தமிழ்நாட்டின் பள்ளிகளுக்கு ஒன்றிய அரசு கொடுக்க வேண்டிய நிதி எங்கே ?
சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ரூபாய். 2,151 கோடி 60 லட்சம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதுவரை ஒரு பைசா கூட விடுவிக்கப்படவில்லை.
’சமக்ரா சிக்ஷா அபியான்' (SSA) திட்டம் என்பது பள்ளிக்கல்விக்கான ஒருங்கிணைந்த திட்டமாகும். இது அங்கன்வாடியிலிருந்து 12ஆம் வகுப்பு வரை பள்ளிக்கல்வியின் அனைத்து வரம்புகளையும் உள்ளடக்கியதாக இருக்குமென்றும் குறிப்பிடப்படுகிறது. இத்திட்டம் 2018-19 கல்வியாண்டிலிருந்து செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு பெறத் தேசிய கல்விக்கொள்கையின் அம்சங்களை ஏற்க வேண்டும் என்று ஒன்றிய அரசு நிர்பந்திக்கிறது. ஆனால், தேசிய கல்விக்கொள்கை 2020க்கு மேல்தான் அமலுக்கு வந்தது.
இந்த திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த மொத்த தொகையில் 60% ஒன்றிய அரசும் 40% மாநில அரசும் கொடுக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் சென்ற நிதியாண்டில் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு நிதி அளித்திருந்தாலும், கொடுக்கவேண்டிய மொத்த நிதியில் இன்னும் 230 கோடி ரூபாய் வரை நிலுவையில் உள்ளது. இந்த கல்வியாண்டிற்கான தொகையை ஒன்றிய அரசு இன்னும் முதல் தவணையை கூட விடுவிக்கவில்லை.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் இந்த நிதியை விடுவிப்போம் என்று ஒன்றிய அரசு நிர்பந்திக்கிறது. இந்த நிர்பந்தத்தை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது. இது குறித்துக் கடந்த ஓராண்டாகத் தமிழ்நாடு அரசிற்கும் ஒன்றிய அரசுக்கும் இடையில் மோதல் போக்கு இருந்து வருகிறது.
இந்நிலையில், தேசிய கல்விக் கொள்கையையும், மும்மொழிக் கொள்கையையும் தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பதால், தமிழ்நாட்டை ஒன்றிய அரசு வஞ்சிக்கும் விதமாக சமக்ரா சிக்ஷா அபியான் (SSA) திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய ரூபாய். 2,152 கோடியை ஒன்றிய அரசு பிற மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்துள்ளது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அவரது ’எக்ஸ் (ட்விட்டர்)’ பக்கத்தில் கடந்த பிப்ரவரி 9 அன்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு எதிர்வினையாற்றும் விதமாகத் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ’சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்குச் சமீபத்தில் வழங்கப்பட்ட நிதியை, 36 மாநிலங்கள்/ஒன்றிய பிரதேசங்களில் 35 மாநிலங்களுக்கு இன்னும் ஒதுக்கப்பட்ட நிதி வழங்கப்படவில்லை. அப்படி இருக்கையில், தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதி, மற்ற மாநிலங்களுக்குத் திருப்பி விடப்படுவதாக முதல்வர் சொல்வது பொய்’ என்று எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், பிப்ரவரி 10ம் தேதியன்று சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்திற்காக ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ள நிதி பற்றிய கேள்விகளுக்கு ஒன்றிய கல்வித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சௌத்ரி எழுத்துப்பூர்வ பதிலளித்துள்ளார். அதில், மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்களுக்கு (Union Territories) இந்த திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி, இதுவரை விடுவிக்கப்பட்ட நிதி ஆகியவை பற்றிய விவரங்கள் அடங்கிய அட்டவணையும் இணைக்கப்பட்டிருந்தது.
அதன்படி, தமிழ்நாட்டிற்கு ரூ.2,151.60 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதுவரை ஒரு பைசா கூட விடுவிக்கப்படவில்லை. அதேபோல் மேற்கு வங்கம், கேரளா மாநிலங்களுக்கும் ஒரு பைசா கூட விடுவிக்கப்படவில்லை. அதே நேரத்தில் மற்ற மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.

35 மாநிலங்கள்/ஒன்றிய பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி கொடுக்கப்படவில்லை என்று குறிப்பிடும் அண்ணாமலை, தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு மட்டும் 1 பைசா கூட வழங்கப்படவில்லை என்பதை மறைக்க முயல்கிறார். மற்ற எல்லா மாநிலங்களுக்கும் ஒதுக்கப்பட்ட நிதியில் குறிப்பிடத்தக்க அளவிலான பங்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிற போது, ஏன் தமிழ்நாட்டிற்கு ஒரு பைசா கூட தரப்படவில்லை. அந்த தொகை எங்கே என்பதே தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை எழுப்பும் கேள்வியாக இருக்கிறது.
இதிலிருந்து அண்ணாமலை சொல்வது பொய் என்பதற்கு அவரது கட்சியைச் சேர்ந்த இணையமைச்சரே எழுத்துப்பூர்வமான ஆதாரத்தை அளித்துள்ளார்.
மேலும், 2024 மார்ச் மாதம் PM SHRI உட்பட சமக்ர சிக்ஷா திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் செயல்படுத்துவதாக அரசு உறுதியளித்தது என்று அண்ணாமலை சொல்கிறார். ஆனால், தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தேசிய கல்விக்கொள்கை பற்றிய சரத்தை நீக்கிவிட்டுத்தான் ஒன்றிய அரசுக்கு அனுப்பியதாகச் செய்திகளில் குறிப்பிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அப்போது தலைமைச் செயலாளராக இருந்த ஷிவ்தாஸ் மீனா, இது குறித்து ஒன்றிய அரசின் பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு எழுதியுள்ள அதிகாரப்பூர்வ கடிதத்தில், ’PM SHRI பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கட்டமைப்பதில் தமிழ்நாடு ஆர்வமாக உள்ளது. இது சம்பந்தமாகப் பள்ளிக் கல்வி செயலாளர் தலைமையில் மாநில அளவிலான ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் பரிந்துரைகளின்படி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திடும்’ என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமக்ர சிக்ஷா திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டதாக அண்ணாமலை சொல்வது போல் ஷிவ்தாஸ் மீனா எங்குமே அக்கடிதத்தில் குறிப்பிடவில்லை. அண்ணாமலை மற்றும் பாஜகவின் மற்ற தலைவர்கள் பாதி தகவலை மறைத்துவிட்டு அக்கடிதத்தின் சாரத்தைத் திரித்துக் கூறி வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் 2024, ஆகஸ்ட் மாதம் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் 2024-25 நிதியாண்டுக்கான முதல் தவணை நிதியான 573 கோடி ரூபாயை விடுவிக்குமாறும், சென்ற நிதியாண்டில் நிலுவையில் இருக்கும் ரூ.249 கோடியை அளிக்கும்மாறும் கோரி பிரதமருக்குக் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.
’2024-25 கல்வி ஆண்டில் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு அதன் பங்கான 2,151 கோடி ரூபாயை இன்னும் விடுவிக்கவில்லை என்றும், இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து, உடனடியாக இந்த நிதியை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்ட போது, ’தேசிய கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் நிதியை விடுவிப்போம் என்று சொன்னதாகவும்’ அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். மேலும், 43 லட்சம் மாணவர்கள், 2 லட்சம் ஆசிரியர்கள் இந்த நிதியை நம்பி இருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.

இந்த திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்காமல் இருப்பதால், SSA திட்டத்தின் கீழ் வேலை செய்யும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால், இவர்கள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் போராட்டம் நடத்தினார்கள். அதன்பின்னர், தமிழ்நாடு அரசு அதன் சொந்தப் பங்கிலிருந்து 100 கோடி ரூபாய் கொடுத்து 30,௦௦௦-துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கியது. இந்த 100 கோடியும் ஊதியம் வழங்க மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. SSA-ன் செயல்படுத்தப்படும் பிற திட்டங்களுக்கோ, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கோ செலவிடப்படவில்லை.

கல்வி சார்ந்த பல்வேறு திட்டங்களை (schemes) தேசிய கல்விக் கொள்கையுடன் இணைத்து வருவதும், அக்கொள்கையை ஏற்காத மாநிலங்களுக்கு நிதியை வழங்காமல் மறுத்து வருவதும் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வி கட்டமைப்பை வெகுவாக பாதிக்கிறது. இதன் காரணமாகத்தான் தற்போது இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. மொத்தமாகப் பார்க்கும்போது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல எல்லா மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கப்படாதது போல் அண்ணாமலை குறிப்பிடுவது உண்மைக்குப் புறம்பான தகவல்.