறான தகவலாகும்.
முடிவு:
பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றதற்காக தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்ப்பில் பல்வேறு பரிசுத்தொகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. வெறும் வாழ்த்து மட்டுமே சொல்லப்பட்டதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும்.
