தடுப்பூசிகளுக்கு எதிராக நச்சுக் கருத்துக்களை பரப்பும் ஶ்ரீதர் வேம்பு!
ஏற்கனவே தடுப்பூசிகள் மீது மக்களுக்கு அவநம்பிக்கை அதிகரித்துவரும் நிலையில், ஶ்ரீதர் வேம்பு போன்ற உயர் பொறுப்பில் இருப்பவர்கள் தடுப்பூசிகள் பற்றி தவறான கருத்துக்களை பரப்பினால் பிரச்சினை இன்னும் அதிகரிக்கவே செய்யும்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பொது சுகாதார அச்சுறுத்தலாக உருவெடுத்த போது அதை கட்டுப்படுத்துவதில் கொரோனா தடுப்பூசிகள் முக்கிய பங்காற்றியது. தடுப்பூசிகள் இவ்வாறான பொது சுகாதார நெருக்கடியை கடந்த வர உதவியிருந்தாலும், தடுப்பூசிகள் மீதான அவநம்பிக்கை மக்கள் மத்தியில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவது கவலைக்குரிய விடயமாகும்.
ஏற்கனவே தடுப்பூசிகள் மீது மக்களுக்கு அவநம்பிக்கை அதிகரித்துவரும் நிலையில், ஶ்ரீதர் வேம்பு போன்ற பிரபலமான உயர் பொறுப்பில் இருப்பவர்கள் தடுப்பூசிகள் பற்றிய ஐயப்பாட்டை பொது மக்கள் மத்தியில் விதைக்கும் போது பிரச்சினை இன்னும் அதிகரிக்கவே செய்யும்.
‘McCullough Foundation’ என்ற ஆய்வு நிறுவனம், ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு (ADS) என்ற நரம்பியல் நோய் குழந்தைகளுக்கு ஏற்பட என்னென்ன தீர்மானகரமான காரணிகள் இருக்கின்றன என்பது குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதனை மேற்கோள் காட்டி, ‘இந்தியாவில் சிறிய குழந்தைகளுக்கு அதிகப்படியான தடுப்பூசிகள் கொடுக்கப்படுகிறது இதனால் இந்தியாவில் ஆட்டிசம் வேகமாக அதிகரித்து வருவதைக் காண்கிறோம்’ என்ற ZOHO மென்பொருள் நிறுவனத்தின் முன்னாள் முதன்மை செயல் அதிகாரியான ஶ்ரீதர் வேம்பு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
Parents should take this analysis seriously. I believe there is increasing evidence that we are giving way too many vaccines to very young children. This is spreading in India too and we are seeing a rapid increase in autism in India. https://t.co/AeiVaieYug
அவர் குறிப்பிடும் ‘McCullough Foundation’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையை பகுப்பாய்வு செய்தபோது, குழந்தைகளுக்கு 9 வயதிற்குள் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு (ASD) ஏற்பட முக்கியமான காரணியாக பெற்றோர்கள் வயது முதிர்ந்த காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்வது, குறைப் பிரசவம், மரபணு மாற்றம், சுற்றுச்சூழலில் உள்ள நச்சுப் பொருட்கள், குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்படுவது ஆகியவை குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த ஆய்வறிக்கையில், ‘குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்படுவதற்கும் ஆட்டிசம் குறைபாடு ஏற்படுவதற்கு இடையிலான தொடர்பு குறித்து 136 ஆய்வுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும், அவற்றில் 107 ஆய்வுகள் தடுப்பூசியில் உள்ள கூறுகளுக்கும் ஆட்டிசம் அல்லது பிற நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடுகளுக்கும் தொடர்பிருப்பதாக தெரிவிப்பதாகவும்’ குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ‘குழந்தைகள் முக்கியமான நரம்பியல் வளர்ச்சியை பெற்றுவரும் குறிப்பிட்ட வயதில் போடப்படும் தடுப்பூசியின் மருந்தின் அளவு மற்றும் அவை குழந்தைகளுக்கு மிகச் சிறிய வயதிலே போடப்படுவது ஆகியவை ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு (ASD) ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதாக’ இந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
தடுப்பூசிகள் பற்றி இத்தகைய எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்டுள்ள ‘McCullough Foundation’ ஆய்வு நிறுவனத்தை பற்றி இணையத்தில் தேடினோம். இதன் தலைவர் பீட்டர் மெக்கல்லோ என்பது தெரியவருகிறது.
இந்த பீட்டர் மெக்கல்லோ என்பவர் மருத்துவ உலகில் ஏற்கனவே தடுப்பூசிகள் குறித்த சர்ச்சைகளுக்கு பெயர்போனவர். இவர், கொரோனா தொற்று ஏற்பட்டு குணமான நபர்களுக்கும், 50 வயதிற்கு குறைவான ஆரோக்கியமான நபர்களுக்கும் கொரோனா தடுப்பூசிகள் போடவேண்டிய தேவை என்ன இருக்கிறது என்றும் அவ்வாறு தடுப்பூசிகள் போடுவதால் ஆபத்துக்கள் ஏற்படக்கூடும் என்றும் கருத்துகளை பொது மக்கள் மத்தியில் பரப்பியதற்காக ‘American Board of Internal Medicine’ என்ற அமைப்பால் ஒழுங்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த ஆய்வறிக்கை அறிவியல் நிபுணர்கள் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட (peer-reviewed) ஒன்று அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசிகளுக்கு எதிரான கருத்துடைய குழு ஒன்றே இந்த ஆய்வறிக்கையை தனது சொந்த தளத்தில் வெளியிட்டுள்ளது. பல்வேறு தரநிலைகளில் உள்ள பல ஆய்வறிக்கைகளிருந்து கருத்துகளை எடுத்து, கலந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட சில முடிவுகளை மட்டும் கொண்டு அறிவியலுக்கு புறம்பான (unscientific) முறையில் இந்த ஆய்வறிக்கை எழுதப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
ஏற்கனவே கொரோனா தடுப்பூசிகளால் அதிக மரணங்கள் ஏற்படுவதாக வதந்திகள் பரப்பப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால், ஆய்வுகள் இதனை மறுக்கின்றன. கொரோனா தடுப்பூசிகள் மரணத்திற்கான அபாயத்தை அதிகரிக்கவில்லை. மாறாக இந்த தடுப்பூசிகள் கடுமையான நோய் பாதிப்பிலிருந்தும் அதனால் ஏற்படும் மரணத்திருந்தும் மக்களை பாதுகாக்கிறது. சில கடுமையான பக்க விளைவுகள் இந்த தடுப்பூசிகளால் ஏற்படுவது உண்மை தான் என்றாலும், இந்த தடுப்பூசிகளால் விளையும் நன்மைகளைவிட இவை மிகவும் குறைவானதே என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தடுப்பூசிகளால் சின்னம்மை (Smallpox) உலகம் முழுவதும் ஒழிக்கப்பட்டிருக்கிறது. போலியோ நோய் பெருமளவில் ஒழிக்கப்பட்டிருக்கிறது. Diphtheria என்று சொல்லப்படும் தொண்டை அழற்சி மற்றும் தட்டம்மை (measles) போன்ற குழந்தைகளை தாக்கும் நோய்கள் தடுப்பூசிகள் மூலம் பெருமளவில் குறைக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தாலும், 1994 முதல் 2023 ஆண்டு வரையில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதன் மூலம் 10.1 லட்சம் குழந்தைகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் கணக்கில் எடுத்துக்கொண்டால், தடுப்பூசிகள் கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் 15.4 கோடி உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறது. அதில் 10.1 கோடி குழந்தைகளும் அடங்குவர்.
இவ்வாறு மனித உயிர்களை காப்பாற்றுவதில், குழந்தைகள் மரணத்தை பெருமளவில் தடுப்பதில் அரும்பங்காற்றியுள்ளது தடுப்பூசிகள். அதேநேரத்தில் மேற்கூறியது போல், தடுப்பூசிகளால் பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதும் உண்மைதான். ஆனால் இந்த பக்கவிளைவுகளை விட தடுப்பூசிகளால் ஏற்படும் நன்மைகள் பல மடங்கு அதிகமாகும். ஆனால், இதனை புரிந்துகொள்ளாமல் தொடர்ந்து அறிவியலுக்கு புறம்பான வகையில் தடுப்பூசிகளுக்கு எதிரான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில் இந்த போக்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் சமூகப் பொறுப்புடன் தடுப்பூசிகளுக்கு ஆதரவாக அறிவியல் மனப்பான்மையை பிரச்சாரம் வேண்டுமே ஒழிய ஶ்ரீதர் வேம்பு போல் தவறான கருத்துகளைக் பரப்புக்கூடாது.