யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரவி வரும் வீடியோவில் இருப்பது இந்துசமய அறநிலையத்துறை சார்பில் தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தம் அல்ல. தனிநபர்களால் அவர்களது 16 குடும்பங்களுக்காக மட்டும் தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தம்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
தமிழ்நாட்டில் உள்ள கோவில் ஒன்றில் வழங்கப்பட்ட பஞ்சாமிர்தம் என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில் ஒரு பெரிய பாத்திரத்தில் உள்ள பஞ்சாமிர்தத்தை பலர் கைகளால் எடுத்து சுகாதாரமற்ற முறையில் பாட்டிலில் அடைப்பதை தெளிவாகக் காண முடிகிறது.
மேலும் வீடியோவின் கமெண்ட்களில், இந்துசமய அறநிலையத்துறை சார்பில் வழங்கப்பட்ட பிரசாதம் தான் இது என்றும் குறிப்பிட்டு பரப்பி வருகின்றனர்.

எந்த கோவில்னு தெரியலையே 🤧🤮 pic.twitter.com/CkRZImUica
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இந்த வீடியோவை பதிவிட்டவரின் பக்கத்திற்கு நம்மை அழைத்து சென்றது.
“Muthu Malan vlog” என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், பரவி வரும் வீடியோ "பஞ்சாமிர்தம்" என்று குறிப்பிட்டு இரண்டு தினங்களுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டிருந்தது.
வீடியோவின் கமெண்டில் “இந்த பஞ்சாமிர்தம் விற்பனைக்கு இல்லை. எங்களுடைய 16 குடும்பங்களுக்கு மட்டுமே நாங்கள் தனியாக செய்து கொண்டோம். இது கோவில் பிரசாதம், தவறாக யாரும் கமெண்ட் பண்ண வேண்டாம். இது எங்களுடைய தனிப்பட்ட பயன்பாட்டிற்காக தாயார் பண்ணிக் கொண்டோம். நாங்கள் இதை சுத்தமாகவும் சுகாதார முறையாகவும் தான் பயன்படுத்துகிறோம். இதில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும்“ என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

இதன் மூலம், இது இந்துசமய அறநிலையத்துறை சார்பில் தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தம் அல்ல. தனிநபர்களால் அவர்களது 16 குடும்பங்களுக்காக மட்டும் தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தம் என்பது உறுதியாகிறது.
முடிவு:
நம் தேடலில், இந்து அறநிலையத்துறை சார்பில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தம் என்று கூறி பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.
