சத்துணவு முட்டைகளை விற்பனை செய்த உணவகத்திற்கு சீல்!
திருச்சி, துறையூரில் பள்ளிகளுக்கு வழங்கக்கூடிய சத்துணவு முட்டைகளை விற்பனைக்குப் பயன்படுத்திய தனியார் உணவகத்திற்கு உணவு பாதுகாப்புத் துறையால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மதிய வேளையில் சத்துணவு வழங்கப்படுகிறது. இதில் தினமும் ஒரு முட்டையும் அடங்கும். அப்படி சத்துணவிற்காக வழங்கப்படும் முட்டையில் ‘தமிழ்நாடு அரசு’ என முத்திரை இடப்பட்டிருக்கும்.
/indian-express-tamil/media/media_files/achtz10v9ytDnycqXVdw.jpeg)
இந்த முத்திரையிடப்பட்ட முட்டைகளை கொண்டு திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள ‘ஸ்ரீ ரத்னா’ என்ற உணவகத்தில் உணவு தயாரித்து விற்கப்பட்டு வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து துணை வட்டாட்சியர் மோகன் தலைமையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சத்துணவு முட்டையை விற்பனை செய்த அவ்வுணவகத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து கடைக்குச் சீல் வைத்தனர்.

மேலும் கடையின் உரிமையாளர் ரத்னம் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி சத்துணவு முட்டைகளை விற்பனை செய்த மதுராபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒருங்கிணைப்பாளர் வசந்தகுமாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.