யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வங்கதேசத்தில் ஜிஹாதிகளிடமிருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்காக தற்காப்பிற்கு தயாராகிவிட்ட சிறுபான்மையின பெண்கள் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவிய செய்தி
ஜிஹாதிகளிடமிருந்து தற்காப்பிற்கு தயாராகிவிட்டனர் சில பங்களாதேஷ் மைனாரிட்டி பெண்கள்
விரிவான விளக்கம்
வங்கதேசத்தில் இன்னும் பதற்றநிலையே நிலவி வரும் நிலையில், வங்கதேச கலவரம் குறித்து தொடர்ந்து பல செய்திகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருவதைக் காணமுடிகிறது.
இந்நிலையில் வங்கதேசத்தில் ஜிஹாதிகளிடமிருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்காக தற்காப்பிற்கு தயாராகிவிட்ட சிறுபான்மையின பெண்கள் என்று கூறி 47 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
बांग्लादेश में हिंदू महिलाओं ने अपनी रक्षा करना सीख लिया है..
— Sagar Kumar “Sudarshan News” (@KumaarSaagar) August 12, 2024
pic.twitter.com/Ox3Y2HnBfn
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், ‘Jago News’ ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் பரவி வரும் வீடியோவின் முழுப்பகுதி “மிளகாய்ப் பொடி கலந்த நீருடன் நிற்கும் மாணவிகள்“ என்று குறிப்பிட்டு ஜூலை 16 அன்று பதிவிடப்பட்டிருந்தது.
‘ENews71’ ஊடகப் பக்கத்திலும் பரவி வரும் வீடியோவில் உள்ள அதே காட்சிகளைக் குறிப்பிட்டு “தற்காப்புக்காக மிளகாய் பொடி கலந்த தண்ணீரை ஊற்றி மாணவர்கள் போராட்டம்“ என்ற தலைப்பில் ஜூலை 16 அன்று செய்தி வெளியிட்டிருந்தனர்.
அதில், “செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) மாலை 5:30 மணியளவில், மத்திய ஷஹீத் மினார் சதுக்கத்தில் தங்கியிருந்த சில மாணவிகளின் கைகளில் மிளகாய்த்தூள் கலந்த தண்ணீர் காணப்பட்டது. திங்களன்று சத்ரா லீக்கின் தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் தங்களை சித்திரவதை செய்ததாக டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்தனர். அதனால்தான் மாணவிகள் மிளகாய் பொடி கொண்டு வந்துள்ளனர் என்பதாகத் தெரிகிறது.
மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும், பிரதமரின் உரை மற்றும் ஒரு அம்சக் கோரிக்கையை வாபஸ் பெறக் கோரியும் மாணவர் இயக்கம் (Anti-discrimination Student Movement) செவ்வாய்க்கிழமை நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கண்டன ஊர்வலங்களை அறிவித்தது” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன்மூலம், இது கடந்த ஜூலை மாதத்தில் வங்கதேச அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் (பெண்கள்) சிலர் மிளகாய்ப் பொடி கலந்த தண்ணீர் வைத்திருந்த போது எடுக்கப்பட்ட வீடியோ என்பதையும், இதில் எந்த மத உள்நோக்கமும் இல்லை என்பதையும் அறியமுடிகிறது.
முடிவு:
நம் தேடலில், வங்கதேசத்தில் ஜிஹாதிகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தற்காப்பிற்கு தயாராகிவிட்ட சிறுபான்மையின பெண்கள் என்று பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறியமுடிகிறது.
