யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பேகம் பத்ருன்னெஸ்ஸா கல்லூரி மாணவர்கள் சத்ரா லீக் அமைப்பின் தலைவர்களை கல்லூரியில் கட்டி வைத்த வீடியோ, வங்கதேசத்தில் உள்ள இஸ்லாமிய இளைஞர்கள் வன்புணர்வு செய்வதற்காக, இந்து பெண்களை கயிற்றால் கட்டி வைக்கும் இஸ்லாமிய தோழிகள் என்று கூறி தவறாகப் பரவி வருகிறது.
பரவிய செய்தி
முஸ்லிம் இளைஞர்கள் வன்புணர்வு செய்வதற்காக இந்து பெண்களை கயிற்றால் கட்டி வைக்கும் இஸ்லாமிய தோழிகள்... மதவெறி ஒரு பெண்களை கூட எந்த அளவுக்கு மிருகமாக மாற்றி உள்ளது?? மதம் என்ன பிரிந்தது போதும் என்று ஃபயர் விடும் முட்டாள் நடுநிலை இந்துக்கள் உணர வேண்டும் திருந்த வேண்டும் இல்லையேல் அடுத்த 15-20 ஆண்டுகளில் தமிழகத்தின் நிலை இதுதான்..

விரிவான விளக்கம்
வங்கதேசத்தில் அசாதாரண சூழ்நிலையே இன்னும் நிலவி வருகிறது. இந்நிலையில், முஸ்லிம் இளைஞர்கள் வன்புணர்வு செய்வதற்காக இந்து பெண்களை கயிற்றால் கட்டி வைக்கும் இஸ்லாமிய தோழிகள் என்று கூறி 18 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று வாட்சாப் போன்ற சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
Remember the Yazidi women who were sold as slaves by ISIS?
— Niyak Ghorbani (نیاک) (@GhorbaniiNiyak) August 7, 2024
Now in Bangladesh, Muslims who have come to power are doing the same thing!
Religion of peace! pic.twitter.com/7Fi6Xfu522
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், பரவி வரும் வீடியோவைக் குறிப்பிட்டு ‘Jagonews24’ ஊடகப் பக்கத்தில் “மாணவர்கள் BCL தொழிலாளர்களைக் கட்டி வைத்து, காதை பிடிக்குமாறு உட்கார வைத்தனர்“ என்ற தலைப்பில் ஜூலை 17 அன்று செய்தி வெளியிட்டிருந்தனர்.
அதில், “தலைநகர் பக்ஷிபஜாரில் அமைந்துள்ள பேகம் பத்ருன்னெஸ்ஸா அரசு மகளிர் கல்லூரியில் சத்ரா லீக் தொண்டர்கள் சிலரை கட்டிப்போட்ட சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் புதன்கிழமை (ஜூலை 17) பிற்பகல் 2 மணியளவில் கல்லூரியின் குடியிருப்பு விடுதியில் நடந்தது.
மற்ற கல்வி நிறுவனங்களைப் போலவே இங்கும் சத்ரா லீக் அமைப்பினர் மட்டுமே ஆதிக்கம் செலுத்தினர். சத்ரா லீக்கின் தலைவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களுக்கு சாதாரண மாணவர்கள் தலைவணங்க வேண்டியிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் இன்று மதியம் சிலரை கட்டி வைத்தனர்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதே போன்று, பரவி வரும் வீடியோவைக் குறிப்பிட்டு ‘Dhaka Age’ யூடியூப் பக்கத்தில் வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. அதில் “பேகம் பத்ருன்னெஸ்ஸா கல்லூரி மாணவர்கள் சத்ரா லீக் அமைப்பின் தலைவர்களை கட்டி வைத்தது வைரலாகியுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளதையும் காண முடிகிறது.
இதன்மூலம், பேகம் பத்ருன்னெஸ்ஸா கல்லூரி மாணவர்கள் சத்ரா லீக் அமைப்பின் தலைவர்களை கல்லூரியில் கட்டி வைத்த வீடியோ, வங்கதேசத்தில் உள்ள இஸ்லாமிய இளைஞர்கள் வன்புணர்வு செய்வதற்காக, இந்து பெண்களை கயிற்றால் கட்டி வைக்கும் இஸ்லாமிய தோழிகள் என்று கூறி தவறாகப் பரவி வருகிறது என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், வங்கதேசத்தில் உள்ள இஸ்லாமிய இளைஞர்கள் வன்புணர்வு செய்வதற்காக, இந்து பெண்களை கயிற்றால் கட்டி வைக்கும் இஸ்லாமிய தோழிகள் என்று பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறியமுடிகிறது.