யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஒளரங்கசீப்பை திட்டி தகாத வார்த்தையில் பதாகை வைத்திருந்ததாக சமூக ஊடகங்களில் புகைப்படம் பரவி வந்த நிலையில், வைரலாகும் தனது புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டது என்று குறிப்பிட்டு திரைப்பட இயக்குனர் ரத்னகுமார் பதிவுசெய்துள்ளார்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
சிஎஸ்கே கிரிக்கெட் அணியின் ரசிகர் ஒருவர் ஒளரங்கசீப்பை திட்டி தகாத வார்த்தையில் பதாகை வைத்திருப்பதைப் பாருங்கள் என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதனை இந்துத்துவா அமைப்பினர் பலரும் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகப் பரப்பி வருவதையும் காண முடிகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், பரவி வரும் புகைப்பத்தில் இருப்பவர் மேயாத மான், ஆடை, குலுகுலு ஆகிய திரைப்படங்களை இயக்கிய திரைப்பட இயக்குனர் ரத்னகுமார் என்பதை அறிய முடிந்தது.
எனவே அவரின் எக்ஸ் பக்கத்தை ஆய்வு செய்து பார்த்ததில் மார்ச் 23 அன்று சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரைக் காண அவர் சென்றிருந்ததைக் காண முடிந்தது. மேலும் இது குறித்து அவர் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கிடையே நடந்த போட்டியை மைதானத்திலிருந்து பார்த்தது குறித்து புகைப்படம் ஒன்றையும் பதிவு செய்திருந்தார்.
கையில் பதாகையுடன் உள்ள அந்த புகைப்படத்தில், “The Man, The Myth, The Mahi” என்று எழுதப்பட்டிருப்பதையும் தெளிவாகக் காண முடிகிறது. அதில் அவர் ஒளரங்கசீப் குறித்து எந்த வாசகத்தையும் எழுதியிருக்கவில்லை.
மேலும் தேடியதில், ஒளரங்கசீப்பை திட்டி தகாத வார்த்தையில் இவர் பதாகை வைத்திருந்ததாக சமூக ஊடகங்களில் புகைப்படம் பரவி வந்த நிலையில், வைரலாகும் படம் மார்பிங் செய்யப்பட்டது என்று குறிப்பிட்டு அவர் மற்றொரு பதிவு ஒன்றையும் பதிவுசெய்திருந்தார்.
இதன் மூலம் CSK ரசிகர் ஒருவர் ஒளரங்கசீப்பை திட்டி தகாத வார்த்தையில் பதாகை வைத்திருந்ததாகக் குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், CSK ரசிகர் ஒருவர் ஒளரங்கசீப்பை திட்டி தகாத வார்த்தையில் பதாகை வைத்திருந்ததாக சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படம் போலியானது என்பது உறுதியாகிறது.