திருப்பறங்குன்றம் சர்ச்சை: அதன் பின்னணியில் இருப்பது இந்து முன்னணி!
திருப்பரங்குன்றம் மலையை மையமாக வைத்துக் கட்டமைக்கப்படும் சர்ச்சைகளுக்குப் பின்னணியில் இந்துத்துவ அமைப்புகளின் மதவாத நோக்கம் இருப்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது.
திருப்பரங்குன்றம் மலையை மையமாக வைத்து இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்து சர்ச்சைகளைக் கிளப்பி வந்த நிலையில், அதன் உச்சமாகக் கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி மதுரை பழங்காநத்தத்தில் இந்து முன்னணி அமைப்பு ஆயிரக் கணக்கில் ஆட்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியது.
’வெறுப்பைத் தூண்டும் முழக்கங்களை எழுப்பக் கூடாது’ உள்ளிட்ட நிபந்தனைகளுடன் தான் உயர் நீதிமன்ற மதுரை கிளை இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியளித்தது.
ஆனால் ஆர்ப்பாட்டத்தில் பேசிய எச்.ராஜா ”அயோத்தி போல முதல் யுத்தம் முருகனின் முதலாம் படைவீடான திருப்பரங்குன்றத்தில் தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டில் இருக்கும் தலிபான் அரசை முடிவுக்குக் கொண்டு வருவோம். அதற்கான முகூர்த்தம் குறிக்கப்பட்டுவிட்டது” என்று மதங்களுக்கு இடையேயான மோதலை தூண்டும் வகையில் பேசினார். இதற்காக எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்து முன்னணி போன்ற அமைப்புகளால் திருப்பரங்குன்றம் மலை சமீப காலமாகச் சர்ச்சைக்குரியதாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பினர் மூன்று முக்கியமான விஷயங்களைப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஒன்று, திருப்பரங்குன்றம் மலைக்கு ஆபத்து! முஸ்லீம்கள் திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிக்கிறார்கள். இரண்டாவது விஷயம், முஸ்லீம்கள் மலைமேல் கந்தூரி கொடுக்கும் ’புதிய வழக்கத்தைப்’ புகுத்தி பிரச்சனை செய்கிறார்கள். மூன்றாவது, திருப்பரங்குன்றம் மலை முழுவதும் முருகன் கோவிலுக்குச் சொந்தமானது என்பதாகும்.
சிக்கந்தர் மலை என்ற பெயர்! வரலாற்று உண்மை என்ன?
திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் சுப்பிரமணிய சாமி கோவிலும், மலையின் மீது காசி விஸ்வநாதர் கோயிலும், சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அமைந்துள்ளது.
சிக்கந்தர் மலை என்ற சொல்லாடல் திடீரென இன்றைக்கு இஸ்லாமியர்களால் ஆக்கிரமிப்பு நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. 19ஆம் நூற்றாண்டிலே காலனிய அதிகாரியான ஜேம்ஸ் வெல்ஷ் எழுதிய ’MILITARY REMINISCENCES’ நூலில் ’சிக்கந்தர் மலை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 1989ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நாகப்பா.நாச்சியப்பன் என்பவர் எழுதிய ‘திருப்பரங்குன்றம் கோயில் வேற்கோட்டம்’ என்ற நூலில் திருப்பரங்குன்றம் மலையைப் பற்றிய நாட்டுப்புறப் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து ‘சிக்கந்தர் மலை’ என்ற சொல்லாடல் மக்களிடையே புழக்கத்தில் இருந்திருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

