YouTurn

கிருஷ்ணகிரி பாலியல் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன் மரணம்… காரணம் என்ன?

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் போலி என்.சி.சி. பயிற்சியாளராக இருந்து பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், நேற்று (ஆக, 23) காலை அவர் காலமானார்.

கிருஷ்ணகிரி பாலியல் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன் மரணம்… காரணம் என்ன?

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் கடந்த 5 முதல் 9ஆம் தேதி வரை நடந்த என்.சி.சி. (தேசிய மாணவர் படை) முகாமுக்குச் சென்ற 8ஆம் வகுப்பு மாணவிக்கு சிவராமன் என்ற பயிற்சியாளர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் மாணவி புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காததால், பெற்றோரிடம் நடந்ததை விவரித்துள்ளார். 

இதுகுறித்து பர்கூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் என்சிசி பயிற்சியாளர் சிவராமன், பள்ளி முதல்வர் சதீஷ்குமார் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் குற்றத்தை மறைக்க முற்பட்டதினால் பள்ளி முதல்வர், ஆசிரியர் என பலர் கைது செய்யப்பட்டனர். 

இதில் முக்கிய குற்றவாளியான சிவராமனைக் கடந்த 19ஆம் தேதி காவல் துறை கைது செய்தது. கைது செய்யும் போது தப்பி ஓட முயன்றதில் சிவராமனின் கால் உடைந்ததாகக் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. இந்நபர் மேலும் பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதற்கிடையில் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறைச் செயலாளராக இருந்த சிவராமன் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் எனத் தெரிந்ததும், கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக ஆகஸ்ட் 17ஆம் தேதி அறிக்கை வெளியானது. 


இந்த வழக்கை விசாரிக்க ஐ.ஜி. பவானீஸ்வரி தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு மற்றும் சமூக நலத்துறைச் செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் பல்நோக்கு குழு அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிவராமன் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் உயிரிழந்ததாகச் செய்திகள் வெளியாகின. அவரது தந்தை அசோக்குமாரும் அதற்கு முந்தைய நாளான 22ஆம் தேதி இரவு மரணமடைந்துள்ளார். 

இரண்டுமுறை தற்கொலைக்கு முயற்சி:

கடந்த ஜூலை மாதம் 7ஆம் தேதி இரவு சுமார் 7 மணியளவில் சிவராமன் எலி மருந்தைச் சாப்பிட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட பாதிப்புக்களைத் தொடர்ந்து 9ஆம் தேதி காலை 2.30 மணியளவில் கிருஷ்ணகிரியில் உள்ள TCR பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்து ஜூலை 17ஆம் தேதி வீடு திரும்பியுள்ளார்.


ஆகஸ்ட் 22ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பில் கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை பேசுகையில், வலதுகாலில் முறிவு ஏற்பட்ட சிவராமனுக்குக் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேல் சிகிச்சைக்காகச் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

(தினகரன், 23.08.2022 பக்.4)

அப்போது, ஏன் சேலத்திற்கு அனுப்பியுள்ளீர்கள் என நிருபர் கேள்வி எழுப்பியதற்கு, "கைதாகும் போது சிவராமன் எலி பேஸ்ட் தின்று தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அதற்கும் சேர்த்து சிகிச்சை அளிக்கவே சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்" எனப் பதிலளித்துள்ளார். மேலும் இதற்கு முன்னர் ஜூலை மாதம் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தையும் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக மருத்துவர் ஒருவரைத் தொடர்புகொண்டு பேசுகையில், "உட்கொண்ட எலி மருந்தின் அளவை பொருத்து அதன் பாதிப்பு நேரம் மற்றும் தன்மை மாறுபடும். அப்படித்தான் ஜூலை மாதம் 7ஆம் தேதி அவர் சாப்பிட்ட எலி மருந்தின் பாதிப்பு ஜூலை 9ஆம் தேதி வெளிப்பட்டுள்ளது. அதற்கு அவர் சிகிச்சை பெற்றிருந்த நிலையிலும், மீண்டும் எலி மருந்து சாப்பிட்டதால் அதன் வீரியம் அதிகமாகி உடலைப் பாதித்துள்ளது" எனக் கூறினார். 

மேலும், ஒரு குற்றவாளியைக் கைது செய்ததும் அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார். அப்போது அவர் உடல்நிலையில் என்னென்ன பிரச்சனைகள் உள்ளது என்பதை மருத்துவ அறிக்கையில் குறிப்பிட்டு இருக்க வேண்டும். ஒரு வேலை கைது செய்யப்படுவதற்கு முன்னதாக அவர் எலி மருந்து சாப்பிட்டு இருந்தால் அது தொடர்பான சிகிச்சையும் முறையாக அளிக்கப்பட்டு இருக்க வேண்டுமெனத் தெரிவித்தார். அவர் கைது செய்யப்பட்ட நாளன்று காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட தகவல் மட்டுமே கூறப்பட்டுள்ளது. அவருக்கு எலி மருந்து உட்கொண்டதற்கு சிகிச்சை அளிப்பது 22ஆம் தேதிதான் ஊடகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிவராமன் ஜூலை மாதம் எலி மருந்து சாப்பிட்டு தீவிர சிகிச்சைபெற்று வந்தபோது அவரை நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் சந்தித்து சிவராமன் மனைவியிடம் சிகிச்சைக்காக நிதியுதவி அளித்துள்ளனர். 

சிவராமனின் தந்தை மரணம்: 

சிவராமனின் தந்தை அசோக் குமார் 22ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் காவேரிப்பட்டினத்தில் இருந்து திம்மாபுரம் காந்தி நகர் பகுதியில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். மது போதையில் வாகனத்தை ஓட்டிச்சென்றபோது எதிர்பாராத விதமாகத் தானாகக் கீழே விழுந்ததில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. 

தந்தை - மகன் இருவரும் அடுத்தடுத்து இறந்தது மக்கள் மத்தியில் சந்தேகத்தை எழுப்பி இருந்த நிலையில், காவல்துறை தரப்பிலும் இது தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், சிவராமன் கைது செய்யப்பட்டபோது பெறப்பட்ட வாக்குமூலத்தில், இரண்டு நாட்களுக்கு முன்னர் எலி மருந்து சாப்பிட்டதாக அவரே ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களது இறப்பு பற்றி தவறான தகவல்களைப் பரப்புபவர்கள்மீது சட்டரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. 


அதுமட்டுமின்றி இந்த இருவரின் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். அவர் இதற்கு முன்னர் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகச் சீமானுக்குக் கடிதம் எழுதியதையும் அதனை விசாரிக்கக் கட்சியினரிடம் சொன்னதையும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

சிவராமனின் மரணம் குறித்து காவல்துறை தரப்பிலும் அவருடன் அரசியல்ரீதியாகப் பயணித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அண்ணாமலை போன்றோர் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். 
  

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை