மனிதனின் பரிணாம வளர்ச்சி: புதிய வெளிச்சங்கள்!
ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து இடம்பெயர்ந்து சென்ற இந்த மனித மரபினங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் இணைந்து வாழ்ந்து மரபணு பரிமாற்றங்கள் (Genetic Exchange) நடந்துள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் Nature, Science ஆகிய ஆய்விதழ்களில் வெளியான இரண்டு ஆய்வுகள், நியாண்டர்தால் (Neanderthals) மனிதர்களுக்கும் நவீன மனிதர்களுக்கும் (Homo sapiens) இடையிலான தொடர்புகள் பற்றி பேசியிருக்கிறது. இந்த இரண்டு மரபினங்களும் (Species) பூமியில் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தது மட்டுமல்ல, இவைகளுக்கு இடையிலான மிக நெருக்கமான இணைப்பும் அதன் விளைவாக நியாண்டர்தால் மனிதர்களின் மரபணுக்கள் நவீன மனிதர்களின் மரபணுக்களில் உட்புதைந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு மனித மரபினங்களுக்கு இடையிலான இந்த மரபணுக் கலப்பு என்பது தோராயமாக 50,000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்கக்கூடும் என்றும், மேலும் இந்த மரபினக் கலப்பு (Inter breed) என்பது ஒரு நிகழ்முறையாக தொடர்ந்து 6000 ஆண்டுகள் நடந்திருக்க வேண்டுமென்று சொல்லப்படுகிறது.
குரங்கிலிருந்து மனிதனாக பரிணாம வளர்ச்சியடைந்த போக்கு ஆப்பிரிக்க கண்டத்தில் தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இன்றைய காலத்தில் வாழும் நவீன மனிதர்கள் குரங்கிலிருந்து நேரடியாக பரிணாம வளர்ச்சி பெற்று விடவில்லை. பல்வெறு இடைக்கட்ட நிலைகளை கடந்துதான் இன்றைய நவீன மனிதன் உருவாக்கியுள்ளான்.

1.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் வாழ்ந்த இன்றுள்ள நவீன மனித மரபினத்தின் மூதாதை (Archaic Species) முதன் முதலில் ஆப்பிரிக்க நிலத்தை விட்டு இடம்பெயர்ந்து ஆசிய, ஐரோப்பிய கண்டங்களுக்கு சென்றனர். ஆனால், ஆப்பிரிக்க கண்டத்தை விட்டு வெளியேறாமல் அங்கேயே தங்கியிருந்த Homo erectus மரபினத்தை சேர்ந்தவர்கள் தான் Homo sapiens என்று சொல்லக்கூடிய நவீன மனிதர்களாக பரிணாம வளர்ச்சி பெற்றனர். அதேவேளையில், ஐரோப்பிய கண்டத்திற்கு இடம் பெயர்ந்தவர்கள் Homo neanderthalensis என்ற மரபினமாகவும், ஆசிய கண்டத்திற்கு இடம் பெயர்ந்தவர்கள் Homo denisovans என்ற மரபினமாகவும் வளர்ச்சி பெற்றனர். இந்த மனித மரபினங்களை அறிவியலாளர்கள் நவீன மனிதர்களின் பரிணாம பங்காளிகள் (Evolutionary Cousins) என்று அழைக்கிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட மரபினத்திலிருந்து மற்றொரு மரபினத்திற்கு மரபணு பறிமாற்றம் நடப்பது Introgression என்று அழைக்கப்படும். அதன்படி, Neanderthals, Denisovans ஆகிய மரபினங்களுடன் மட்டுமல்ல, தற்போது புதைபடிமம் (fossil) ஆதாரம் கூட கிடைக்காமல் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அழிந்துபோன ‘Ghost Species’ என்று சொல்லப்படக்கூடிய மரபினங்களுடனும் நவீன மனிதர்களுக்கு கலப்பு ஏற்பட்டிருப்பது இந்த ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சுருக்கமாக சொல்லவேண்டுமானல், நவீன மனித மரபினத்தின் மூதாதை ஆப்பிரிக்க கண்டத்தைவிட்டு வெளியேறி Neanderthals, Denisovans ஆகிய மரபினங்களாக பரிணாம வளர்ச்சி பெற்றனர். அதன் கூடவை தற்போது புதைபடிமம் கூட கிடைக்காத அழிந்துபோன (Extinct) வேறொரு மரபினமாகவும் பரிணமித்திருக்கூடும். இந்த புதைபடிமம் கிடைக்காத மரபினம் Neanderthals, Denisovans, sapiens போன்ற மரபினங்களைவிட பழைமையானதாகும். அதாவது இவர்களுக்கும் மூதாதை இந்த புதைபடிமம் கண்டுபிடிக்கப்படாத மரபினம்.
ஆனால், மூதாதை மரபினம் பரிணாம வளர்ச்சி அடைந்து புதிய மரபினமாக உருவான உடன் இந்த மூதாதை மரபினம் அழிந்துவிடுவதில்லை. அதுவும் இந்த புதிய மரபினங்களும் ஒன்றாக கலந்து வாழ்ந்து, அவற்றிக்குள் மரபணு பறிமாற்றங்கள் செய்துகொள்கின்றன. இந்த கோட்பாடு இந்த ஆய்வின் மூலமாக திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதனால்தான், பரிணாம வளர்ச்சி ஒரே நேர்கோட்டுப் பாதையில் நடந்துவிடவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். பல்வேறு மரபினங்கள் (புதியவையும், மூதாதைகளும்) சேர்ந்து வாழ்ந்து மரபணு பறிமாற்றங்கள் செய்து பலகட்டங்களைக் கடந்து தற்போது உள்ள நவீன மனிதனாக உருவாகியிருக்கிறோம்.
பொன்டஸ் ஸ்கோக்லண்ட் என்ற மரபியல் நிபுணர், 'ஒன்றுக்கொன்று தொடர்புடைய மரபினங்கள் எளிய இடப்பெயர்ச்சியின் மூலமாக பிரிந்து விடுகின்றன என்ற எண்ணத்தை நாம் கைவிடும் திசையில் சென்று கொண்டிருக்கிறோம்' என்கிறார். அதாவது, இடம்பெயர்ந்து சென்ற இந்த மனித மரபினங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் இணைந்து வாழ்ந்திருக்கின்றனர். இவைகளுக்கு இடையில் புணர்ச்சி உறவு (Mating) நடந்து மரபணு பரிமாற்றங்களும் (Genetic Exchange) நடைபெற்றிருக்கின்றன.
இந்த ஆய்வுகள் ஐரோப்பாவில் பரவி வாழ்ந்த நியாண்டர்தால் (Neanderthals) மனிதர்களுக்கும் நவீன மனிதர்களுக்கும் (Homo sapiens) ஊடாட்டம் நிகழ்ந்துள்ளதை பெய்ப்பித்தாலும், அதேபோல ஆசிய கண்டத்தில் பரவி வாழ்ந்து Denisovans மரபினத்துடன் நவீன மனிதர்கள் மரபணு ஊடாட்டம் கொண்டது பற்றி தெளிவாக நிறுவமுடியவில்லை. ஏனெனில், ஆசிய கண்டத்தில் அவ்வளவாக புதைபடிம ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
மேற்கண்ட ஆய்வுகள், நவீன மனிதன் பரிணாம வளர்ச்சியடைந்த சிக்கலாக நிகழ்முறையை விளக்குவதாக உள்ளது.