இப்படி ‘சிக்கந்தர் மலை’ என்ற சொல்லாடல் முன்பிருந்தே பயன்பாட்டில் இருந்திருப்பதை உறுதி செய்வதற்குப் பல ஆவணங்கள் உள்ளன. மேலும் தற்போது அதிகாரப்பூர்வமாக அங்கிருக்கும் தர்கா நிர்வாகம் இந்த மலையை சிக்கந்தர் மலை என்று அழைக்கவில்லை. தர்காவின் பெயர்ப் பலகையில் கூட ”திருப்பரங்குன்றம் மலைமேல் அடங்கி உள்ள இறைநேசர் சுல்தான் சிக்கந்தர் தர்கா” என்றுதான் எழுதப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றத்தைச் சுற்றியுள்ள மக்களிடையே சிக்கந்தர் மலை என்ற சொல்லாடல் இன்று எந்த அர்த்தத்தில் பயன்பாட்டில் இருக்கிறது என்று பார்த்தோமானால், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிறு குன்றில் சிக்கந்தர் பாதுஷா தர்கா இருப்பதால் அந்த மலை முகட்டுப் பகுதியை அடையாளப்படுத்தும் விதமாக ’சிக்கந்தர் மலை’ என்று அழைக்கும் வழக்கும் நடைமுறையில் இருக்கிறது. எனவே ‘சிக்கந்தர் மலை’ என்பது அந்த மலை முழுவதையும் குறிக்கும் விதமாக இப்போது மக்கள் பயன்பாட்டில் இல்லை. அதேவேளையில் ‘சிக்கந்தர் மலை’ என்ற சொல்லாடல் முற்றிலும் புதிய ஒன்றல்ல. அது இஸ்லாமியர்களால் புதிதாக உருவாக்கப்படவும் இல்லை.
திருப்பரங்குன்றம் மலை யாருக்குச் சொந்தம்?
’திருப்பரங்குன்றம் மலை முழுவதும் முருகன் கோவிலுக்குச் சொந்தமானது’ என்று 1931ம் ஆண்டு லண்டன் Privy Council தீர்ப்பு அளித்துள்ளதாகப் பேசிவருகிறார் எச்.ராஜா. திருப்பரங்குன்றம் மலை சம்பந்தமான இந்த விவகாரத்தில் 1931ம் ஆண்டு privy council தீர்ப்பிற்கு முன்னதாக, 1923-ல் இந்த வழக்கில் மதுரை கீழமை நீதிமன்றம் ’நெல்லித்தோப்பு பகுதி, நெல்லித்தோப்பிலிருந்து தர்காவிற்குச் செல்லும் படிக்கட்டுகள், தர்கா அமைந்துள்ள இடம் மற்றும் கொடிமரம் அமைந்துள்ள மலை உச்சி ஆகியவை தர்கா நிர்வாகத்திற்குச் சொந்தம். இவற்றைத் தவிர மீதமுள்ள மலையின் பிற பகுதிகள் அனைத்தும் கோவிலுக்குச் சொந்தம்’ என்ற தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்புதான் செல்லும் என்று லண்டன் privy council-லும் கூறியுள்ளது. இதனைத் திரித்து மலை முழுவதும் முருகன் கோவிலுக்குச் சொந்தம் என்று எச்.ராஜா போன்றவர்கள் தவறான தகவலைப் பரப்பிவருகிறார்கள்.

கந்தூரி என்னும் பாரம்பரியம்!
திருப்பரங்குன்றம் மலையில் கடந்த டிசம்பர் 25 அன்று கந்தூரி (ஆடு பலியிடுதல்) கொடுப்பதற்கு சென்றபோது அங்கு பணியிலிருந்த காவலர்கள் தடுத்ததால், கந்தூரி கொடுப்பதற்கு அனுமதி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு முன்பாகவே திருப்பரங்குன்றம் மலையின் நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ்வாறு தொழுகை நடத்தத் தடை விதிக்க முடியாது என்று நீதிமன்றம் அந்த மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது. திருப்பரங்குன்றம் மலை மீது இஸ்லாமியர்கள் வழிபட இந்துத்துவா அமைப்பினர் நீண்ட காலமாக எதிர்ப்புத் தெரிவித்து வந்திருக்கின்றனர். இந்தப் பின்னணியில் தான் மலை மீது அமைந்திருக்கும் தர்காவில் கந்தூரி கொடுக்கக்கூடாது என்று இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறி வருகிறார்கள்.
இது பற்றி திருப்பரங்குன்றம் சிக்கந்தர் அவுலியா தர்காவின் செயற்குழு உறுப்பினர் அல்தாஃப் கூறுகையில், ”காலம்காலமாக தர்கா எப்படிச் செயல்பட்டு வந்ததோ, அதை அப்படியே தொடர வேண்டும் என நினைக்கிறோம். மலையில் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தினார். ஆடு, கோழிகளை உரிக்கும் இடம், சமையல் செய்யும் இடம் ஆகியவற்றை அவர் பார்வையிட்டார். ஆனால், ஆடுகளைப் பலியிடுவதற்கு அவர் தடை விதித்துள்ளார்” என்கிறார்.

ஆடுகளைப் பலியிடும் கந்தூரி நிகழ்வு பாரம்பரியமாக நடந்துவரும் ஒன்று. சிக்கந்தர் தர்காவிற்குச் செல்லும் வழியில் எழுதப்பட்டுள்ள பெயர்ப்பலகையில், “கந்தூரிகள் மலைமேல் நடத்தவும். சமையல் பாத்திரம் உண்டு” என்று எழுதப்பட்டுள்ளது. மேலும், சிக்கந்தர் தர்காவில் சமையல் கூடம் ஒன்றும் உள்ளது. இவையெல்லாம் சிக்கந்தர் தர்காவில் கந்தூரி நிகழ்வு பாரம்பரியமாக நடந்துவரும் ஒன்றுதான் என்பதற்கான சாட்சியங்களாக உள்ளது.
இவ்வாறு பல ஆண்டுகளாகப் பாரம்பரியமாக நடந்துவரும் கந்தூரி போன்ற நிகழ்வுகளை ‘மலையின் புனிதம் கெட்டுப்போவதாக’ சொல்லி தடை செய்யக் கோருகிறார்கள் இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். ’திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றவேண்டும். சிக்கந்தர் தர்காவை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்’ என்று எச்.ராஜா ஆர்ப்பாட்ட மேடையில் வெளிப்படையாகவே பேசினார்.
இவ்வாறு திருப்பரங்குன்றம் மலையை மையமாக வைத்துக் கட்டமைக்கப்படும் சர்ச்சைகளுக்குப் பின்னணியில் இந்துத்துவ அமைப்புகளின் மதவாத நோக்கம் இருப்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது.