RCD கருவிகள் என்றால் என்ன? அதனை TANGEDCO கட்டாயமாக்கியுள்ளது ஏன்?
மின்கசிவினால் ஏற்படும் சேதங்களை தவிர்க்க, அனைத்து மின் இணைப்புகளுக்கும் RCD கருவிகளை கட்டாயமாக்கியுள்ளது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்.
மின்கசிவு காரணமாக ஏற்படும் உயிர்பலிகளை தடுப்பதற்கு மின் இணைப்புகளில் RCD என்ற கருவியை பொறுத்துமாறு விழிப்புணர்வுச் செய்தியை ’தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO)’ தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளக் கணக்கில் வெளியிட்டிருந்தது.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC), அனைத்து மின்சார இணைப்புகளிலும் ‘Residual Current Device (RCD)’ என்னும் கருவியை பொருத்துவதை கட்டாயமாக்கியுள்ளதாக 05-07-2021 அன்றே செய்திக்குறிப்பு வெளியிட்டிருந்தது. இருப்பினும், இன்னும் இதுபற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இல்லை. ஆகையால், இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறது.
மூன்றாண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பின்படி, வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், பூங்காக்கள், பள்ளி கல்லூரிகள் போன்ற அனைத்து இடங்களிலும், அவை ஒரு முனை அல்லது மும்முனை மின்சார இணைப்புகளாக இருந்தாலும் 30 மில்லி ஆம்பியர் (30mA) மின்கசிவு உணர்திறன் கொண்ட RCD கருவி கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும். இதனால், மின் அதிர்ச்சியை (Electric Shock) தடுத்து உயிர்களை காக்க முடியும்.
அதுவே 10 கிலோ வாட்டிற்கும் (KW) மேல் சாதனங்கள் இருக்கும் பேரங்காடிகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றில் மின் கசிவினால் ஏற்படும் தீ விபத்தை (Electric Fire) தடுக்கும் வகையில் 300 மில்லி ஆம்பியர் (300mA) உணர்திறன் கொண்ட RCD கருவி பொருத்தப்படவேண்டும்.
இந்த RCD கருவிகள் மின் பளுவின் அளவு, கட்டிடங்களின் பயன்பாடு ஆகியவற்றை கருத்தில்கொண்டு ஒவ்வொரு தனித்தனி மின்சுற்றுகளிலும் பொருத்தப்படவேண்டும்.
புதிதாக மின் இணைப்பு கோருபவர்கள் RCD கருவிகளை பொருத்தவில்லை என்றால் மின் இணைப்பு வழங்கப்படாது என்றும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
RCD கருவி எப்படி வேலை செய்கிறது?
நாம் வழக்கமாக பயன்படுத்தும் மின்சார சாதனங்களில் மூன்று கம்பிகள் இருக்கும். நாம் மின்சார சுவிட்சைப் போடும்போது, மின்சாரம் நேர்கம்பி (Live wire) வழியாக பாய்ந்து சாதனங்களை இயக்கும். அதே மின்சாரம் நடுநிலை கம்பி (Neutral) வழியாக திடும்பப் பாய்ந்து அந்த மின்சுற்றை (Circuit) நிறைவு செய்யும். இதுதான் இயல்பான மின் சுற்று.
RCD கருவி நேர் மற்றும் நடுநிலை கம்பி வழியாக பயணிக்கும் மின்சாரம் ஒரே அளவுள்ளதாக இருக்கிறதா என்பதை சோதனை செய்யும். சிறிதளவு மின்சாரம் நடுநிலை கம்பிக்கு மாறாக எர்த் கம்பி (Earth wire) வழியாக பாய்ந்தால், நேர் கம்பியில் பாயும் மின்சாரத்திற்கும் நடுநிலை கம்பியில் பாயும் மின்சாரத்திற்கு இடையிலுள்ள அளவு மாற்றத்தை RCD கருவி உணர்ந்துகொள்ளும். அது உடனடியாக மின்சுற்றை முடக்கி மின் அதிர்ச்சி ஏற்படாமல் தடுக்கும்.
மின் கசிவினால் மனித உயிர்கள் பலியாவதை தடுக்கவும், சொத்துக்கள் சேதமாவதை தடுக்கவும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் RCD கருவியை மின் இணைப்பிற்கு கட்டாயமாக்கி, அதனைப் பற்றி விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.