யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த 2024 ஜூலையில், ஆந்திர பிரதேசத்தின் பல்நாடு மாவட்டத்தில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சேக் ரஷீத் என்பவர் நடுசாலையில் வைத்து கொலை செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ இது. இந்த பழைய வீடியோவை கவின் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தோடு தொடர்புபடுத்தி தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த, பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த கவின் செல்வகணேஷ், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே, கடந்த 27ம் தேதி கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், இந்த வழக்கில் கைதான சுர்ஜித், அவரது தந்தை சரவணன் ஆகியோர் நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகினர். சுர்ஜித் தாயான எஸ்.ஐ., கிருஷ்ணவேணி, வரும் 15ம் தேதிக்குள், திருநெல்வேலியில் உள்ள, சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கவின் கொலை செய்யப்படும் காட்சி என்று கூறி வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில் நெடுஞ்சாலையின் நடுவே இளைஞர் ஒருவர் மற்றொரு நபரால் கொலை செய்யப்படுவதைத் தெளிவாகக் காண முடிகிறது.
கவின் கொல்லப்பட வீடியோ காட்சிகள் தற்போது பரவி வருகிறது 😭😭😭😭 pic.twitter.com/qmeeM4gLLz
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், வீடியோவில் இருப்பவர் கவின் அல்ல என்பதை அறிய முடிந்தது.
கடந்த 2024 ஜூலையில், ஆந்திர பிரதேசத்தின் பல்நாடு மாவட்டத்தில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சேக் ரஷீத் என்பவர் நடுசாலையில் வைத்து கொலை செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ இது என்பதை “Indian Express” கடந்த 2024 ஜூலை 18 அன்று வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் அறிய முடிந்தது.

இது குறித்து “The Hindu” ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியிலும், “ஜூலை 17 ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் பல்நாடு மாவட்டத்தில் உள்ள வினுகொண்டா நகரில், குற்றம் சாட்டப்பட்ட ஜிலானி, ரஷீத் (25) என்பவரை கத்தியால் தாக்கி கொடூரமான கொலை செய்தார். இந்த சம்பவம் நகரத்தின் பரபரப்பான சாலையில் நடந்தது, இது பொதுமக்கள் மற்றும் அங்கு வசிப்பவர்களிடையே பீதியை ஏற்படுத்தியது. தனிப்பட்ட பகை காரணமாக இந்தக் கொலை நடந்ததாக காவல் கண்காணிப்பாளர் காஞ்சி ஸ்ரீனிவாச ராவ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்“ என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் மூலம் கடந்த ஆண்டு, ஆந்திர பிரதேசத்தின் பல்நாடு மாவட்டத்தில் நடந்த கொலை சம்பவத்தை, கவின் கொலை செய்யப்பட்ட காட்சி என்று குறிப்பிட்டு பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், கவின் கொலை செய்யப்பட்ட காட்சி என்று பரவும் வீடியோ ஆந்திர பிரதேசத்தின் பல்நாடு மாவட்டத்தில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சேக் ரஷீத் என்பவர் கடந்த 2024-ல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தோடு தொடர்புடையது என்பதை தெளிவாக அறிய முடிகிறது.