YouTurn

புகையிலை மூலம் ஒன்றிய அரசுக்கு கிடைத்த வரி வருவாய்; முதல் மூன்று இடங்களில் பாஜக ஆளும் மாநிலங்கள் !

புகையிலை மூலம் ஒன்றிய அரசுக்கு கிடைத்த வரி வருவாய்; முதல் மூன்று இடங்களில் பாஜக ஆளும் மாநிலங்கள் !
புகையிலை விற்பனை செய்வதன் மூலம் ஒன்றிய அரசுக்குக் கிடைக்கும் வரி வருவாயினை ஒன்றிய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மாநிலங்கள் வாரியாக வெளியிடப்பட்டுள்ள அப்பட்டியலில் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களே முதல் மூன்று இடங்களில் உள்ளது. 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 7ம் தேதி தொடங்கியது. டிசம்பர் 29ம் தேதி வரையில் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், கடந்த 19ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் புகையிலை தொடர்பான கேள்விகளை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். 



கடந்த 3 ஆண்டுகளில் புகையிலை விற்பனை மூலம் ஒன்றிய அரசுக்குக் கிடைத்த வரி வருவாய் எவ்வளவு? புகையிலையிலிருந்து கிடைக்கும் வரி, சுகாதாரத்  துறைக்குச் செலவிடப்படுகிறதா? செலவிடப்படுகிறது எனில் எவ்வளவு தொகை செலவிடப்படுகிறது என்ற கேள்விகளை எழுப்பியுள்ளார்.

ஒன்றிய நிதி அமைச்சகம் பதில் : 

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் கேட்ட கேள்வியின் அடிப்படையில், 2019-20, 2020-2021 மற்றும் 2021-22 ஆகிய நிதி ஆண்டுகளில் புகையிலை மூலம் ஒன்றிய அரசுக்குக் கிடைத்த வரி வருவாய் குறித்த தகவலை ஒன்றிய நிதி அமைச்சகம் பதிலாக அளித்துள்ளது. 

அதன்படி 2021-22 நிதி ஆண்டில் புகையிலை மூலம் ஒட்டுமொத்தமாக 19,328 கோடி ரூபாய் இந்திய அரசுக்கு வரியாகக் கிடைத்துள்ளது. மாநிலங்கள் வாரியாக வெளியிடப்பட்டுள்ள அப்பட்டியலில் பாஜக ஆட்சி செய்யக்கூடிய உத்தரப்பிரதேசம், குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து புகையிலை மூலம் ஒன்றிய அரசுக்குக் கடந்த நிதி ஆண்டில் (2021-22) 2,624 கோடி ரூபாய் வரியாகக் கிடைத்துள்ளது. 2020-21 நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 300 கோடி ரூபாய் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இரண்டாவதாகக் குஜராத் மாநிலத்தில் ரூபாய் 2,181 கோடி ஒன்றிய அரசுக்குப் புகையிலை வரியாகச் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டை கட்டிலும் 317 கோடி அதிகம். 

கொரோனா காலக்கட்டத்தில் (2020-21) பெருவாரியான மாநிலங்களில் புகையிலையால் வசூலான வரி தொகை குறைந்திருப்பதினை பட்டியலில் காண முடிகிறது. பயன்பாடு குறைந்திருப்பின் வசூலான வரி தொகையும் குறைந்திருக்கும். இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் 2019-20 நிதி ஆண்டை கட்டிலும் சுமார் 90 கோடி ரூபாய் அதிகரித்து, 2020-21 (கொரோனா காலம்) நிதி ஆண்டில் ரூபாய் 1,864 கோடி வசூலாகி உள்ளது. 

அடுத்தபடியாக கர்நாடக மாநிலம் ரூபாய் 1,729 கோடியுடன்  மூன்றாவது இடத்தில் உள்ளது. முதல் மூன்று இடத்தில் உள்ள மாநிலங்களும் பாஜக ஆட்சி செய்யக்கூடிய மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 



பாஜகவின் கூட்டணி ஆட்சி நடைபெறும் மகாராஷ்டிரா மாநிலம் ரூ.1,557 கோடியுடன் நான்காம் இடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டின் நிலை : 

ஒட்டுமொத்த பட்டியலில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது. 2020-21 நிதி ஆண்டில் 1,284 கோடியாக இருந்த புகையிலை வரி வசூல், 2021-22 நிதி ஆண்டில் 1,369 கோடியாக அதிகரித்துள்ளது. ஆனால், இந்த தொகை கொரோனாவிற்கு முந்தைய நிதி ஆண்டான 2019-20துடன் ஒப்பிடுகையில் 30 கோடி ரூபாய் குறைவு. 

குறைந்துள்ள பகுதிகள் :

ஜார்கண்ட் மாநிலம் 2020-21 நிதி ஆண்டினை காட்டிலும் கடந்த ஆண்டில் (2021-22) புகையிலை வரி 21 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 2019-20 (கொரோனவிற்கு முந்தைய) நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 74 கோடி ரூபாய் குறைந்துள்ளது. 



அதே போல், டெல்லியில் 2019-20 நிதியாண்டில் ரூபாய் 854 கோடியாக இருந்த புகையிலை வரி வசூல், சுமார் 200 கோடி ரூபாய் குறைந்து 2021-22 நிதியாண்டில் ரூபாய் 652 கோடியாக உள்ளது. 

புகையிலை மூலமாக வரும் வரி வருவாயில் எவ்வளவு தொகை சுகாதாரத் துறைக்கு செலவு செய்யப்படுகிறது என்ற நாடாளுமன்ற உறுப்பினரின் அடுத்த கேள்விக்கு, மற்ற அனைத்து பொருட்களிலிருந்து வசூலிக்கப்படும் வரியையும் சேர்த்து, 2022-23 நிதி ஆண்டில்  சுகாதாரத்துறைக்கு 83,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

புகையிலை பயன்பாட்டினை குறைக்கவும் கட்டுப்படுத்தவும் புகையிலை பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டம், புகையிலை பொருட்களைப் பயன்படுத்துபவரின் குறைந்தபட்ச வயதினை அதிகரிப்பது, அப்பொருட்களை விளம்பரப்படுத்தக் கூடாது, பொது இடங்களில் புகைக்கக்கூடாது என பல்வேறு சட்ட திட்டங்களை அரசு மேற்கொள்கிறது. ஆனால் அவை முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பதுதான் மிகப்பெரிய கேள்வி. 

Link : 

UTILIZATION OF TAX REVENUE FROM TOBACCO
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை