YouTurn

அண்ணாமலையும் அவர்தம் சமீபத்திய பொய்களும்!

புதிய கல்விக் கொள்கை பற்றி முதல்வர் ஸ்டாலின் பேசிய பொய்கள் என்று அண்ணாமலை சொல்வதன் உண்மைத்தன்மையை நாம் பகுப்பாய்வு செய்தபோது அண்ணாமலை தான் பொய்களை பரப்புகிறார் என்பதை கண்டுகொள்ள முடிகிறது.

அண்ணாமலையும் அவர்தம் சமீபத்திய பொய்களும்!

கடந்த மார்ச் 11ஆம் தேதியன்று செங்கல்பட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறப்புரை ஆற்றிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், புதிய கல்விக்கொள்கை, மும்மொழிக் கொள்கை ஆகியவை பற்றியும் பேசினார். அப்படி ஸ்டாலின் புதிய கல்விக்கொள்கை பற்றிப் பேசிய 2 நிமிடங்களில், அவர் 10 பொய்களைச் சொன்னதாகவும், ஸ்டாலின் ஒரு பிறவிப் பொய்யர் என்றும் பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ ’எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார். 


புதிய கல்விக் கொள்கை பற்றி முதல்வர் ஸ்டாலின் பேசிய பொய்கள் என்று அண்ணாமலை சொல்வதன் உண்மைத்தன்மையை  நாம் பகுப்பாய்வு செய்தபோது அண்ணாமலை தான் பொய்களை பரப்புகிறார் என்பதை கண்டுகொள்ள முடிகிறது.


பொய் 1: மும்மொழிக் கொள்கையை, இந்தி சமஸ்கிருதத்தை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதியை ஒன்றிய அரசு விடுவிக்கும் என்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரிதான் சொல்லவில்லை.


உண்மை: வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமத்தின் தொடக்க விழாவின்போது செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாடு மாநில அரசு தேசிய கல்விக் கொள்கை - 2020(NEP)யை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் வரை, சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் நிதி விடுவிக்கப்படாது என்று திட்டவட்டமாகக் கூறினார் என்பதற்கான செய்தி ஆதாரங்கள் இருக்கிறது. 



பொய் 2: இடைநிற்றலை இல்லாமல் ஒழிப்பதே NEP-ன் முதன்மை நோக்கம். 


உண்மை:  தேசிய கல்விக் கொள்கையின் 11.9 பிரிவில், சமூக பொருளாதார ரீதியில் நலிவுற்ற மாணவர்களுக்கு முறை சார்ந்த (Formal) கல்வி முறையுடன் முறை சாராத (Informal) கல்வி முறைகளை கைக்கொள்ளுவது; தேசியத் திறந்தநிலைப் பள்ளிக்கல்வி நிறுவனம் (NIOS) மற்றும் மாநில திறந்தநிலைப் பள்ளிக்கல்வி நிறுவனங்கள் (SIOS) ஆகியவற்றை அமைப்பது ஆகியவை பற்றிக் குறிப்பிடப்படுகிறது. மாணவர்களைப் பள்ளிகளுக்குக் கொண்டுவர முயற்சி செய்யாமல், அவர்களுக்குப் பள்ளிப் பருவத்திலே முறை சாராத மற்றும் தொலைதூர கல்வியை அறிமுகப்படுத்துவது அவர்களைப் பள்ளியிலிருந்து விலக்கிவைக்கவே வழி செய்வதாக இருக்கும். 


மேலும், தேசிய கல்விக் கொள்கையின் 11.9 பிரிவில், 3 அல்லது 4 ஆண்டுக் கால அளவில் உள்ள இளநிலைப் பட்டப் படிப்பில், மாணவர்கள் பல்வகையில் வெளியேற வழிவகை செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இளநிலைப் பட்டப்படிப்பில் ஓராண்டு மட்டும் படித்தால் சான்றிதழ், இரண்டு ஆண்டுகள் படிப்பிற்குப் பின்பு ஒரு பட்டயம், மூன்றாண்டு படிப்பிற்குப் பின்பு ஓர் இளநிலைப் பட்டம் என மாணவர்களைத் தரம் பிரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 


இது சமூக பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள மாணவர்கள் குறிப்பாகப் பெண்கள் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து நிலையான கல்வி பெறுவதைப் பாதிக்கும் வகையில் உள்ளது. 


image.png


பொய் 3: NEP-ல் பள்ளிக்கல்வி தனியார்மயம் பற்றி எந்த குறிப்பும் இல்லை.


உண்மை: தேசிய கல்விக் கொள்கையின் 3.6 பிரிவில், ’அரசாங்கமும் அறக்கொடை நிறுவனங்களும் பள்ளிகளை நடத்துவதை எளிமையாக்கப் பள்ளிகளைக் கட்டமைத்து நடத்துவதற்கான ஒழுங்குமுறை தேவைகள் எளிமைப்படுத்தப்படும் என்றும் அரசும் அரசு சாரா அறக்கொடை நிறுவனங்களும் இணைந்து நடத்தும் பிற மாதிரிப் பள்ளிகளும் செயல்படுத்தப்படும்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் உள்ளூர் சமூகம் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆகியோரின் தன்னார்வ பங்களிப்பு ஊக்குவிக்கப்படுகிறது. இது அரசுப் பள்ளிகளுக்காக முதலீடுகளைக் குறைத்துக் கொண்டு பள்ளிக்கல்வியை தனியார்மயப்படுத்தும் திசையை நோக்கிய நகர்வாகும். 


பொய்  4  : பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் மாணவர்களின் தனிப்பட்ட விருப்பங்கள், திறமைகளின் அடிப்படையில் குழந்தைகளுக்கு வழிகாட்டுவதற்காக நடத்தப்படுகிறது.

 

உண்மை: தேசிய கல்விக் கொள்கையின் பிரிவு 4.42-ல் ’பட்டப்படிப்பிற்கும் உதவித்தொகை பெறுவதற்கும் தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் நுழைவுத் தேர்வுகள் சிறந்ததாக இருக்குமென்றும் அதன் மூலமாக மாணவர்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் முழுக் கல்வி அமைப்புமுறையின் மீதான சுமை பெருமளவு குறையும் என்றும் சொல்லிவிட்டு, தேசிய தேர்வு முகமையின் மதிப்பீடுகளை மாணவர் சேர்க்கைக்காகப் பயன்படுத்துவது தனிப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் விடப்படுகிறது’ என்று சொல்லப்படுகிறது. எனவே, ஒரு மாணவன் இருவகையான நுழைவுத் தேர்வுக்குத் தயாராவதைத்தான் மாணவர்களின் சுமை குறைக்கும் கல்விக் கொள்கை என்று பொய் சொல்லிவருகின்றனர். 


image.png


பொய் 5: குழந்தைகள் கற்றுக்கொள்ளும் மூன்று மொழிகளை மாநிலங்களே தேர்வு செய்யும்.


உண்மை:  தேசிய கல்விக் கொள்கையின் படி, மாணவர்கள் மூன்று மொழிகளைப் படிக்க வேண்டும். அதில் முதல் மொழி அந்தந்த மாநிலத்தின் சொந்த மொழி அல்லது வட்டார மொழி; இரண்டாவது மொழி ஆங்கிலம்; மூன்றாவது மொழி ஏதேனும் ஒரு இந்திய மொழி என்று குறிப்பிடப்படுகிறது. 


ஆனால், பல கல்வியாளர்கள் இது குறித்துப் பேசும் போது, மூன்றாவது மொழி என்பது கடைசியில் இந்தி மொழியாகவே இருக்கும் என்று எச்சரிக்கிறார்கள். 


இந்தி, சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளுக்கு ஒதுக்கப்படுவது  போன்று நிதியும் ஆசிரியர்களும் கட்டமைப்புகளும் மற்ற மொழிகளுக்கு வழங்கப்படுவது இல்லை. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா போன்ற மொழிகள் அனைத்துக்கும் வழங்கியதை விட 22 மடங்கு அதிகமான நிதியை சமஸ்கிருதத்திற்கு மட்டுமே வழங்கியுள்ளது ஒன்றிய அரசு. பொதுவாக சமஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிகளுக்கு மற்ற மொழிகளைவிட அதிகமாக நிதி ஒதுக்கப்படுவது பற்றிய பல செய்தி ஆதாரங்கள் உள்ளன. இதனால் இறுதியில் மாணவர்கள் இந்தி மொழி கற்கும்படி கட்டாயப்படுத்தப்படுவார்கள் என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.


பொய் 6: கல்வியில் மதவாதம் புகுத்தப்படுவதாகச் சொல்லப்படுவது பொய்ப் பிரச்சாரம். 


உண்மை: CBSE பாடப் புத்தகத்தில் இஸ்லாமியப் பேரரசுகளின் எழுச்சி, முகலாயர் பற்றிய வரலாறு ஆகியவற்றைத் திருத்தி எழுதியிருக்கிறது பாஜக அரசு. ஃபைஸ் அகமது ஃபைஸின் கவிதைகளின் ஒரு பகுதியும் நீக்கப்பட்டிருக்கிறது. 


‘காலனிய மனநிலையை விட்டொழிக்க வேண்டும்’ ’பாரம்பரிய கல்வி அறிவை மீட்பது’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி இந்தியாவின் வரலாற்றைத் திருத்தி எழுத முயற்சிகள் நடந்துவருகிறது. ‘இந்தியமயமான’ ஒரு வரலாற்றையும் கல்வி முறையையும் உருவாக்கவது, கல்வியை ‘காவிமயமாக்குவதையே’ நோக்கமாகக் கொண்டு வேலை செய்து வருகிறது பாஜக. முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளிப்படையாகவே கல்வியை ’காவிமயமாக்குவது’ பற்றிப் பேசியுள்ளார். 

 

image.png


இதிலிருந்து தொடர்ந்து பொய் பேசுவது அண்ணாமலைதான் என்பது நிரூபணமாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை