YouTurn

பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்!

இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது போல் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்று பரப்பப்படும் வதந்திகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை.

பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்!

இஸ்ரேல் அமெரிக்கா கூட்டுச் சேர்ந்து ஈரானை தாக்கியதால், ஈரான் இஸ்ரேல் மீதும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE), கத்தார், குவைத், பஹ்ரைன் போன்ற வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீதும் ஏவுகணை தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், வளைகுடா பகுதியில் போர் சூழல் ஏற்பட்டுள்ளது.


இதனைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணை வழியான கடல் போக்குவரத்தை நிறுத்துவதாக ஈரான் அறிவித்தது. இதனால், எரிவாயு, கச்சா எண்ணெய் ஆகியவை கிடைப்பதில் பல்வேறு நாடுகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.



சமையல் எரிவாயு சிலிண்டர்களை தொடர்ந்து, பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற பீதியில் மக்கள் கூட்டம் கூட்டமாக தங்களது வாகனங்களுடன் பெட்ரோல் பங்குகளில் வரிசையில் நிற்கிறார்கள். சிலர் டெங்க் முழுவதும் நிரப்பிச் செல்கிறார்கள். சிலர் பெரிய கேன்களில் நிரப்பிச் செல்கின்றனர்.



ஆனால் இந்தியாவின் முன்னணி பெட்ரோல் சுத்திகரிப்பு நிறுவனங்களான இந்தூஸ்தான் பெட்ரோலியம் (HP), பாரத் பெட்ரோலியம் (BPCL),  இந்தியன் ஆயில் கார்பரேன் (IOCL) போன்றவை பெட்ரோல் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக பரப்பப்படும் வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை, அதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகள் வெளியிட்டுள்ளன. 


’நாடு முழுவதும் உள்ள பெட்ரால் நிரப்பும் நிலையங்கள் (Fuel Stations) இயல்பாக இயங்கி வருகிறது. இது போன்ற குறுகிய கால உலகளாவிய இடையூறுகளை சமாளிக்க இந்தியா போதுமான எரிபொருள் இருப்பு மற்றும் மாற்று விநியோக ஆதாரங்களைக் கொண்டுள்ளது, நாடு முழுவதும் சீரான எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்து வருகிறோம். இதனால் மக்கள் பீதியடையத் தேவையில்லை’ என்று இந்த நிறுவனங்கள் கூறியுள்ளன.



மேலும், ’தமிழ்நாட்டில் உள்ள இந்திய ஆயில் நிறுவனத்தின் அனைத்து பெட்ரோலிய முனையங்களும் விநியோக மையங்களும், வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் போதுமான அளவில் பெட்ரோல் மற்றும் டிசல் இருப்புடன் உள்ளது’ என இந்தியன் ஆயில் கார்பரேன் அறிக்கை வெளியிட்டுள்ளது. 


இந்தியாவில் எரிவாயு சிலிண்டர்கள் போல் பெட்ரோல் டீசலுக்கு தட்டுபாடு ஏற்பட வாய்ப்பில்லை என்பதற்கான காரணங்களை விளக்கி ‘புதிய தலைமுறை’ வெளியிட்டுள்ள கட்டுரையைக் காணமுடிந்தது. 


அதன்படி, 2004-ஆம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சியில் ’Indian Strategic Petroleum Reserves Limited’ என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனம் விசாகப்பட்டினம், மங்களூரு மற்றும் பாடூர் ஆகிய இடங்களில் நிலத்தடிப் பாறைகளைக் குடைந்து பிரம்மாண்ட சேமிப்புக் கிடங்குகளை அமைத்தது. இந்த பாறைக் கிடங்குகளில்  5.33 மில்லியன் மெட்ரிக் டன் கொள்ளளவு வரை கச்சா எண்ணெய் இருப்பு வைக்க முடியும். இது இந்தியாவின் 9.5 நாட்களுக்கான எண்ணெய் தேவையைப் பூர்த்தி செய்யும் திறன் கொண்டது. 


image.png


இதை தவிர இந்தியாவில் உள்ள இந்தூஸ்தான் பெட்ரோலியம் (HP), பாரத் பெட்ரோலியம் (BPCL),  இந்தியன் ஆயில் கார்பரேன் (IOCL)  போன்ற எண்ணெய் நிறுவனங்கள் எப்போதும் சுமார் 64 முதல் 70 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெயைத் தங்கள் சொந்த டாங்கிகளிலும், சுத்திகரிப்பு நிலையங்களிலும் வைத்திருப்பார்கள். போர்ச் சூழலில் எண்ணெய் நிறுவனங்களின் இந்த கையிருப்பு காலியானால் மட்டுமே அரசு இந்த பாறைக் குகைகளில் உள்ள கையிருப்பை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கும். 


மேலும் இந்தியா கடந்த பத்தாண்டுகளாக கச்சா எண்ணெய் ஆதாரத்தை பன்முகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது, கச்சா எண்ணெய்க்காக ஒரு நாட்டை மட்டும் அதிகமாக சார்ந்திருக்காமல், பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இந்தியா தற்போது 40  நாடுகளிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது.



இதனை கணக்கில் கொண்டு தான், இந்திய பெட்ரோலியம் விற்பனையாளர்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுரேஷ் குமார் கூறுகையில், “நம்மிடம் நிலத்தடிக் குகைகளில் கச்சா எண்ணெய் இருப்பு இருக்கிறது, மேலும் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் பல்வேறு  துறைமுகங்களில் உள்ள கப்பல்களில் கச்சா எண்ணெய் இருப்புகள் உள்ளன. இவை அனைத்தும் சேர்ந்து 74 நாட்களுக்கு கச்சா எண்ணெய் இருப்பு நம்மிடம் உள்ளது. மேலும், இந்த போரால் பாதிக்கப்படாத நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது” என்று குறிப்பிட்டார். 


ஆனால் எரிவாயு (LPG) விஷயத்தில் இதுபோன்று இருப்பு வைக்கும் கட்டமைப்புகள் ஏதும் இந்தியாவில் இல்லை. இந்தியா தற்போது 20 மில்லியன் டன் எரிவாயு இறக்குமதி செய்கிறது. இந்தியாவின் மொத்த எரிவாயு பயன்பாட்டில் 60 சதவீதம் இறக்குமதியை சார்ந்திருக்கிறது. இந்த இறக்குமதியில் 85 சதவீதத்திற்கும் மேலாக ஹார்முஸ் நீரிணை வழியாக தான் இந்தியா வந்து சேர்கிறது. இதனால் தான் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்ட வெகு சில நாட்களிலே இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது. 


image.png


இந்தியாவின் எரிவாயு அமைப்பு என்பது தொடர்ந்து செயல்பாட்டுக்காக அதனை விநியோகம் செய்யும் வலைப்பின்னலாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. சேமிப்புக்கான உள்கட்டமைப்பு அதில் இல்லை.  மேலும், நிலத்தடியில் பெரிய அளவிலான சேமிப்பு கிடங்கு அமைத்து சேமிப்பை அதிகரிப்பதற்கான உறுதியான திட்டங்கள் எதுவும் தற்போது இந்தியாவிடம் இல்லை. இந்தியாவில் இவ்வாறான எரிவாயு சேமிப்பு கிடங்குகள் இல்லாததை சர்வதேச எரிசக்தி நிறுவனமே (IEA)  உள்கட்டமைப்பு பலவீனமாக குறிப்பிட்டுள்ளது.


மேற்கூறிய விவரங்களிலிருந்து, இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது போல் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்று பரப்பப்படும் வதந்திகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை. இதனால், ஆதாரமில்லாமல் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். 


பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை