அம்பேத்கர் பெளத்த மத மாற்றத்தின் போது இரட்டமலை சீனிவாசன் கடிதம் எழுதியதாக சீமான் கூறுவது உண்மையா?
அம்பேத்கர் பெளத்த மத மாற்றத்தின் போது இரட்டமலை சீனிவாசன் கடிதம் எழுதியதாக செய்தியாளர் சந்திப்பில் சீமான் பேசியுள்ளார். இரட்டைமலை சீனிவாசன் 1945ம் ஆண்டு இறந்துவிட்ட நிலையில், 1956ல் பெளத்த மதம் மாறிய அம்பேத்கருக்கு எப்படி கடிதம் எழுத முடியும் என திமுகவினர் கேள்வி எழுப்பு வருகின்றனர். உண்மை என்னவெனப் பார்ப்போம்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய பல விஷயங்கள் தவறான தகவல்களாக இருந்துள்ளன. அத்தவறான தகவலின் உண்மையைக் கண்டறிந்து யூடர்ன் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் இரட்டைமலை சீனிவாசன் மற்றும் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் குறித்து சீமான் பேசிய வீடியோ ஒன்று திமுக மற்றும் அதன் ஆதரவாளர்களால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
அந்த வீடியோவில், “புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பௌத்தத்தைத் தழுவப் போகும்போது, நாம் இந்துவே இல்லை, எதற்கு நீங்கள் மதம் மாற இருக்கிறீர்கள்?” என இரட்டைமலை சீனிவாசன் அம்பேத்கருக்குக் கடிதம் எழுதியதாகக் குறிப்பிடுகிறார்.
அண்ணல் அம்பேத்கர் கதைகள்
— shanmugamchinnaraj (@shanmugamchin10) July 25, 2024
அம்பேத்கர் பௌத்த மதத்தை தழுவும் போது.......
ரெட்டைமலை சீனிவாசன் அம்பேத்கருக்கு கடிதம் எழுதினார்.....
அம்பேத்கர் பௌத்த மதத்தை தழுவிய ஆண்டு 1956...
ரெட்டைமலை சீனிவாசன் இறந்தது 1945
இறந்த ஒருவர் 11 ஆண்டுகளுக்கு பின் உயிருடன் வந்து கடிதம் எழுதிய அதிசயம் pic.twitter.com/OlfeVmuBEz
இந்த வீடியோவை பகிரும் திமுகவினர், “அம்பேத்கர் பௌத்த மதத்தைத் தழுவிய ஆண்டு 1956… ரெட்டைமலை சீனிவாசன் இறந்தது 1945. இறந்த ஒருவர் 11 ஆண்டுகளுக்கு பின் உயிருடன் வந்து கடிதம் எழுதிய அதிசயம்” என்று சீமான் சொன்னது பொய் என விமர்சித்து வருகின்றனர். இதே தகவலை 2021ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் ராஜீவ் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் அக்டோபர் 14, 1956 பௌத்த மதத்திற்கு மாறினார். அக்காலகட்டத்தில் இரட்டைமலை சீனிவாசன் உயிருடன் இல்லை. அவர் செப்டம்பர் 18, 1945 இறந்துவிட்டார்.
அம்பேத்கர் பௌத்த மதம் மாறுவதற்கு சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னரே “நான் இந்துவாகச் சாகமாட்டேன்” எனத் வெளிப்படையாக அறிவித்தார். அப்படி அறிவிக்கப்பட்ட காலத்தில் இரட்டைமலை சீனிவாசன் ஏதேனும் கருத்து அல்லது அம்பேத்கருக்குக் கடிதம் எழுதினாரா எனத் தேடினோம்.
கோ.ரகுபதி எழுதிய ‘இரட்டைமலை சீனிவாசனின் மத நிலைப்பாடு’ என்ற புத்தகத்தில், இந்து மதத்தை உதறிவிட்டு வேறு மதத்தைத் தழுவ வேண்டுமென அம்பேத்கர் அறிவித்தபோது "இந்துக்கள் அனுசரிக்கும் நாலு வர்ணங்களிலொன்றிலேனும் சேர்ந்திராததால் தாழ்த்தப்பட்டோர் இந்துக்கள் அடக்கத்திலில்லை" என இரட்டைமலை சீனிவாசன் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இரட்டைமலை சீனிவாசன் பற்றி அண்ணாமலை பல்கலைக்கழக வரலாற்றுத்துறை முனைவர் பட்ட ஆய்வு மாணவர் அருணா எழுதி IJRAR (International Journal of Research and Analytical Reviews) வெளியிட்ட கட்டுரையிலும் இதே தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. இது Dr.Swapna H. Samel எழுதிய ’Dalit Movement in South India (1851-1950)’ என்ற நூலிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளதாக அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கொண்டு இரட்டைமலை சீனிவாசன் எழுதிய ’ஜீவிய சரித்திர சுருக்கம்’ நூலிலும் ’மதமாற்றம்’ என்ற தலைப்பின் கீழ் இதே தகவல் பதிவாகியுள்ளதைக் காண முடிகிறது.
அதில், “இந்துக்கள் அடக்கத்தினின்று தாழ்த்தப்பட்டோர் மதமாறவேண்டுமென்று டாக்டர் அம்பேத்கர் பஹிரங்கமாய் பிரஸ்தாபித்தபோது தாழ்த்தப்பட்டார் இந்துக்கள் அடக்கத்திலில்லை, தாங்களிருக்கும் மதத்திலிருந்து கொண்டே ஆன்மையான வீரத்துவத்துடன் முன்னேறவேண்டுமென்று உடனே தந்தி மூலமாக பிரஸ்தாபித்தேன். இந்துக்கள் அனுசரிக்கும் நாலு வர்ணங்களிலொன்றிலேனும் சேர்ந்திராததால் தாழ்த்தப்பட்டோர் இந்துக்கள் அடக்கத்திலில்லை என்பது வெளிப்படை” என்று கூறியுள்ளார். 
இரட்டைமலை சீனிவாசனின் இந்த கருத்து அம்பேத்கர் பௌத்த மத மாற்றத்தின் போது தெரிவித்தது கிடையாது. தலித் மக்கள் இந்து மதத்திலிருந்து மதம் மாற வேண்டும் என முதன்முதலில் அறிவித்தபோது வெளிப்படுத்திய கருத்தாகும்.