YouTurn

அரைஞாண் கயிறு கட்டுவதற்குப் பின்னால் அறிவியல் காரணம் உள்ளதா? உண்மை என்ன?

அரைஞாண் கயிறு கட்டுவதால் மருத்துவ பயன்கள் ஏற்படுமென அறிவியல் காரணங்களோ, ஆய்வுகளோ எதுவும் இல்லை. அது நீண்டகால பழக்கத்திற்காக மட்டுமே கட்டப்படுகிறது.

அரைஞாண் கயிறு கட்டுவதற்குப் பின்னால் அறிவியல் காரணம் உள்ளதா? உண்மை என்ன?

அரைஞாண் கயிறு கட்டுவது இந்தியா முழுவதும் ஒரு பழக்கமாகப் பின்பற்றப்படுகிறது. இதற்கு அறிவியல் மற்றும் மருத்துவ காரணங்கள் உள்ளதாக நீண்ட காலமாக சில தகவல்கள் பரப்பப்படுகிறது. 


அவ்வகையில், குடல் இறக்க நோய் ஏற்படாமல் தடுப்பதற்காகவே அரைஞாண் கயிறு கட்டப்படுவதாக ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் வைரல் செய்யப்பட்டது. விகடன் இணையதளத்திலும் ‘அரைஞாண் கயிறு; அணிந்துகொள்வதன் பின்னிருக்கும் ஆரோக்கியக் காரணி என்ன?’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்படி எந்த அறிவியல் காரணமும் இல்லையென முனைவர் தில்லி என்பவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 


https://www.instagram.com/p/C-saNgQBU4Y/


இது தொடர்பாக அவரை தொடர்பு கொண்டு பேசினோம். ”அரை - இடுப்பு; ஞாண் - கயிறு”. குழந்தைகளுக்கு இடுப்பில் கட்டும் இந்த அரைஞாண் கயிறு தீய சக்திகளை அண்டவிடாது, ஆண்கள் கச்சையைக் கட்டுவதற்கு, நீச்சல் கற்றுக்கொள்வதற்கு, வேட்டை ஆயுதங்கள் தொங்க விடுவதற்கு எனப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுவதுண்டு. இத்தகைய காரணங்களைத்தாண்டி குடல் இறக்கம் (Hernia), உணவு செரிமான கோளாறுகள் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம் என்றும் ஆரோக்கியமான விந்து உற்பத்திக்கு உதவும் என்றும் மருத்துவ காரணங்கள் சொல்லப்படுகின்றன” என்றார்.


”இவை எல்லாம் முற்றிலும் பொய்யான  தகவல்கள். வயிற்றில் உண்டாகும் குடல் இறக்கத்திற்கும், விந்து உற்பத்திக்கும், செரிமானத்திற்கும், வெளியே கட்டும் கயிற்றுக்கும் எப்படி சம்பந்தம் இருக்க முடியும்? பெரும்பான்மையான இந்தியர்கள் குடல் இறக்க  நோயால்  அவதியுறுகின்றனர். வருடத்திற்கு 10 லட்சத்திற்கு மேற்பட்டவர்களுக்குக் குடல் இறக்கத்தைச் சரி செய்யும் அறுவை சிகிச்சை (Hernia Correction Surgery) மூலமே தீர்வு கிடைக்கிறது.


அதே போல, குழந்தையின்மைக்கு (infertility) புகைப்பிடித்தல், மது அருந்துதல்,  மன இறுக்கம், நீரிழிவு நோய் தாக்கம் போன்ற பல காரணிகள் உள்ளது. இவற்றைச் சரி செய்தாலே ஆரோக்கியமான விந்து உற்பத்தியாகும்.  வெறும் கயிறு கட்டுவதால் எந்த வித பயனும் இல்லை. ஆரோக்கியமான வாழ்க்கை, தொடர் உடற்பயிற்சி, உடல் உழைப்பிற்கு ஏற்ற உணவு, நேரத்திற்கு உணவு என்று வாழ்வியலை வகுப்பதன் மூலம் செரிமான பிரச்சினைகளைச் சரி செய்ய இயலுமே தவிர  இடுப்பில் கட்டும் அரைஞாண் கயிற்றால் எதுவும் நிகழப் போவதில்லை” எனக் கூறியதுடன் ஆய்வுக் கட்டுரைகளையும் நம்முடன் பகிர்ந்தார்.


அரைஞாண் கயிறு தொடர்பாக மருத்துவர் கார்த்திகேயன் தனது யூடியூபில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், ”அரைஞாண் கயிறு கட்டப்படுவதால் குடல் இறக்க நோய் வராமல் தடுக்கப்படலாம் என்பது அனுமானத்தின் அடிப்படையில் மட்டுமே கூறப்படுகிறது. அறிவியல் பூர்வமான ஆய்வுகள் எதுவும் இது தொடர்பாக இல்லை” எனக் கூறியிருந்தார். 


தொடர்ந்து பேசிய முனைவர் தில்லி, ”அக்காலகட்டத்திலிருந்த பழக்க வழக்கங்களை தற்போதைய அறிவியலையும் மருத்துவத்தையும் சேர்த்து பொய்யான பிரச்சாரங்களை மக்களிடம் திணிப்பதை ஒரு போதும் அனுமதிக்க  இயலாது”. 

”அரைஞாண் கயிறு என்பது இடுப்பில் அணியப்படும் கச்சையைப் பிடிப்பாக வைப்பதற்காகவும் வேட்டைக்குப் பயன்படுத்தப்படும் ஆயுதங்களை வைத்துக் கொள்ளப் பயன்படுத்தப்பட்ட ஒன்றே தவிர, அதற்கு மருத்துவ பலன்கள் எதுவும் இல்லை என்பதை மிகத் தீர்க்கமாக அறிவியலின் துணை கொண்டு உறுதியாகச் சொல்ல முடியும்” என விளக்கினார். 

அரைஞாண் கயிறு கட்டுவதால் மருத்துவ பயன்கள் ஏற்படுமென அறிவியல் காரணங்களோ, ஆய்வுகளோ எதுவும் இல்லை. அது நீண்டகால பழக்கத்திற்காக மட்டுமே கட்டப்படுகிறது.


பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை