யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அசிரியப் படைவீரர்கள் ஆற்றைக் கடக்கவே காற்று ஊதப்பட்ட ஆட்டுத்தோல் பையை பயன்படுத்தியதாக இந்த சிற்பத்தில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
பரவிய செய்தி
ஊதப்பட்ட ஆட்டுத்தோல் பையைப் பயன்படுத்தி ஆற்றின் அடியில் மூழ்கும் அசீரியப் படைவீரரின் 3,000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு பிரிட்டிஷ் பழங்கால அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

விரிவான விளக்கம்
மிக நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ள பண்டைய கால சிற்பத்தின் புகைப்படத்தை பதிவிட்டு, ‘3,000 ஆண்டுகள் முன்பே, காற்று ஊதப்பட்ட ஆட்டுத்தோல் பையைப் பயன்படுத்தி அசிரியப் படைவீரர்கள் ஆற்றின் அடியில் மூழ்கும் காட்சி’ என்றும், ’இது நவீன Scuba diving-க்கு முன்னோடி’ என்றும் சமூக வலைதளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன:
பரப்பப்படும் புகைப்படத்தின் keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடுகையில், பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இந்த படத்தை பற்றிய குறிப்பை காணமுடிந்தது. அதன்படி, இது சுவற்றில் செதுக்கப்பட்ட சிற்பம் என்பதும், 865 BC - 860 BC (கிட்டதட்ட 2900 ஆண்டுகளுக்கு முன்னர்) நவ-அசிரியன் (Neo-Assyrian) காலகட்டத்தில் செதுக்கப்பட்டது என்பதும் தெரியவருகிறது.

இந்த சிற்பம் பற்றிய விளக்கக் குறிப்பில், ’படைவீரர்கள் ஆற்றை நீந்திக் கடப்பதைக் குறிக்கிறது. வீரர்களின் வழிகாட்டுதலின் கீழ் குதிரைகளும் ஆற்றை நீந்திக் கடக்கின்றன. கூடவே, சிறிய படகுகளில் படுக்கை, ஜாடி, தேர் ரதம் போன்ற பொருட்களை ஏற்றி ஆற்றை கடக்கின்றனர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்கள் ஆற்றை நீந்திக் கடந்தாலும், சிற்பத்தில் அவர்கள் முழுமையாக மூழ்கியிருப்பது போன்றே காட்சிபடுத்தப்பட்டுள்ளது. ஏனெனில், அசிரிய பாணி கலை இப்படித்தான் இருக்குமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இது பற்றி தேடியதில், ’ஸ்வீடனில் பண்டைய கால மிதவை (Buoyancy) தொழில்நுட்பம்’ என்று தலைப்பிட்டிருந்த ஆய்வுக் கட்டுரையில் இந்த சிற்பத்தின் புகைப்படத்தை காணமுடிந்தது. அதில் ஊதப்பட்ட விலங்கு தோல்கள் மிதவை (Buoyancy) தொழில்நுட்பமாக பயன்படுத்தப்பட்டுள்ளதை இந்த சிற்பத்தை அடிப்படையாகக் கொண்டு விளக்கப்பட்டுள்ளது.

மேலும் அடிப்படை அறிவியலின் படி, காற்று ஊதப்பட்ட பொருள் நீரில் மிதப்பதற்கே (Float) உதவி செய்யும். ஆனால், Scuba diving செய்யும் வீரர்களின் Air tank-ல் இருக்கும் காற்று அவர்களை மிதக்க வைப்பதில்லையே ஏன் என்ற கேள்வி எழலாம். Scuba tank-ல் இருக்கும் காற்று 3,000 psi அழுத்தத்தில் compress செய்யப்பட்டிருக்கும். இதனால் இந்த காற்று Scuba diving வீரர்களை மிதக்க வைக்காது.
இதிலிருந்து, இந்த சிற்பத்தில் அசிரியப் படைவீரர்கள் ஆற்றைக் கடக்கவே காற்று ஊதப்பட்ட ஆட்டுத்தோல் பையை பயன்படுத்தினர் என்பது தெளிவு.
முடிவு:
நீரில் மூழ்க காற்று ஊதப்பட்ட ஆட்டுத்தோல் பயன்படுத்தப்பட்டதாக திரித்து தவறாக விளக்கப்படுகிறது. ஆற்றைக் கடக்க அசிரியப் படைவீரர்கள் காற்று ஊதப்பட்ட ஆட்டுத்தோலை பயன்படுத்தியதையே சிற்பம் காட்சிபடுத்துகிறது.