தொகுதிகள் மறுவரையறையை ஏன் தமிழ்நாடு எதிர்க்கிறது?
மாநிலங்களின் பிரதிநிதித்துவ விகிதம் குறையும் என்றும் மாநிலங்களின் குரல் நாடாளுமன்றத்தில் சரியாகப் பிரதிநிதித்துவம் செய்யப்படாது என்றும் கூறித்தான் தமிழ்நாடு இதனை எதிர்க்கிறது.
2026ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகு நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டதிலிருந்து அதற்குத் தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இவ்வாறு தொகுதி மறுவரையறை செய்யப்படுவது நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கக்கூடும் என்று இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் கடந்த மார்ச் 5ஆம் தேதியன்று அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அரசியலமைப்பு சொல்வதென்ன ?
நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்குத் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் பிராந்திய தொகுதிகளின் எல்லைகளை நிர்ணயிக்கும் செயல்முறை தான் தொகுதி மறுவரையறை என்னும் நிகழ்முறையாகும். இதில் பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (ST) ஆகியோருக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கையைத் தீர்மானிப்பதும் அடங்கும்.
இந்த தொகுதி மறுவரையறை பற்றி அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்துகள் 81, 82 ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. சரத்து 81.2.a மாநிலங்களில் இருக்கும் தொகுதிகள் அதன் மக்கள்தொகைக்கு ஏற்றவாறு இருக்கவேண்டுமென்று குறிப்பிடுகிறது.

சரத்து 82ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்ததும் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் மக்களவையில் தொகுதிகள் ஒதுக்கப்படுவது, ஒவ்வொரு மாநிலங்களையும் தொகுதிகளாகப் பிரிப்பது மறுசீரமைக்கப்படும் என்று குறிப்பிடுகிறது.
இந்த நடைமுறை 1951ஆம் ஆண்டிலிருந்து 1971 வரை பின்பற்றப்பட்டு வந்தது. 1971ஆம் ஆண்டில் இந்திய மக்கள்தொகை 54.8 கோடியாக இருந்தது. அதில் 10.1 லட்சம் மக்களுக்கு ஒரு மக்களவை பிரதிநிதி என்ற அடிப்படையில் மொத்தம் 543 நாடாளுமன்றத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. அதன் பிறகு தொகுதிகள் மறுவரையறை செய்யப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது.
தொகுதி மறுவரையறை நிறுத்தி வைக்கப்பட்டது ஏன்?
1976ஆம் ஆண்டு ஒன்றிய அரசு மக்கள்தொகை கட்டுப்பாட்டை முன்னிலைப்படுத்தியது. இதனால் மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் விதமாக 25 ஆண்டுகள் தொகுதிகள் மறுவரையறை செய்வது நிறுத்திவைத்தது. மேலும், 2002 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்தின் படி தொகுதி மறுவரையறை என்பது 2026 வரை நிறுத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் வரும் 2026ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படுமென்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்த தொகுதிகள் மறுவரையறை இரண்டு விதமாகச் செய்யப்பட வாய்ப்புகள் இருக்கிறது.
ஒன்று நடப்பிலிருக்கும் 543 நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றாமல் மாநிலங்களுக்கான தொகுதிப் பங்கீட்டைச் செய்வது. மற்றொன்று, தற்போதைய மக்கள்தொகை பற்றிய கணிப்புகளின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை 848ஆக உயர்த்தி அதன்படி தொகுதிகளை மாநிலங்களுக்கிடையில் மறுபங்கீடு செய்வது.
இந்த இரண்டு சாத்தியமான வகைகளில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும்போது, தென்மாநிலங்களுக்கு எந்த வகையான பாதிப்புகள் ஏற்படும் என்பது தான் இங்கே முக்கியமான கேள்வி.
நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 543ஆக இருக்கும் வகையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் போது, உத்திரப் பிரதேசத்தில் நாடாளுமன்றத் தொகுதிகள் 80லிருந்து 91ஆக உயர்கிறது. பீகாரில் 40லிருந்து 50ஆக உயர்கிறது. அதேவேளையில், தமிழ்நாட்டில் தொகுதி எண்ணிக்கை 39லிருந்து 31ஆகக் குறைகிறது. கேரளாவில் 20லிருந்து 12ஆகக் குறைகிறது.

இந்த வகையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543ஆக வைத்துக்கொண்டு தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், வடமாநிலங்களான பீகார், உத்திரப் பிரதேசம் ஆகியவற்றுக்கு 10, 11 தொகுதிகள் அதிகமாகவும், தமிழ்நாடு, கேரளா போன்ற தென்மாநிலங்களுக்கு 8 தொகுதிகள் குறைவாகவும் கிடைக்கும். இதனை எந்த மாநிலங்களும் எதிர்ப்பில்லாமல் ஏற்றுக்கொள்ளாது.
இதனால் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 848ஆக உயர்த்தப்பட்டு அதன்படி தொகுதிகள் மறுவரையறை செய்யப்படவே வாய்ப்புகள் அதிகமிருக்கிறது. இந்த 848 என்பது தோராயமான கணக்கீடுதான். குறிப்பாக தொகுதிகள் எத்தனை எண்ணிக்கைகள் உயர்த்தப்படும் என்று இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் எண்ணிக்கை அதிகரிக்கப்படவே வாய்ப்புகள் இருக்கிறது. ஏனெனில், 2023 மே 28 அன்று மோடியால் திறந்து வைக்கப்பட்ட பாராளுமன்ற கட்டிடத்தில் 888 இருக்கைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை 848ஆக உயர்த்தி தொகுதிகள் மறுபங்கீடு செய்யப்படும் போது, தமிழ்நாட்டில் தொகுதிகளின் எண்ணிக்கை 49ஆக உயரும். அதாவது 10 தொகுதிகள் அதிகரிக்கும். இதனடிப்படையில் தான் அமித்ஷா ‘தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தமிழ்நாட்டில் ஒரு மக்களவைத் தொகுதி கூட குறையாது’ என்று பேசியிருக்கிறார்.
ஆனால் அதேவேளையில், உத்திரப் பிரதேச மாநிலத்தில் 80லிருந்து 63 தொகுதிகள் அதிகரித்து 143ஆக உயரும். பீகாரில் 40லிருந்து 39 தொகுதிகள் அதிகரித்து 79ஆக உயரும் என்று கணக்கிடப்படுகிறது. இது தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவ விகிதத்தை வெகுவாக பாதிக்கிறது.
543 எண்ணிக்கையில் 39 தொகுதிகள் என்பது 7.18 சதவீதமாகும். அதே 848 எண்ணிக்கையில் 49 தொகுதிகள் என்பது 5.77 சதவீதம் மட்டுமேயாகும். இதே போல் கேரளாவில் பிரதிநிதித்துவ விகிதம் 3.68 சதவீதத்திலிருந்து 2.35 சதவீதமாகக் குறையும். இவ்வாறு தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும்போது தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களின் பிரதிநிதித்துவ விகிதம் குறையும். இது மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைச் சரியாக அமல்படுத்திய மாநில தண்டிப்பது போல் இருக்கும் என்று கூறி தமிழ்நாடு இதனை எதிர்க்கிறது.
மேலும், கடந்த வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் தொகுதிகள் மறுவரையறை 2000ஆம் ஆண்டிலிருந்து 2026 வரை நிறுத்திவைக்கப்பட்டது போல் தற்போதும் இது 2026லிருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படவேண்டும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் முன்மொழியப்பட்டது.
மாநிலங்களின் பிரதிநிதித்துவ விகிதம் குறையும் என்றும் அதனால் மாநிலங்களின் குரல் நாடாளுமன்றத்தில் சரியாகப் பிரதிநிதித்துவம் செய்யப்படாது என்றும் கூறித்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்சிகள் தொகுதிகளை மறுவரையறை செய்யும் ஒன்றிய அரசின் திட்டத்தை எதிர்க்கின்றன.