"திராவிடர் நல் திருநாடு"; சர்ச்சையும் உண்மையும்!
சுந்தரம் பிள்ளை எழுதிய ’மனோன்மணீயம்’ என்ற நூலில் வரும் தமிழ் தெய்வ வணக்கப் பாடலின் அசல் வரிகளிலே ”திரவிடநற் றிருநாடும்” என்றுதான் பதிவாகியுள்ளது.
அக்டோபர் 18ஆம் தேதி தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சியின் சார்பில் இந்தி தின விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது ”தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரியை பாடாமல் விட்டுவிட்டனர். இதனை கண்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் “ஆளுநரா? ஆரியநரா?” என்று காட்டமாக விமர்சித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் இந்த விவகாரம் பேசு பொருளானது. இந்நிலையில், மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய பாடலில் ‘திராவிட நல் திருநாடும்’ என்ற வார்த்தை இடம்பெறவில்லை, என்பது போன்ற பல கூற்றுகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டன.
இவற்றில் மிக முக்கியமாக, ”மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்தில் "தமிழர் நல் திருநாடும்" என்றுதான் எழுதியிருந்தது, அதை கருணாநிதி தான் "திராவிடர் நல் திருநாடும்" என்று மாற்றியமைத்தார்” என்ற கருத்து பரப்பப்பட்டது.

சுந்தரனார் எழுதிய ’மனோன்மணீயம்’ என்ற நவீன நாடகம் 1891ஆம் ஆண்டில் வெளியானது. இதன் பின்னர்தான் அவர் மனோன்மணியம் சுந்தரனார் என்று அழைக்கப்பட்டார். ’மனோன்மணீயம்’ நூலில், தமிழ் தெய்வ வணக்கம் என்ற தலைப்பில் ஒரு பாடல் உள்ளது. அந்தப்பாடல் தான், 1970ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது ‘தமிழ்த்தாய் வாழ்த்தாக’ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதிலுள்ள “ஆரியம் போல தமிழ் உலக வழக்கழிந்து சிதையவில்லை” என்று பொருள்படும் வரிகள் நீக்கிபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
’மனோன்மணீயம்’ நூலின் மூன்றாம் பதிப்பு 1933ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரால் வெளியிட்டது. இந்த பதிப்பில் 25ஆம் பக்கத்தில் இடம்பெற்றுள்ள தமிழ் தெய்வ வணக்கப் பாடலில், ”தெக்கணமு மதிற்சிறந்த திரவிடநற் றிருநாடும்” என்றுதான் உள்ளது.

இதிலிருந்து, தமிழ்த்தாய் வாழ்த்தில் "தமிழர் நல் திருநாடும்" என்று இருந்ததாகவும், அதை கருணாநிதி "திராவிடர் நல் திருநாடும்" என்று மாற்றியமைத்தாகவும் சொல்லப்படுவது ’பொய்த் தகவல்’ என்று உறுதியாகிறது.
மகிழன் என்னும் தமிழ் தேசியவாதி, தேவநேயப் பாவாணர் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை தூய தமிழில் திருத்தி எழுதியதாகவும், அதில் “தெக்கணமும் அதிற்சிறந்த தென்மொழிநற் றிருநாடும்” என்று மாற்றி எழுதியதாகவும் குறிப்பிட்டு, இதனால் ”திராவிட நல் திருநாடும்” என்பதற்கு பதிலாக ”தென்மொழி நல் திருநாடும்” என்பதுதான் சரியானது என்று வாதிடுகின்றனர்.
தேவநேயப் பாவாணர் எழுதிய தமிழ் வளம் என்ற நூலில், ”மனோன்மணீய ஆசிரியர் சுந்தரனார் தமிழ் வாழ்த்தை இனிப் பாடவேண்டிய முறை” என்ற சிறு கட்டுரை இடம்பெற்றுள்ளது. அதில் ’இக்காலத்தில் சுந்தரனார் இருந்திருந்தால், தமிழ்த்தாய் வாழ்த்தை வடமொழி கலவாமல் இப்படித்தான் பாடியிருப்பார் அல்லது திருத்தியிருப்பார்’ என்ற ஊகத்தின் அடிப்படையில் பாவாணர் தமிழ்த்தாய் வாழ்த்தை திருத்தி எழுதியிருந்தார். அதில்தான் ”திரவிடநற் றிருநாடும்” என்பதற்கு பதிலாக “தென்மொழிநற் றிருநாடும்” என்ற திருத்தம் இடம்பெறுகிறது.

ஆனால், இது தேவநேயப் பாவாணரின் ஊகம் சார்ந்த ஒன்றுதான். இது எந்தவகையிலும் சுந்தரனார் எழுதிய அசல் பிரதியில் உள்ள பாடலின் வரியை மாற்றிவிடாது. அசல் பிரதியில் ”திரவிடநற் றிருநாடும்” என்றே எழுதப்பட்டுள்ளது.
தேவநேயப் பாவாணர் தனது தமிழ்ப்பற்று காரணமாக சுந்தரனாரின் பாடலை திருத்தியிருக்கலாம். ஆனால், அதுதான் அசல் பாடலுக்கான மாற்று என்று சொல்லமுடியாது. சுந்தரனாரின் அசல் பாடல்தான் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இதிலிருந்து ”திரவிடநற் றிருநாடும்” என்ற வரிதான் அதிகாரப்பூர்வமானது என்பது தெளிவாகிறது.
மேலும், சிலர் சுந்தரனாரின் அசல் பாடலில் இருந்து ஐந்து வரிகள் நீக்கப்பட்டதை கேள்விக்குள்ளாக்கிறார்கள். இது குறித்து மோகன் ராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் தொடுத்தார். அதில், மாநில அரசு அசல் பாடலை மாற்றமேதும் செய்யாமல் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது அந்த பாடலை கைவிட வேண்டும் என்று வாதிட்டிருந்தார்.
அந்த ஐந்து வரிகளில் சுந்தரனார் தமிழை எல்லையற்ற பரம்பொருளுடன் இணைத்துப் பாடுகிறார். மேலும் கன்னடம், மலையாளம், தெலுங்கு, துளு ஆகிய மொழிகள் தமிழ்மொழியிலிருந்து வந்த கிளை மொழிகள் என்றும், ஆரிய மொழி போல் வழக்கொழிந்து போகாமல் திளைத்து நிற்க வேண்டும் என்றும் பாடுகிறார்.
வாழ்த்துப் பாடலில் தமிழ் தவிர மற்ற மொழிகள் குறைத்து மதிப்பிடப்படுவது அல்லது சிறுமைப்படுத்துவது போன்ற குற்றச்சாட்டுகள் வராமல் இருப்பதற்காக செய்யப்பட்ட இந்த திருத்தத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
குறிப்பாக, ‘ஆரிய மொழி போல் வழக்கொழிந்து போகாமல் திளைத்து நிற்க வேண்டும்’ என்ற வரி இன்றைய காலத்தில் பெரும் சர்ச்சையாக இருந்திருக்கும். அது தவிர்க்கப்பட்டது நல்லதுதான். மேலும், ஒரு மொழிக்கான வாழ்த்துப் பாடலில் பிற மொழிகளை சிறுமைப்படுத்தாமல் இருப்பது என்ற கருத்து முற்றிலும் ஏற்றுக்கொள்ளத் தக்கதுதான். சுரந்தரனாரின் பாடலில் மற்ற மொழிகள் பற்றிய கருத்து எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், ஒரு மாநில அரசின் அதிகாரப்பூர்வ பாடலில் இவை தவிர்க்கப்பட்டது நியாயமானது தான்.