யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வங்கதேசத்தினர் இந்து குடும்பங்களை எவ்வாறு கொல்கிறார்கள் பாருங்கள் என்று கூறி பரவும் இந்த வீடியோ, ஜூலை 27, 2024 அன்று வங்கதேசத்தில் அமைந்துள்ள பிரம்மன்பாரியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கடன் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டபோது எடுக்கப்பட்டது.
பரவிய செய்தி
வங்கதேசத்தினர் இந்து குடும்பங்களை எவ்வாறு கொல்கிறார்கள் பாருங்கள். தொப்புள் கொடி உறவு தொப்புள் கொடி உறவு என்று சொல்லிக் கொண்டே இருங்கடா நாளை ஒருநாள் இது நமக்கும் நடக்கும்..
விரிவான விளக்கம்
வங்கதேச கலவரத்தில் நானூறுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அங்கு இந்து குடும்பங்கள் கொல்லப்படுவதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதனை வலதுசாரிகள் பலரும் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் பரப்பி வருவதையும் காணமுடிகிறது.

— Balm (@Sharabh_Vishnu_) August 7, 2024
An entire Hindu family was wiped out by Islamic jihadists in Bangladesh just because they were Hindus. They know what they are doing, they are monster, they are evil, didn't spare even kids, and they will keep doing it till the end of last Hindu. Where are the eyes of the world? pic.twitter.com/VvPZKWzuep
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், பரவி வரும் வீடியோ குறித்து ‘Mzamin‘ ஊடகப் பக்கத்தில் “கணவன், மனைவி உட்பட 4 பேரின் சடலங்கள் நபிநகரில் உள்ள வீட்டில் கண்டெடுக்கப்பட்டன“ என்ற தலைப்பில் ஜூலை 28 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது.
அதில், “பிரமன்பாரியாவின் நபிநகர் நகராட்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த உடல்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டன. உயிரிழந்தவர்கள் சோஹாக் (33), அவரது மனைவி ஜன்னத் (24), அவர்களது மகள்கள் ஃபஹிமா (4), சாடியா (2) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதையடுத்து காவல்நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, போலீஸார் வந்து உடல்களை மீட்டனர். அப்பகுதி மக்களிடம் பேசி பார்த்தும் எதுவும் கிடைக்காத நிலையில், கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என அப்பகுதியினர் கருதுகின்றனர்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதே போன்று ‘Kalerkantho‘ ஊடகப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், “ஞாயிற்றுக்கிழமை காலை பிரம்மன்பரியாவின் நபிநகர் முனிசிபல் பகுதியின் விஜய்பராவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரின் சடலங்களை போலீஸார் மீட்டனர். அவர்களில் இருவர் தூக்கில் தொங்கிய நிலையிலும், மீதமுள்ளவர்கள் படுக்கையில் தூக்கில் தொங்கிய நிலையிலும் காணப்பட்டனர்.
இதுகுறித்து இறந்தவரின் சகோதரி (சோஹாக்கின் சகோதரி) யாச்மின் அக்தர் கூறுகையில், 'எனது சகோதரரிடம் 4-5 லட்சம் ரூபாய் கடன் இருந்தது. நான் வேறு எந்த பிரச்சனையும் கேட்கவில்லை' என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து, பிராமணபரியா காவல் கண்காணிப்பாளர் முகமது ஷகாவத் ஹொசைன் கூறுகையில், உடல் கிடந்த விதம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த முதற்கட்ட விசாரணையில், 'குடும்பச்சண்டை காரணமாக சோஹாக் முதலில் தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொன்றிருக்கலாம். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும் இந்த விஷயம் இன்னும் தெளிவாகத் தெரியும்.“ என்றும் அதில் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர்.

இதன்மூலம், வங்கதேசத்தினர் இந்து குடும்பங்களை எவ்வாறு கொல்கிறார்கள் பாருங்கள் என்று கூறி பரவும் இந்த வீடியோ, வங்கதேசத்தில் அமைந்துள்ள பிரம்மன்பாரியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தற்கொலை செய்துகொண்ட போது எடுக்கப்பட்ட வீடியோ என்பதை அறிய முடிகிறது. இதை தற்போது நடைபெற்று வரும் வங்கதேச கலவரத்தோடு தொடர்புபடுத்தி வலதுசாரிகள் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், வங்கதேசத்தினர் இந்து குடும்பங்களை எவ்வாறு கொல்கிறார்கள் பாருங்கள் என்று கூறி பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.
