YouTurn

அதிகரித்து வரும் புற்றுநோய் மரணங்கள்! இந்தியா எதிர்கொண்டிருக்கும் சவால்கள் என்னென்ன?

புற்றுநோயை ஆரம்பித்திலே கண்டறியாமல் இருப்பது, பரவலான மருத்துவ வசதி இல்லாமல் இருப்பது, அதிகமாக சிகிச்சை கட்டணம் ஆகியவை புற்றுநோயை இந்தியா போன்ற நாட்டில் இன்னும் கொடியதாக மாற்றிவிடுகிறது.

அதிகரித்து வரும் புற்றுநோய் மரணங்கள்! இந்தியா எதிர்கொண்டிருக்கும் சவால்கள் என்னென்ன?

இந்தியாவில் அதிகமான மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வருகிறார்கள். அதேநேரத்தில், புதிதாக புற்றுநோய்  ஏற்படும் எண்ணிக்கையை விட அதிகமாக புற்றுநோய் மரணங்கள் ஏற்படுவது பெரும் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளப்படவேண்டிய விஷயமாகும்.

 

டிசம்பர் 5, 2025 அன்று சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் மக்களவையில் அளித்த எழுத்துப்பூர்வ பதிலின்படி, “கடந்த 2015ஆம் ஆண்டில் 13.9 லட்சமாக இருந்த புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை கடந்த 2024ஆம் ஆண்டில் 15.3 லட்சமாக உள்ளது. அதாவது கடந்த பத்தாண்டுகளில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 10.4 சதவீதம் அதிகரித்துள்ளது.


 

இதேபோல், புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை (Mortality) கடந்த 2015ஆம் ஆண்டில் 6.8 லட்சமாக இருந்தது, இந்த எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் 8.7 லட்சமாக உள்ளது. பத்தாண்டுகளில் புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை 28.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

 

புதிய நபர்களுக்கு புற்றுநோய் உண்டாவதற்கும் புற்றுநோயால் இறப்பவர்களுக்கு இடையிலான விகிதம் 2015ஆம் ஆண்டில் 49 சதவீதமாக இருந்தது தற்போது 2024ஆம் ஆண்டில் 57 சதவீதமாக இருக்கிறது. அதாவது, பத்தாண்டுகளுக்கு முன்பைவிட தற்போது புற்றுநோய் தொற்று கண்டறியப்படுபவர்கள் அதிக எண்ணிக்கையில் மரணமடைகிறார்கள்.

 

புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச முகமையின் (IARC) தரவுகளின் படி, அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான் அதிகமான புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் ஒரு லட்சம் மக்களில் 98.5 நபர்களுக்கு புற்றுநோய்  இருப்பதாக கூறப்படுகிறது.

 

கடந்த 2024ஆம் ஆண்டு தேசிய அளவில் சராசரியாக ஒரு லட்சம் மக்களில் 109 பேருக்கு புற்றுநோய் ஏற்படும் நிலை இருந்தது. ஆனால் மாநில வாரியாக புற்றுநோய்  ஏற்படும் விகிதம் இதைவிட அதிகமானதாக இருந்தது. கேரளாவில் ஒரு லட்சம் மக்களில் 170 நபர்களுக்கும் கர்நாடகாவில் 139 நபர்களுக்கும் புற்றுநோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது. அதிகமான நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களிலும் கடலோர மாநிலங்களிலும் புற்றுநோயின் தாக்கம் அதிகமாக ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு லட்சம் மக்களில் 128 நபர்களுக்கு புற்றுநோய் ஏற்பட்டிருக்கிறது.


 

மணிப்பூர், திரிபுரா போன்ற மாநிலங்களில் தேசிய சராசரியை விட குறைவாகவே புற்றுநோய் ஏற்பட்டிருக்கிறது. மிகப்பெரிய நிலப்பரப்பும் அதிக மக்கள் தொகையும் கொண்டு வட மாநிலமான உத்தர பிரதேசத்தில்  ஒரு லட்சம் மக்களில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 93ஆக இருக்கிறது. பீகாரில் இந்த எண்ணிக்கை 90ஆக இருக்கிறது. இந்த எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாக புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அம்மாநிலங்களில் அதிகமாகவே இருக்கிறது. உத்தர பிரதேசம் மாநிலத்தில் மொத்தம் 2.21 லட்சம் நபர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை மேற்கு வங்கத்தில் 1.19 லட்சமாகவும் தமிழ்நாட்டில் 98,386ஆகவும் இருக்கிறது.

