YouTurn

’800 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கோவிலில் கார் சிற்பம்’ உண்மை என்ன?

’800 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கோவிலில் கார் சிற்பம்’ உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

கோவில் 800 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டு இருப்பினும் கார், விமானம், சைக்கிள் போன்ற சிற்பம் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர்த்தான் செதுக்கப்பட்டு இருக்க வேண்டும்.

பரவிய செய்தி

800 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கோவிலில் கார் எப்படி வந்தது? இந்த ஆலயம் கட்டப்பட்ட காலத்தில் மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரம் இங்கு பிறக்கவில்லை என்பதே உண்மை.

800 years old hindu temple car

X link

விரிவான விளக்கம்

சுமார் 800 ஆண்டுகள் முன்னர் கட்டப்பட்ட கோவிலில் உள்ள சிற்பத்தில் எப்படி கார், விமானம், சைக்கிள் போன்ற சிற்பங்கள் வந்தது? அப்போது மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரம் இங்கு வரவில்லை. அப்படியானால் இவை மேற்கத்தியர்களின் கண்டுபிடிப்பு இல்லை எனக் கூறும் வகையில் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பகிரப்படுகிறது. 

https://x.com/i/web/status/1831138775214223575

உண்மை என்ன?

பரவக் கூடிய வீடியோவில் ‘Praveen Mohan’ என்ற வாட்டர் மார்க் உள்ளது. அதனைக் கொண்டு தேடியதில், இந்த வீடியோவை பிரபல யூடியூபர் பிரவீன் மோகன் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி பதிவிட்டுள்ளார். 

https://www.instagram.com/p/C_A00nqOn9E/

இந்து கோவிலில் விமானம், கார், துப்பாக்கி போன்றவை செதுக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வியுடன் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். மேலும் இந்தோனேசியா பாலியில் உள்ள ‘Pura Dalem Jagaraga Temple’ என்ற இடத்தில் எடுத்த முழு வீடியோவும் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார். 

அதில், பாலியில் உள்ள பழமையான கோவிலில் விமானம், சைக்கிள், கார், துப்பாக்கி மற்றும் நவீன பொருட்கள் பல உள்ளன. இது 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக உள்ளூர் வாசிகள் கூறுகின்றனர். டைம் டிராவல் செய்து இந்த சிற்பம் கட்டினார்களா அல்லது கற்பனையால் செதுக்கினார்களா? எனக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த முழு வீடியோவில் உள்ளூரை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவர் இது பற்றிக் கூறுகையில், இந்த கோவில் 12ம் நூற்றாண்டு கட்டப்பட்டது. ஆனால், பாலி (Bali) மீது டச்சுக்காரர்கள் தாக்குதல் நடத்திய போது இக்கோவில் அழிந்துவிட்டது. பிறகு மீண்டும் 1865 காலகட்டத்தில் இது கட்டப்பட்டது எனக் கூறுகிறார். அப்போதுதான் இந்த கார், விமானம் போன்ற சிற்பங்கள் இடம் பெற்றதாகவும் குறிப்பிடுகிறார். 

மேலும் பிரவீன் மோகன் பேசுகையில், முதல் விமானம் 1903ம் ஆண்டுதான் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் இந்த சிற்பத்தில் இருப்பது போன்ற கார் 1865 காலகட்டத்தில் வரவில்லை என்றும் சந்தேகங்களை எழுப்பியுள்ளார். அதுமட்டுமின்றி இந்த சிற்பம் இந்தோனேசியா சுதந்திரம் அடைந்த பிறகுதான் செதுக்கப்பட்டு இருக்க வேண்டும் என்றும் சொல்கிறார். 

மேற்கொண்டு இந்த கோவில் பற்றித் தேடியதில், ‘Asian Historical Architecture’ என்ற தளத்தில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டு இருந்ததைக் காண முடிந்தது. இப்பகுதி மீது 1846ல் டச்சுக்காரர்களால் தாக்குதல் நடத்தப்பட்டதும் கோவில் சேதமானதும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மறு கட்டுமானம் 1849-65 காலகட்டத்தில் நடந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Pura Dalem Jagaraga


பிற்காலத்தில் கோவிலை அலங்கரிக்க ஃபோர்டு மாடல் கார், விமானம் போன்றவை செதுக்கப்பட்டுள்ளன. 1910ம் ஆண்டு வரை டச்சுக்காரர்கள் இவற்றைக் கொண்டு வரவில்லை. எனவே அதற்கு பிறகே இது செதுக்கப்பட்டு இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேற்கண்ட தகவலின் அடிப்படையில் பாலியில் உள்ள கோவிலில் கார், விமானம், சைக்கிள் போன்ற சிற்பங்கள் 800 ஆண்டுகளுக்கு முன்னரே செதுக்கப்பட்டுவிட்டன என்பது தவறான தகவல் என்பதை அறிய முடிகிறது. அவை சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர்த்தான் செதுக்கப்பட்டு இருக்க வேண்டும். 

இதேபோன்று இதற்கு முன்னர் 1300 ஆண்டுகள் பழமையான திருச்சி பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் உள்ள தூணில் ஒருவர் சைக்கிள் ஓட்டுவது போன்ற உருவம் செதுக்கப்பட்டுள்ளது என்றும் சைக்கிளைத் தமிழர்கள் 1300 ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடித்துவிட்டதாகவும் ஒரு தகவல் பரவியது. 

ஆனால், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கோவிலில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றதாகவும் அச்சீரமைப்பு பணியின் போது மிதிவண்டி சிற்பம் செதுக்கப்பட்டதாகவும் கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்தும் நமது யூடர்ன் தளத்தில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சைக்கிளை கண்டுபிடித்தது தமிழனா ? கல்வெட்டு ஆதாரம் நம்பலாமா ?

அப்படி பாலியில் உள்ள கோவில் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இருப்பினும் கார், விமானம் போன்ற சிற்பங்கள் பிற்காலத்தில்தான் செதுக்கப்பட்டு இருக்கும். 

பிரவீன் மோகன் தனது முழு வீடியோவில் இது பற்றிய தகவல் கூறியிருந்தாலும் click bait-ற்காக பதிவிட்டுந்த shorts வீடியோ தவறாகப் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. அதனைத்தான் பலரும் தற்போது சமூக வலைத்தளத்தில் பரப்புகின்றனர்.

முடிவு: 

800 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோவிலில் கார் சிற்பம் இடம் பெற்று இருப்பதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. அவை சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் செதுக்கப்பட்டவையாக இருக்கக் கூடும்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க