தமிழ்நாட்டின் அதிக செலவு மிக்க தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை மேம்பாலம்! பின்னணி என்ன?
சுரங்க மெட்ரோ இரயில் வழித்தடம் உள்ள அண்ணா சாலையில் இந்த மேம்பாலம் அமையவிருப்பதால் கட்டுமானப் பணி சிக்கலானதாக இருக்கிறது. அதனால் தான் செலவு அதிகரித்திருக்கிறது.
சென்னையில் தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை இடையே 3.2 கி.மீ நீளத்திற்கு மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் பொதுவாக தமிழ்நாட்டில் மேம்பாலம் கட்டுப்படுவதற்கு ஏற்படும் செலவுகளை விட இந்த மேம்பாலத்திற்கு மிக அதிகமான தொகை கணக்கு காட்டப்படுவதாக அதிமுக ஆதரவாளர்களால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. அதற்காக அவர்கள் ‘The New Indian Express’ நாளிதழில் வெளியான செய்திக் கட்டுரையை ஆதாரமாக காட்டி வருகின்றனர். இந்த செய்தி கட்டுரையை எழுதிய கட்டுரையாளரும் தனது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' பக்கத்தில், ‘லஞ்சம் பெறுவதற்காக கட்டுமான செலவு உயர்த்தப்படுகிறதா?’ என்று எழுதி இந்த கட்டுரையை பகிர்ந்துள்ளார்.
/திமுக அரசின் மாநில நெடுஞ்சாலைத்துறையால், நாட்டின் முதல் உயர்த்தப்பட்ட நான்கு வழி மேம்பாலம் என சென்னை தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை இடையே, 2024 ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது.
ஒரு கி.மீ.க்கு சராசரியாக 195 கோடி ருபாய் கட்டுமான செலவைக் கொண்டதாக கூறப்படுகிறது., அதனால் இதன் மொத்த திட்ட… https://t.co/kAEhhsS9lB pic.twitter.com/4p8mkKeK2r
இந்த செய்தி கட்டுரையில், பொதுவாக மேம்பாலத்தின் ஒரு கி.மீ அளவு கட்டுமானத்திற்கு சராசரியாக ஏற்படும் செலவை விட, இந்த தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை மேம்பாலத்தின் ஒரு கி.மீ பணி முடிக்கப்பட மிக அதிகமாக செலவு ஆகும் என்று கணக்கிடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு கோயம்பேடில் திறக்கப்பட்ட நான்கு வழித்தடங்கள் கொண்ட மேம்பாலத்தின் ஒரு கி.மீ அளவு ரூ. 95 கோடியிலும், கடந்த 2022ஆம் ஆண்டு மேடைவாக்கத்தில் திறக்கப்பட்ட மேம்பாலத்தின் ஒரு கி.மீ அளவு ரூ. 100 கோடியிலும் கட்டப்பட்டுள்ள நிலையில், இந்த மேம்பாலத்தின் ஒரு கி.மீ அளவிற்காக ரூ. 195 கோடி செலவு செய்யப்பட இருப்பதாகவும், மொத்தமாக இந்த மேம்பாலம் கட்டி முடிக்கப்பட ரூ. 621 கோடி செலவாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது வழக்கமாக ஏற்படும் செலவை விட 50 சதவீதம் அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
கட்டுமான பொருட்களின் விலை உயர்வு மற்றும் தொழிலாளர்களின் கூலி உயர்வு ஆகியவற்றை கணக்கில் கொண்டு, ஆண்டு தோறும் கட்டுமான செலவில் 5 முதல் 7 சதவீதம் வரை உயர்த்துகிறது நெடுஞ்சாலைத் துறை. இந்த உயர்வை கணக்கில் கொண்டு பார்த்தாலும், மறைமலைநகர் முதல் கிளாம்பாக்கம் வரை கட்டப்பட்டுள்ள 6 வழித்தடங்கள் கொண்ட மேம்பாலத்தின் ஒரு கி.மீ அளவிற்கான செலவு கூட ரூ.188 கோடி என்று தான் கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை மேம்பாலத்திற்காக கணக்கிடப்பட்ட செலவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு இதற்காக ரூ. 482 கோடி வரை செலவாகும் என்று கணக்கிடப்பட்ட நிலையில், 2023ஆம் ஆண்டு ரூ. 525 கோடி வரை செலவாகலாம் என்று கணக்கிடப்பட்டது. இறுதியாக, ரூ.621 கோடி வரை செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இதே செய்திக் கட்டுரையில் இந்த மேம்பாலத்திற்கான செலவு அதிகரித்த அளவில் இருப்பதற்கான காரணத்தை நெடுஞ்சாலைத் துறை அதிகாரி விளக்கியுள்ளதையும் காண்கிறோம். மேலும் இந்த மேம்பால கட்டுமானத்தின் சிக்கலானதன்மை பற்றி இதே ‘The New Indian Express’ நாளிதழில் 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் செய்திக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளதை காண்கிறோம்.
இந்த தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை மேம்பாலம் என்பது சுரங்க மெட்ரோ இரயில் பாதையின் மேலுள்ள சாலையில் அமைக்கப்படவிருக்கும் முதல் மேம்பாலம் ஆகும். தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை மெட்ரோ இரயில் வழித்தடம் அண்ணா சாலையில் சுமார் 17 - 18 மீட்டர் அளவு அடியில் உள்ளது. இந்த மேம்பாலம் அமைய உள்ள இந்த அண்ணா சாலைக்கு அடியில், 2.48 கி.மீ நீளம் மெட்ரோ இரயில் வழித்தடம் உள்ளது. மேலும் தேனாம்பேட்டை மற்றும் சைதாப்பேட்டை மெட்ரோ நிலையங்களும் 230 மீட்டர் வரை இந்த சாலைக்கு அடியில் உள்ளது.
இந்த மேம்பாலத்திற்கான அடித்தளம் அமைக்க அண்ணா சாலையின் மேற்பரப்பில் இருந்து 7 மீட்டர் வரை தோண்டப்பட வேண்டும். மேலும் இதற்காக வழக்கமான பயன்படுத்தப்படும் Piling Machineக்கு பதிலாக Micro- Piling Machine பயன்படுத்தப்படுகிறது. இந்த குறைந்த ஆழத்தில் பாலத்தின் தூண்களுக்கான அடித்தளம் அமைக்கப்படுவதால், அதனை நிலையானதாகவும் வலுவானதாகவும் அமைக்க சில சிறப்பு கட்டுமான பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் நெருக்கடியான இந்த சாலையில் மேம்பால கட்டுமானத்திற்கான கருவிகளை கொண்டு வந்து பொருத்துவதும் சிரமமான பணியாகவும் செலவு பிடிப்பதாகவும் இருப்பதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரி குறிப்பிடுகிறார்.
இந்த காரணங்களால் தான் இந்த மேம்பாலத்தின் கட்டுமான செலவு அதிகமாக உள்ளதை புரிந்துகொள்ள முடிகிறது. இந்த மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்தால், தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை இடையிலான சாலை போக்குவரத்து 40 நிமிடங்களில் இருந்து 10 நிமிடங்களாக குறைந்து விடும். எல்டாம்ஸ் சாலை, SIET கல்லூரி சாலை, செனோடாப் சாலை, நந்தனம், CIT நகர், CIT நகர் 1வது பிரதான சாலை (டி நகர் நோக்கி), மற்றும் ஜோன்ஸ் சாலை ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.
இந்த மேம்பாலத்தின் கட்டுமான பணியில் உள்ள சிக்கல்கள் எதையும் கணக்கில் கொள்ளாமல், தேசிய நெடுஞ்சாலைத் துறை மேம்பாலம் ஒன்றின் ஒரு கி.மீ அளவிற்கு ரூ. 120 முதல் 130 கோடி வரை மட்டுமே செலவு செய்வதாகவும் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத் துறை மேம்பாலம் ஒன்றின் ஒரு கி.மீ அளவிற்கு ரூ. 195 கோடி வரை செலவு செய்வதாகவும் ஒப்பீடு செய்வது உண்மையை திரித்து கூறுவதாகும்.