YouTurn

சாதி ரீதியிலான இட ஒதுக்கீடு அவசியமா? பதிலளிக்கும் RTI தகவல்!

சாதி ரீதியிலான இட ஒதுக்கீடு அவசியமா? பதிலளிக்கும் RTI தகவல்!
தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தில் படிக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசுத் தேர்வு இயக்ககத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் யூடர்ன் சில தரவுகளை கோரியது. அத்தரவுகளின் அடிப்படையில், அரசு மற்றும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களின் சாதி பின்புலம்; இடைநிற்றல் எந்த சாதியில் அதிகம் உள்ளது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு கிடைத்து. மேலும், சாதிக்கும் பொருளாதார நிலைக்கும் எந்த அளவு தொடர்புள்ளது என்பதையும் காண முடிந்தது.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கத் தொடங்கிய காலம் முதலே அதற்கு எதிரான வாதங்கள் எழத் தொடங்கியது. சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வேண்டாம்; இந்த முறையால்தான் சாதி இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது; பட்டியல் மற்றும் பழங்குடி சாதியினருக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்கிற தவறான புரிதல்களும் சமூகத்தில் உள்ளது. சாதி அடிப்படையில் ஒடுக்குமுறை தொடர்ந்து நிலவுவதால் அதனை கொண்டே அவர்களுக்கான உரிமையும் வழங்கப்படுகிறது. 

இட ஒதுக்கீடு: 

தமிழ்நாட்டை பொருத்த அளவில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பாட்டவர்களுக்கு 30%, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20%, பட்டியல் சாதியினருக்கு 18%, பட்டியல் பழங்குடியினர்களுக்கு 1% என மொத்தம் 69% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதை தவிர்த்து 31 சதவீதம் பொது பிரிவாக உள்ளது. 

இதே போல் ஒன்றிய அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27%, பட்டியல் சாதியினருக்கு 15%, பட்டியல் பழங்குடியினருக்கு 7.5% என மொத்தம் 49.5 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கிறது. மீதமுள்ள 50.5 சதவீதம் அனைத்து பிரிவினரும் போட்டியிடும் வகையில் பொதுப்பிரிவாக உள்ளது. 

10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் சமூக பின்னணி: 

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 2017 முதல் 2023ம் ஆண்டு வரை 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கை, அவர்களது சாதிய பின்புலம், அவர்களது பள்ளி விவரம் ஆகியவற்றை பெற்றோம். 

கடந்த 7 வருடத்தில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய ஓட்டு மொத்த மாணவர்களின் சமூக பின்னணி அடிப்படையில் பார்த்தால், சராசரியாக பொது பிரிவினர் 2.21%, பிற்படுத்தப்பட்டோர் 41.53%, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 30.96%, பட்டியல் சாதியினர் 24.16%, பட்டியல் பழங்குடியினர் 1.13 சதவீதமாக உள்ளனர். 



இதே போல் 12ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களில் பொது பிரிவினர் 2.71%, பிற்படுத்தப்பட்டோர் 43.14%, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 30.22%, பட்டியல் சாதியினர் 22.97%, பட்டியல் பழங்குடியினர் 0.96 சதவீதமாக உள்ளது. 



10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களின் சமூக பின்னணியிலான விகிதம் கிட்டத்தட்ட ஒரே அளவே உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படாத நிலையில், இந்த விகிதத்தின் அடிப்படையில் தான் தமிழ்நாட்டு மக்கள் தொகை இருக்கும் என்பதை கணிக்க முடிகிறது. 

அரசு மற்றும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களின் சமூக பின்னணி: 

கடந்த 7 ஆண்டில் (2017 - 2023) 10ம் வகுப்பு தேர்வு எழுதிய பொதுப் பிரிவுமானவர்களில் 62 சதவீதத்தினர் தனியார் பள்ளிகளில் பயின்றுள்ளனர். மீதம் 18 சதவீதத்தினர் அரசு பள்ளியிலும் 20 சதவீதத்தினர் அரசு உதவி பெறும் பள்ளியிலும் பயின்றுள்ளனர். 

அடுத்தபடியாக பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் முறையே 40 மற்றும் 25 சதவீதத்தினர் தனியார் பள்ளியில் பயின்றுள்ளனர். மற்றவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்றுள்ளனர். 



இதேபோல் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் முறையே 16 மற்றும் 12 சதவீதத்தினர் மட்டுமே தனியார் பள்ளியில் பயின்றுள்ளனர். மேலே உள்ள படத்தில் இத்தகவலை ஒப்பிட்டு காணலாம். 

12ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் சமூக பின்னணியும் பள்ளி குறித்த விவரமும் கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது. அதிலும் பொது பிரிவு மாணவர்கள் அதிக அளவில் தனியார் பள்ளியில் படிப்பதை காண முடிகிறது. பொது பிரிவினரை காட்டிலும் மற்ற சாதியினர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலேயே அதிகம் படித்துள்ளனர்.



10 மற்றும் 12ம் வகுப்பு இரண்டிலும் சாதிய படிநிலையில் கீழே உள்ள மாணவர்கள் அதிக அளவில் அரசு பள்ளியில் பயில்கின்றனர். இதற்கு நேர் எதிராக பொது பிரிவு மாணவர்கள் தனியார் பள்ளியிலேயே அதிக அளவில் பயில்கின்றனர். கட்டணம் செலுத்தி தனியார் பள்ளியில் படிக்க வைப்பது அவர்களின் பொருளாதார நிலையினையே காண்பிக்கிறது. 

இடைநிற்றல் மாணவர்களின் சமூக பின்னணி:

ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களைவிட 12ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதற்கு முக்கிய காரணம் இடைநிற்றலே. பத்தாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்துவது இன்றும் தொடர்ந்து வருகிறது. கடந்த 7 ஆண்டுகளின் கணக்குப்படி சராசரியாக 1.06 லட்சம் மாணவர்கள் பள்ளிப்படிப்பை 10ம் வகுப்போடு நிறுத்திவிடுகின்றனர். இவ்வாறு நிகழும் இடைநிற்றலுக்கும் சாதிய பின்புலத்திற்கும் தொடர்பு உள்ளதா என்று பார்த்தோம். 



கடந்த 7 ஆண்டில் சாதி வாரியாக மாணவர்களின் இடைநிற்றல் என்பது பிற்படுத்தப்பட்டோர் 8.21%, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 13.73%, பட்டியல் சாதியினர் 15.93%, பட்டியல் பழங்குடியினர் 25.28 சதவீதமாக உள்ளது. சாதிய படிநிலையில் கீழே செல்ல செல்ல இடைநிற்றல் அதிகரித்திப்பதை இதில் காணலாம். 

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தரவுகளை கொண்டு பார்க்கையில் சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டின் அவசியத்தை புரிந்து கொள்ள முடிகிறது.

RTI மூலம் பெறப்பட்ட பதில்
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை