சமூகத்தை அச்சுறுத்தும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை!
பாதுகாப்பானது என்று நம்பப்படும் வீட்டிலும், சுற்றத்திலும்; நம்பகமானர்கள் என்று நினைக்கும் உறவினர்கள், பழக்கமானவர்களால் குழந்தைகள் மீது ஏவப்படும் பாலியல் வன்முறை.
’குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறை என்பது நமது தார்மீக மனசாட்சியின் மீதான ஒரு கறை’ என்று ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் (UNICEF) நிர்வாக இயக்குனர் கேத்தரின் ரஸ்ஸல் கூறுவது மறுக்கமுடியாத உண்மையாகும்.
தங்களுக்கு என்ன நிகழ்கிறது என்பதை விளங்கிக்கொள்ள முடியாத வயதில் இருக்கும் குழந்தைகளின் பலவீனமான நிலையை பயன்படுத்திக்கொண்டு அவர்கள்மீது பாலியல் வன்முறையை கட்டவிழ்த்துவிடும் மனிதர்கள் வாழும் ஒரு சமூகம் நாகரிகமான சமூகமாக இருக்கமுடியாது. ஆனால், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என்பது நாடு, சமூகம், கலாச்சாரம் ஆகியவற்றை கடந்து எங்கும் பரவலாக நடப்பதாக இருக்கிறது.
போர், இன மோதல்கள், மதக் கலவரங்கள் போன்ற சச்சரவுகளின்போது எதிரி சமூகப் பெண்கள்மீது திட்டமிட்ட வகையில் வன்முறையை ஏவுவதை எல்லா நாடுகளும் செய்கிறது. இதுபோன்ற சச்சரவுகளின் சமயத்தில் குடும்பம், அரசு, குடிமைச் சமூகம் போன்ற நிறுவன அமைப்புகள் செயலிழந்து போகும்போது மிகவும் பலவீனமான குழந்தைகள்தான் பாலியல் வன்முறைகளுக்கு எளிய இலக்குகள் ஆகிறார்கள்.
குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கும் குற்றவாளிகள் பெரும்பாலும் அந்த குழந்தையின் உறவினர்களாகவோ அல்லது பழக்கமுள்ள நபர்களாகவோதான் இருக்கிறார்கள். ’இந்தியாவைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட 90% பாலியல் வன்முறை நம்பகமான உறவினர்களாலும், பழக்கமுள்ள சுற்றத்தாராலும்தான் நிகழ்த்தப்படுகிறது’ என்கிறார் 'நிரந்தர் பிரயாஸ்' என்னும் அரசுசாரா நிறுவனத்தின் தலைமையதிகாரி ரோஹன்.
UNICEF அமைப்பின் சமீபத்திய கணக்கீடுகளின்படி உலகம் முழுவதும் 18 வயதுக்கு குறைவான வயதில் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 37 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்பது தெரியவருகிறது. ஆண் குழந்தைகளையும் இதற்கு சமமான அளவில் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள்.
2007ஆம் ஆண்டில், இந்தியாவின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் நடத்திய ஆய்வில், நாட்டில் உள்ள மொத்த குழந்தைகள் எண்ணிக்கையில் 53.22% குழந்தைகள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மொத்த குழந்தைகளில் 52.94% ஆண் குழந்தைகளும் , 47.06% பெண் குழந்தைகளும் அடக்கம்.
அதிலும் குறிப்பாக, 14 முதல் 17 வயது வரையுள்ள பதின்பருவ குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இந்த வயதில் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் குழந்தைகள் தங்களது வாழ்வின் நீண்ட காலத்திற்கு இந்த வன்முறையின் வடுவை சுமக்கிறார்கள்.
விளைவுகளை எதிர்கொள்ளுதல் என்னும் வகையில் பார்க்கும்போது, 18 வயதிற்கு மேலான வயது வந்தவர்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறைக்கும் 18 வயதிற்கு குறைவான குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகளும் வேறுபட்டது. ஏனெனில், பாலியல் வன்முறை நிகழ்த்தப்பட்டதும், பெரும்பாலான குழந்தைகள் அதை வெளியில் சொல்வதில்லை. அவர்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பதை அவர்களால் உடனடியாக புரிந்துகொள்ள முடிவதில்லை.
குழந்தைகள் தாங்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டது பற்றி பெற்றோர்களிடம் ஒரேயடியாக தெரிவித்துவிடுவதில்லை. அது கட்டம் கட்டமாக நிகழும் செயல்முறையாக இருக்கிறது. முதலில் உடல்ரீதியான வலிகள், உபாதைகள் பற்றிய தகவல்களாக, பின்னர் அவர்களின் நடத்தையில் ஏற்படும் பாரிய மாறுபாடுகளாலும் தங்களை அறியாமலே வெளிப்படுத்துகிறார்கள்.
பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனுபவிக்கும் மன அதிர்ச்சி நாம் கற்பனை செய்யமுடியாத அளவிற்கு சிக்கலானது. மேலும், பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளியாக கருதும் வழக்கமுள்ள சமூகத்தில் அவர்களின் நிலை இன்னும் மோசமானது.
வெகுவான நகரமயமாக்கல் காரணமாக கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து தனிக் குடும்பங்களாக (Nuclear Family) மாறிவிட்ட இன்றைய சூழலில், குறிப்பாக கணவன் மனைவி இருவரும் வேலைக்கு சென்றால் மட்டுமே குடும்பத்தின் நிதித் தேவையை பூர்த்தி செய்யமுடியும் என்ற நிலையில் இருக்கும் தனிக் குடும்பத்தில் குழந்தைகளுக்கு முழுமையான கவனிப்பு கிடைப்பதில்லை. இங்கே குழந்தைகள் பெரும்பாலும் மழலையர் பள்ளிகளில்தான் வளர்கிறார்கள்.
இந்தியா பல்வேறு கலாச்சாரங்கள் கொண்ட பன்முகத்தன்மை வாய்ந்த நிலப்பரப்பாக இருந்தாலும், இங்கே குடும்பங்களின் இயல்பு என்பது பொதுவான ஒன்று. வாழ்க்கையை ஓட்டுவதற்கும், நல்லநிலைக்கு முன்னேறுவதற்கும் உறவினர்களிடம் இணக்கமாக இருக்கவேண்டிய அவசியம் இருக்கிறது. இந்நிலையில், ஒரு குழந்தை அதே குடும்பத்தின் உறவினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சொல்லும்போது அதை மூடிமறைக்கவே முயற்சிப்பார்கள்.
பாலியல் குற்றவாளியின் மனைவி குழந்தைகளை காரணம்காட்டி, அவர்மீது புகார் கொடுத்தால் இந்த அப்பாவிகள் வாழ்க்கையும் பாதிக்கப்படும் என்று சொல்லி புகார் கொடுப்பதை குடும்பத்தினர் தடுக்கவே நினைப்பார்கள். இப்படி குற்றவாளிகளை பாதுகாக்கப்படுவது பற்றியும் பாலியல் புகார்கள் பதிவாகாமல் இருப்பது பற்றியும் கிறிஸ்டியன்ஸ் ரத்னா கிருபா என்ற மருத்துவர் தனது கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.
குழந்தைகளை பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாக்க 2012ஆம் ஆண்டுதான் POCSO சட்டம் கொண்டுவரப்பட்டது. அதற்கு முன்பு வரை இந்தியாவில், பாலியல் வன்கொடுமை (Rape) தவிர்த்த பிற கண்டிக்கத்தக்க பாலியல் நடத்தைகளுக்கு தனியாக சட்டம் ஒன்றுமில்லை. POCSO சட்டம் வந்த பின்னரும் பெரிதாக மாற்றம் ஒன்றும் ஏற்படவில்லை. இந்திய நீதித்துறையே இந்த சட்டத்தின் நோக்கத்தையும் வரையறையையும் சரியாக புரிந்துகொள்ளவில்லை. இதை எடுத்துக்காட்ட ஒரு உதாரணம் போதும்.
2021ஆம் அண்டு ஜனவரி மாதம் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை, ‘ஒரு மைனர் பெண்ணின் ஆடையை கழற்றாமல் அதாவது Skin to Skin contact இல்லாமல் தொடுதல் POCSO சட்டத்தின்படி பாலியல் வன்கொடுமை என்ற வரையறைக்குள் வராது’ என்று தெரிவித்தது.
பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட குழந்தைகள் நீண்டகால பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். மேலும் ஒருமுறை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட குழந்தை மீண்டும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாக உளவியலாளர்கள் சொல்கிறார்கள். ஒருமுறை பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியின் தாக்கத்தோடு இதற்கு நேரடி தொடர்பு உண்டு.
முதல்முறை பாதிக்கப்பட்டபோது ஏற்படும் அதிர்ச்சியுடன் (Trauma) குற்ற உணர்வு, அவமான உணர்ச்சி, தாங்களையே பழி சுமத்திக்கொள்ளும் போக்கு ஆகியவை பாதிக்கப்பட்டவர்களிடம் உண்டாகிறது. இதனால், குற்றம் இழைத்த குற்றவாளிகளுக்கு சாதகமாக இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களிடம் உரையாடும்போது, அவர்களிடம் குற்றவாளிகளை பற்றி பேச வேண்டும். அப்போதுதான் அவர்கள் குற்ற உணர்வில் இருந்து விடுபட்டு உண்மை குற்றவாளியை பொறுப்பாக்க முடியும்.
குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை எதிர்கொள்ளவது பற்றிய மாநாடு கொலம்பியாவில் அடுத்த மாதம் நடக்கவிருக்கிற நிலையில், ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) சில வழிகாட்டுதல்களை கொடுத்துள்ளது.
- குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை நடக்க வகைசெய்யும் சமூக கலாச்சார வழக்கங்களை மாற்றம் வேண்டும்,
- பாதிக்கப்பட்ட குழந்தைகள் உதவிகோர வசதியான சூழலை ஏற்படுத்துதல்,
- தங்கள்மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகளை இனம்கண்டு கொள்ளும் வகையில் குழந்தைகளுக்கு துல்லியமான தகவல்களுடன் கல்வி அளித்தல்,
- பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தையும் நீதியையும், குணம் அடைய ஏதுவான சாதனங்களையும் நாடிச் செல்லும் வசதிகளை ஏற்படுத்தல்,
- குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டங்களை கடுமையாக்குதல்.
இந்த வழிகாட்டுதல்கள் தேவையானதாக இருப்பினும், குழந்தைகளை பாலியல்ரீதியாக அணுகும் எண்ணப்போக்கை அடியோடு களையும் வகையில் சமூகத்தில் வேர்மட்ட அளவில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.