இரு சக்கர வாகன டாக்ஸிகள் குறித்து தமிழ்நாட்டின் நிலைபாடு என்ன?
இரு சக்கர வாகன டாக்ஸி சேவை வழங்கும் Ola, Uber, Rapido போன்ற நிறுவனங்களுக்கான ஒழுங்குமுறை விதிகளை தமிழ்நாடு அரசு இன்னும் வகுத்து வைக்கவில்லை.
கடந்த டிசம்பர் 10ஆம் தேதி, போக்குவரத்துத் துறை ஆணையர், “அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்களும்(RTO) வணிக நோக்கத்திற்காக இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துபவர்களை கடுமையான சோதனைக்கு உட்படுத்தவேண்டும்” என்று சுற்றறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பல ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கங்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன் இரு சக்கர வாகனங்கள் டாக்ஸிகளாக பயன்படுத்தப்படுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று மனுவும் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து “Ola, Uber, Rapido போன்ற பல்வேறு இணைய ஒருங்கிணைப்பாளர் நிறுவனங்களின் கீழ் வணிக நோக்கத்திற்காக செயல்படும் இரு சக்கர வாகனங்கள், மோட்டார் வாகன சட்டத்தின் பல்வேறு விதிமுறைகளை மீறி செயல்படுகின்றன. அதனால், இந்த இரு சக்கர வாகனங்கள் மோட்டார் வாகன சட்டத்திற்கு இணங்க செயல்படுவதை உறுதி செய்வதற்காக, RTOக்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் (MVIs) சிறப்பு முன்னெடுப்புகளை ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்” போக்குவரத்துத் துறை ஆணையர் .

தமிழ்நாட்டில், இரு சக்கர வாகனங்களை ஆட்டோ போன்று வணிக நோக்கத்திற்காக பயன்படுத்துவது பற்றிய நிலைபாடு என்னவாக உள்ளது என்பதை நாம் முதலில் தெரிந்துகொள்ளவேண்டும்.
2019 ஜீலை மாதம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், “இரு சக்கர வாகனங்களை போக்குவரத்து வாகனமாகப் பயன்படுத்த தமிழ்நாடு அரசு தற்போது அனுமதிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி, இரு சக்கர வாகனங்களை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்துவதை தடை செய்து ஆணை பிறப்பித்தார். மேலும், ”கூகுள், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் Rapido செயலியை தங்களது தளங்களில் இருந்து நீக்கவேண்டும்” என்று இணைய குற்றப் பிரிவு ஆணையர் கூறியதில் எந்தத் தவறும் இல்லை என்றும் நீதிபதி தெரிவித்தார்.
இதனால் Rapido செயலி தமிழ்நாடு மாநிலத்திற்கு சேவைகளை வழங்குவதில்லை என்ற அறிவிப்பை வாடிக்கையாளர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் தங்களது இணையதளத்தில் பதிவிடவேண்டும் என்று நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து Rapido நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
சாலைப் போக்குவரத்தின் அனைத்து அம்சங்களையும் ’மோட்டார் வாகனச் சட்டம் 1988’ தான் தீர்மானப்பதாக உள்ளது. அனைத்து இந்திய மாநிலங்களும் இது தொடர்பாக சொந்த விதிமுறைகளை வகுத்துக்கொள்ள முடியும். அச்சட்டத்தின்படி, அனைத்து வாகனங்களும் போக்குவரத்து வாகனங்கள் (Transport vehicles), போக்குவரத்து அல்லாத வாகனங்கள் (Non-Transport vehicles) என இரண்டு பிரதான வகைகளாக பிரிக்கப்படுகிறது.
இதன்படி, போக்குவரத்து அல்லாத (Non-Transport) வாகனங்களை சொந்த நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். வணிக நோக்கத்திற்கு பயன்படுத்தக்கூடாது. Ola, Uber போன்ற நிறுவனங்கள் கார் டாக்ஸிகளை வைத்து இயக்குகின்றன. கார்கள் போக்குவரத்து வாகனமாக அனுமதிக்கப்படுகின்றன. ஆனால், இரு சக்கர வாகனங்கள் இந்த வகையில் போக்குவரத்து வாகனமாக அனுமதிக்கப்படுவதில்லை. இதனை கணக்கில் கொண்டுதான் மேற்கண்ட ஆணை வழங்கப்பட்டிருக்கிறது.
ஆனால், அதே 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் அமர்வு, இதுதொடர்பாக நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த ஆணையை நிறுத்திவைத்து தீர்ப்பளித்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தெலுங்கானாவை தளமாகக் கொண்டு இயங்கும் ரோப்பன் போக்குவரத்துக் குழுமத்தின் மூத்த வழக்கறிஞர், ‘Rapido’ தளம் பயனாளிகள் மற்றும் ஓட்டுநர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதைப் பற்றியும், காப்பீடு வழங்கப்படுவது பற்றியும் விளக்கினார்.

மேலும், 2019 ஜீலை மாதம் நீதிபதி ஜெயச்சந்திரன் வழக்கை விசாரித்த போதும், தற்போது 2019 ஆக்ஸ்ட் விசாரிக்கப்படும் போதும் தமிழ்நாடு அரசு எத்தைய எதிர்வாதத்தையும் முன்வைக்கவில்லை என்பதைக் குறிப்பிட்டு ”தெலுங்கானா, ராஜஸ்தான் போன்ற பிற மாநிலங்கள் செய்ததைப் போல, இரு சக்கர வாகன ஓட்டிகளை ஒருங்கிணைக்கும் நிறுவனங்களுக்கான குறிப்பிட்ட விதிமுறைகளை அது எப்போது உருவாக்க முடியும் என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்” என்றும் நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டது.
இதேபோல், 2023 ஏப்ரல் மாதம் தமிழ்நாடு மாநில அரசின் உரிய அங்கீகாரம் இல்லாததை குறிப்பிட்டு, ரேபிடோ போன்ற இருசக்கர டாக்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரையின் மாவட்ட நிர்வாகம், மாநகர காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகிய எச்சரித்தன.
இதனிடையில் ஒன்றிய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ஆட்டோ, இரு சக்கர வாகன டாக்ஸி சேவை வழங்கும் Ola, Uber, Rapido போன்ற நிறுவனங்களுக்கான ஒழுங்குமுறை விதிகளை வெளியிட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு மாநிலங்களையும் தங்களது சொந்த ஒழுங்குமுறை விதிகளை வகுத்துக்கொள்ளும் படி கூறியுள்ளது. ஆனால், தமிழ்நாடு இன்னும் ஒழுங்குமுறை விதிகளை வகுக்காமல் இழுத்தடித்து வருகிறது.

இந்தப் பின்னணியில் தான் 2023 ஜீன் மாதம் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் S.S. சிவசங்கர், ”இரு சக்கர வாகனங்கள் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது” என்று கூறினார்.
இரு சக்கர வாகனங்களை வணிக நோக்கத்திற்கு அனுமதிப்பது பற்றிய கொள்கை முடிவு எடுக்காமல், ஒழுங்கமுறை விதிகளை வகுத்து வைக்காமல் இந்த பிரச்சனைக்கு சரியான தீர்வு கிடைக்காது என்பது தெளிவு.