 

புற்றுநோயால் ஏற்படும் இறப்புகள் அதிகரித்து வருவதற்கு, புற்றுநோயை ஆரம்பகட்டத்திலே கண்டறிவது, கட்டுபடியாகக்கூடிய செலவில் அதற்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது போன்றவற்றில் உள்ள போதாமைகளும் குறைபாடுகளும் தான் முக்கிய காரணங்களாகும்.

 

புற்றுநோயை ஆரம்பித்திலே கண்டறிவது, சிகிச்சை அளிக்கவேண்டியதன் முக்கியத்துவம் குறித்து ஏற்கனவே நமது ‘You Turn’ தளத்தில் கட்டுரை வெளியிட்டுள்ளோம்.

 

அதில், “ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனை வசதிகளை அறிமுகப்படுத்துவதன் மூலமாக, புற்றுநோய் பரிசோதனை மையங்களை மக்கள் அணுக முடியாத நிலையில் இருக்கும் பிரச்சனையை பெருமளவு குறைத்திருக்க முடியும். ஆனால் நிதி ஆயோக் அறிக்கையின் படி, 10 சதவீதத்திற்கும் குறைவான மையங்கள் மட்டுமே புற்றுநோய் போன்ற நோய்களுக்கான முதல் சுற்று பரிசோதனைகளை செய்து முடித்திருக்கின்றன என்பது தெரிய வருகிறது” என்று குறிப்பிட்டு எழுதியுள்ளோம். அது புற்றுநோய் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போதே அதனை கண்டறிவதில் உள்ள நடைமுறை சிக்கலை எடுத்துக் காட்டுவதாக இருக்கிறது.

 

மேலும், “ஆசிய கண்டத்தில் உள்ள குறை மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் புற்றுநோய்க்கான மருத்துவ கட்டமைப்பு என்பது பற்றாக்குறையாக உள்ளது அல்லது கட்டுபடியாகாத அளவிற்கு செலவு மிகுந்ததாக உள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்களில் புற்றுநோய்க்கான அறிகுறிகள்  தாமதமாக கண்டறியப்படுவதும், அறிகுறிகள் கண்டறியப்பட்ட பின்னர் உயர் சிகிச்சைக்கான சரியான பரிந்துரைகள் இல்லாத சூழலும் நிலவுவது புற்றுநோயால் ஏற்படும் இறப்பு குறைக்க முடியாமல் போவதற்கான காரணங்களாக சொல்லப்படுகிறது” என்று தெளிவாகவே குறிப்பிட்டுள்ளோம்.

 

“இந்தியாவில், 75 சதவீதத்திற்கும் அதிகமாக புற்றுநோய் சிகிச்சைகளுக்கான செலவுகள் சொந்த சேமிப்பிலிருந்து தான் மேற்கொள்ளப்படுகிறது. இதனை மருத்துவ மொழியில் 'பேரழிவு தரும் மருத்துவ செலவு (Catastrophic health expenditure)' என்று அழைக்கிறார்கள்.

 

இவ்வாறு புற்றுநோய் கண்டறிதலில் ஏற்படும் தாமதங்கள், கிராமப்புற மக்களும் அணுகும் வகையில் புற்றுநோய் சிகிச்சைக்கான மருத்துவ கட்டமைப்பு பரவலாக இல்லாமல் இருப்பது, அதிகமான தொகையை புற்றுநோயாளி சொந்த பணத்தில் இருந்து சிகிச்சைக்காக செலவு செய்யவேண்டிய நிர்பந்தம் ஆகியவை புற்றுநோயை இந்தியா போன்ற நாட்டில் இன்னும் கொடியதாக மாற்றிவிடுகிறது. இதனால் தான் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை