YouTurn

தூக்கமின்மையால் ஏற்படும் பிரச்சனைகள்! Global Sleep Survey 2025 !

உலகளவில் 13 நாடுகளைச் சேர்ந்த 30,026 மக்களிடம் தூக்கம் பற்றிய கருத்துக் கேட்பை நடத்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

தூக்கமின்மையால் ஏற்படும் பிரச்சனைகள்! Global Sleep Survey 2025 !

மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கும், உறவுகளுடன் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் நல்ல தூக்கம் அவசியமான ஒன்று. ஆனால், உலகில் கோடிக்கணக்கான மக்கள் மன அழுத்தம் (stress), பதட்டம், அமைதியின்மை ஆகியவற்றின் காரணமாக இரவு நேரங்களில் சரியான தூக்கம் இல்லாமல் இருக்கிறார்கள். இந்நிலையில் ’Resmed’ என்ற நிறுவனம் உலகளவில் 13 நாடுகளைச் சேர்ந்த 30,026 மக்களிடம் தூக்கம் பற்றிய கருத்துக் கேட்பை நடத்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் சரியான தூக்கமில்லாமல் (poor sleep) அவதிப்படுவதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.


image.png


‘அமெரிக்க தூக்க மருத்துவ அகாடமி’யின் அறிவுறுத்தலின்படி, பெரும்பாலான மக்கள் குறைந்தபட்சம் 7 மணிநேரம் உறங்கினாலும், அந்த உறக்கம் திருப்திகரமானதாக இல்லை என்று மக்கள் தெரிவிக்கிறார்கள். அவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் தங்களுக்கு சரியான தூக்கமும் ஓய்வும் இல்லை என்ற உணர்வுடனே வாழ்வதாக சொல்கிறார்கள்.


இந்த கருத்துக் கேட்பில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் சரியான தூக்கம் இல்லாமல் இருப்பதற்காக வெவ்வேறு காரணங்களை முன்வைத்தார்கள். அதில் 57 சதவீத மன அழுத்தத்தை காரணமாக குறிப்பிட்டிருக்கிறார்கள். மேலும் இந்தியாவில் 69 சதவீத நபர்கள் மன அழுத்தம் காரணமாக சரியான தூக்கமில்லாமல் (poor sleep) இருப்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது. 

image.png

சமூக வலைத்தளங்கள் சமூக அழுத்தத்தை பெருக்குகிறது. இதனால் சமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்துபவர்கள் சரியான தூக்கத்தை இழக்கும் அபாயமிருப்பதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 


உலகளவில் 46 சதவீத நபர்கள் பதற்றம் காரணமாக சரியான உறக்கமில்லாமல் இருக்கிறார்கள். அதிலும் Gen Z தலைமுறையில் அதிகமானோர், தூக்கமின்மைக்கான காரணமாக பதற்றத்தை குறிப்பிடுகிறார்கள். மேலும், பொருளாதார நெருக்கடி, மனநலப் பிரச்சனைகள், குடும்பம் அல்லது உறவுகளில் உள்ள சிக்கல் காரணமாகவும் சரியான தூக்கமில்லாமல் இருப்பதாக குறிப்பிடுகிறார்கள். 


தூக்கம் என்பது நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் மிக முக்கியமான தாக்கம் செலுத்துவதாக இருக்கிறது. சரியான தூக்கம் இல்லாமல் போவது, உடல் மற்றும் மனநலத்தில் அடுக்கடுக்கான தொடர் விளைவுகள் ஏற்படுத்தும். ஆறு மணிநேரம் அல்லது அதற்கும் குறைவான நேரம் தூங்குவதால், மன உளைச்சலால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பிருப்பதாகவும், விபத்துகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், நீரிழிவு நோய் மற்றும் இதயக் கோளாறு ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.

image.png

ஆறு மணிநேரம் அல்லது அதற்கும் குறைவான நேரம் தூங்குவதால் அறிவாற்றல் திறனில் தேய்வு ஏற்படுவதாக 'அமெரிக்கவின் தூக்க மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்' கண்டறிந்துள்ளது. சரியான தூக்கம் இல்லாத காரணத்தால் பணியாளர்களின் பணித்திறன் குறைவதோடு, அவர்கள் பணியிடங்களுக்கு வருவதையே தவிர்க்கிறார்கள் (absenteeism) என்று இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 


நன்றாக வேலை செய்வதற்கு நல்ல தூக்கம் அவசியமாக இருந்தாலும் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்கள் தங்களது தூக்கத்தை பற்றிய அக்கறை இல்லாமல் நடந்துகொள்வதாக பணியாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த கருத்துக் கேட்பில் பங்கேற்றவர்களில் 71 சதவீத நபர்கள் சரியாக தூக்கமில்லாத காரணத்திற்காக ஒருமுறையேனும் நோய்வாய் பட்டிருப்பதாக குறிப்பிடுகிறார்கள். 


சரியான தூக்கம் இல்லாததால், பகல் வேளையில் அதிகமாக தூக்கம் வருவது, மோசமான மனநிலை, அதிக எரிச்சலுடன் இருப்பது, கவனம் செலுத்த முடியாமல் போவது, தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதேவேளையில் நன்றாக தூங்கி எழுவதால், நல்ல மனநிலை, நல்ல கவனம், பணித்திறன் அதிகரிப்பு ஆகிய நல்ல விளைவுகள் ஏற்படுவதாக இந்த கருத்துக் கேட்பில் பங்கேற்ற நபர்கள் குறிப்பிடுகிறார்கள். 

image.png

இந்த தூக்கம் பற்றிய பிரச்சினை ஆண்களைவிட பெண்களுக்கு இன்னும் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அறிக்கை குறிப்பிடுகிறது. ஆண்கள் வாரத்தில் 4.13 நாட்கள் நல்ல தூக்கத்தை அனுபவிக்கிறார்கள் என்றால், பெண்கள் மத்தியில் இது 3.83 நாட்களாகவே உள்ளது. பெண்கள் இயல்பாகவே ஒரேநேரத்தில் பல்வேறு வேலைகளைச் செய்யக்கூடியவர்களாக (multitasking) இருப்பதால், அவர்களுக்கு ஆண்களைவிட அதிக தூக்கம் தேவைப்படும். ஆனால், பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன்கள் மாற்றம், மாதவிடாய், கற்பகாலம், 50 வயதிற்கு மேல் மாதவிடாய் நிற்பது (menopause) ஆகிய காரணங்களால் பெண்களின் தூக்கத்திற்கு இடையூறுகள் ஏற்படுவதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 


தூக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், தூக்கத்தை சீர்செய்ய நாம் முதலில் தூங்கும் நேரத்தைக் கணக்கிடவேண்டும் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. கடிகாரம், ஸ்மார்ட் போன் செயலிகள் மூலமாக ஒவ்வொரு நாளும் தூங்கும் நேரத்தை கணக்கிடுகிறார்கள். இந்தியாவில் கூட 53 சதவீதம் நபர்கள் ஸ்மார்ட் போன் செயலிகள் பயன்படுத்தி தூக்கத்தை கணக்கிட்டு கண்காணிக்கிறார்கள். இவ்வாறு கணக்கிடும் போது, நாம் தூங்குவதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் நம்மால் கண்டுகொள்ள முடியும். ஒன்றை கண்டறிவதன் மூலமாகவே அதனைச் சரிசெய்ய முடியும் என்று இந்த அறிக்கை வலியுறுத்துகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை