YouTurn

ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்வு ஏன்? புதிய மின் கட்டணத்தால் யார் யாருக்கு எவ்வளவு உயரும்?

ஜூலை 15 முதல் தமிழ்நாட்டில் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் யார் யாரின் மின்சார கட்டணத்தில் எவ்வளவு மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்வு ஏன்? புதிய மின் கட்டணத்தால் யார் யாருக்கு எவ்வளவு உயரும்?

தமிழ்நாடு மின்வாரியம் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக பெரிய அளவில் வெற்றிபெற்ற நிலையில், இந்தக் கட்டண உயர்வு மக்களுக்குக் கிடைத்துள்ள பரிசு என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன. 


மின் கட்டண உயர்வு ஏன்?

2022ஆம் ஆண்டு மின்கட்டணம் உயர்த்தப்பட்டபோது அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். 

2011 - 12ஆம் ஆண்டில் 18,954 கோடி ரூபாயாக இருந்த மொத்த இழப்பு 2021ஆம் ஆண்டு மார்ச் வரையில் 1,13,266 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதி இழப்பினை, 2021-22ம் நிதியாண்டிலிருந்து 100 சதவீதம் அரசே ஏற்றுக் கொள்ளும் என்ற உறுதி வழங்கப்பட்டுள்ளது. முந்தைய காலத்தில் அத்தகைய எந்த உறுதியும் வழங்கப்படாததால் TANGEDCO நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடமிருந்து கடன் வாங்கவேண்டிய சூழல் இருந்தது. அதன்படி 2011-12ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் மின் தொடரமைப்பு கழகத்திற்கு ரூ.43,493 கோடியாக இருந்த கடன் தொகை ரூ.1,59,823 கோடியாக அதிகரித்துள்ளது. இக்கடனுக்காக வட்டித்தொகை மட்டும் வருடத்திற்கு 16,511 கோடி செலுத்தப்படுகிறது. 

மின் விநியோகம் செய்வதில் ஏற்படும் கடன்களை 75 சதவீதம் எடுத்துக்கொண்டு அதன்மூலம் அசல் மற்றும் வட்டியைக் குறைத்து, நிதிநிலையைச் சீராக்குவதே ஒன்றிய அரசின் உதய் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். தமிழ்நாடு அரசு 2016ஆம் ஆண்டில் உதய் திட்டத்தில் கையெழுத்திட்டது. அதன்படி 2016, செப்டம்பர் மாதம் நிலுவையிலிருந்த மொத்தக்கடன் 81,300 கோடி ரூபாயில் 22,815 கோடி மட்டுமே 2017 முதல் 2021 நிதியாண்டு வரையில் அரசு ஏற்றுக்கொண்டது. மேலும் பெறப்பட்ட கடனுக்கான வட்டியை ஈடுசெய்யும் பொருட்டு வீட்டுப் பயன்பாட்டுக்காக வழங்கப்படும் மானியமும் குறைக்கப்பட்டது. 

மேலும் ஒன்றிய அரசின் மின் அமைச்சகத்தால் மாநிலத்திற்கு வழங்கப்படும் 0.5 சதவீதம் கூடுதல் கடனை பெறக் கட்டணத் திருத்தத்துடன் மின்துறை சீர்திருத்தங்களைச் செய்யவேண்டும் என்கிற நிபந்தனை உருவாக்கப்பட்டிருந்தது. 

அதுமட்டுமின்றி மின் வாரியங்களைப் பொறுத்தவரை ஊரக மின் வசதிக் கழகத்திடம் இருந்தும் (REC) மின்சார நிதிக் கழகத்திடம் இருந்தும் (PFC) கடன்களைப் பெறுகின்றன. இவற்றிடமிருந்து நிதியைப் பெற வேண்டுமென்றால் ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணத்தைத் திருத்தம் செய்ய வேண்டுமென்பதும் நிபந்தனையாக்கப்பட்டுள்ளது. அப்படி தமிழ்நாடு அரசு மின் கட்டணத் திருத்தம் செய்யாததால் கடந்த காலத்தில் ஆத்மநிர்பார் திட்டத்தின் கீழ் வழங்கவேண்டிய சுமார் 3,000 கோடி ரூபாய் நிறுத்தி வைத்திருந்தன. இதனைத் தொடர்ந்து கடந்த 2022 மற்றும் 2023ஆம் ஆண்டில்  மின்கட்டணம் உயர்த்தப்பட்டது.


தற்போது எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது:

பணவீக்க விகித அளவு அல்லது 6 சதவீதம் இவற்றில் எது குறைவோ அச்சதவீதத்தை அடிப்படையாக கொண்டு மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும். அவ்வாறு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளின்படி 4.83 சதவீதம் மின்கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் உயர்த்தப்பட்ட புதிய கட்டண விவரம்.


யூனிட்

பழைய கட்டணம்  

(ரூ. பை)

புதிய கட்டணம் 

(ரூ. பை)

உயர்வு 

(ரூ.பை)

0 - 400

4.60

4.80

0.20

401 - 500

6.15

6.45

0.30

501 - 600

8.15

8.55

0.40

601 - 800

9.20

9.65

0.45

801 - 1000

10.20

10.70

0.50

1000-க்கு மேல்

11.25

11.80

0.55

*500 யூனிட்களுக்கு மேல் பயன்பாடு கொண்டவர்களுக்கான கட்டண விவரம்

இந்த மின் கட்டணம் என்பது பைசா அளவிலேயே செய்யப்பட்டுள்ளது. மேலும் அதிகபட்சமாக 500 யூனிட்களுக்குள் பயன்படுத்துபவர்களின் மின் கட்டணத்தில் இந்த கட்டண உயர்வு எந்த அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது பற்றியும் விலையில்லா மின்சாரம் பற்றியும் TANGEDCO தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


அதன்படி, அனைத்து வீட்டு மின் இணைப்புகளுக்கும் வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். அதேபோல் குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி வழிபாட்டுத்தலங்கள். மற்றும் தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் மின்சார மானியமும் தொடர்ந்து வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டைப் பொருத்த அளவில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படுகிறது. அப்படி இரண்டு மாதங்களுக்கு 100 யூனிட்களுக்குள் மின்சாரம் பயன்படுத்தும் சுமார் ஒரு கோடி வீடுகளுக்கு முன்னர் இருந்ததை போலவே தற்போதும் எந்த கட்டணமும் விதிக்கப்படப்போவது இல்லை. இவர்களது மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை.


  • இதேபோல் 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63 லட்ச வீட்டு இணைப்புகளுக்கு மாதம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.5 வரை மட்டுமே உயரும். (101-200 யூனிட் - பழைய கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.2.25. புதிய கட்டணம் ரூ.2.35).
  • 300 யூனிட்டுகள் வரை பயன்படுத்தும் 35 லட்சம் வீட்டு இணைப்புகளுக்கு மாதம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.15 வரை மட்டுமே உயரும்.
  • 400 யூனிட்டுகள் வரை  பயன்படுத்தும் 25 லட்சம் வீட்டு இணைப்புகளுக்கு மாதம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.25 வரை மட்டுமே உயரும்.
  • 500 யூனிட்டுகள் வரை பயன்படுத்தும் 13 லட்சம் வீட்டு இணைப்புகளுக்கு மாதம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.40 வரை மட்டுமே உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த மின் கட்டணம் உயர்விற்கு எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. இந்நேரத்தில் திமுக-வின் 2021 தேர்தல் அறிக்கையையும் கவனிக்க வேண்டியுள்ளது. தங்களது கட்சி ஆட்சிக்கு வந்தால் இரண்டு மாதத்திற்குப் பதிலாக மாதம் ஒருமுறை மின் கட்டணம் அளவீடு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மாதம் ஒருமுறை கணக்கிடுவதினால் கட்டணம் குறையும். ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இந்த வாக்குறுதியை திமுக நிறைவேற்றவே இல்லை (S.No.221)

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை