யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இஸ்லாமியர்கள் மீது தவறான கண்ணோட்டத்தை உருவாக்கவே இது போன்ற வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது.
பரவிய செய்தி
தன் மகளை நான் வேறு வீட்டிற்கு அனுப்ப விரும்பாமல் திருமணம் செய்தேன் என் ம(கள்)னைவி 2மாதம் கர்ப்பம். #வாழ்கமார்க்கம் இப்பப்புரியுதா இவனுங்க சொரியானை ஏன் தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடுகிறானுங்கன்னு

விரிவான விளக்கம்
திரைப்படங்கள் தொடங்கி பல இடங்களில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரிப்பது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில் தற்போது தனது சொந்த மகளை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய இஸ்லாமியர் என்ற வீடியோ ஒன்று டெரெண்டிங் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் பேசும் நபர், வேறு எங்கும் சென்று எனது மகள் கஷ்டபடக்கூடாது என்பதால் தானே திருமணம் செய்து கொண்டதாகவும், அவர் 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், எங்கள் வீட்டில் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனவும் அந்த நபர் தெரிவித்திருந்தார்.
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவில் உள்ள key frame-களை வைத்து தேடி பார்க்கையில், இந்த வீடியோ பல தரப்பில் இருந்து வைரலாகி வருவது தெரியவந்தது. இதையடுத்து அந்த வீடியோவில் உள்ள நபர் யார் என்பது குறித்து தேடி பார்த்தோம். அப்போது News Today Channel என்ற செய்தி ஊடகம், 'Raj Thakur faking as Muslim made this Video along with his Daughter to Malign Muslims' என்ற தலைப்பில் இந்த வீடியோவை பதிவிட்டிருந்தது. இதையடுத்து அந்த வீடியோவில் உள்ள நபர் டெல்லியை சேர்ந்த ராஜ் தாக்கூர் என்பதும், அவர் ஒரு யூடியூபர் என்பதும் தெரியவந்தது.

அந்த நபர் குறித்து தேடி பார்க்கையில், official_rajthakur__ என்ற அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் கிடைத்தது. அந்த பக்கத்தில், மார்ச் 5 மற்றும் 6ஆம் தேதி என இரு வீடியோகள் upload செய்யப்பட்டிருந்தது. “THIS VIDEO IS TOTALLY SCRIPTED NOT REAL” என்ற வார்த்தைகளுடன் இந்த வீடியோக்கள் இடம்பெற்றிருந்தது. மேலும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருட்டு தொடர்பாக பல்வேறு வீடியோக்கள் சித்தரிக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இன்ஸ்டாகிராம் மட்டுமல்லாமல் FACEBOOK மற்றும் YOUTUBEகளிலும் இந்த வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார்.


இதே போல் கடந்தாண்டு ஜனவரி 30ஆம் தேதி ராஜ் தாக்கூர் என்ற நபர், இஸ்லாமியர்களை போல் உடை அணிந்து கொண்டு, தான் இஸ்லாமியராக பிறந்ததற்கு வருத்தப்படுவதாகவும், அதனால் ஹிந்து மதத்திற்கு மாற உள்ளதாகவும் தெரிவித்து, “THIS VIDEO IS TOTALLY SCRIPTED NOT REAL” வாசகத்துடன் ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். அதே போல் கடந்தாண்டு பிப்ரவரி 6ஆம் தேதி, இஸ்லாமிய பெண்மணி ஒருவர் ஹிந்து மதத்திற்கு மாற உள்ளதாகவும் ஒரு வீடியோ பதிவிட்டிருந்தார். இதையடுத்து இஸ்லாமியர்களுக்கு குறித்து தவறாக சித்தரிக்கும் வீடியோக்களை இவர் தொடர்ச்சியாக பதிவேற்றம் செய்து வருவது தெரியவந்தது.
முடிவு,
கிடைத்திருக்கும் ஆதரங்களை வைத்து பார்க்கும் போது, சொந்த மகளை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய இஸ்லாமியர் என்று பரவும் வீடியோ தகவல் போலியானது. இஸ்லாமியர்கள் மீது தவறான கண்ணோட்டத்தை உருவாக்கவே இது போன்ற வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டதும் தெரியவந்தது.